நியாயமற்ற வர்த்தகத்தை அமெரிக்கா பொறுக்காது: டிரம்ப்

“கொள்ளையடிக்கும்” வர்த்தக நடைமுறைகளை, நியாயமற்ற வர்த்தகத்தை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது என்று டாவோஸில் நடக்கும் உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்த கொள்ளையடிக்கும் நடைமுறைகள் சந்தைகளை சிதைந்துவிட்டதாக கூறும் டிரம்ப், இதை இனியும் அமெரிக்கா “கண்டுகொள்ளாமல் இருக்காது” என்று தெரிவித்தார்.

‘அமெரிக்காவே முதலில்’ என்ற தனது வர்த்தக கொள்கை அமெரிக்காவுக்கு மட்டுமானதல்ல என்றும், “அமெரிக்கா வர்த்தகத்திற்காக திறந்திருக்கிறது” என்றும் வர்த்தக மற்றும் அரசியல் தலைவர்கள் அடங்கிய அந்தக் கூட்டத்தில் பேசிய டிரம்ப் கூறினார்.

உள்ளூர் உற்பத்தியாளர்களை வெளிநாட்டு போட்டியிலிருந்து பாதுகாக்கும் நோக்கம் கொண்ட ‘அமெரிக்காவே முதலில்’ என்ற டிரம்பின் வர்த்தக கொள்கையானது, உலகமயமாக்கல் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் இந்த மாநாட்டின் நோக்கத்திற்கு முரணாக இருப்பதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

தனது தலைமையிலான அரசின் முதல் ஆண்டின் பொருளாதார சாதனைகளை பெருமிதமாக பட்டியலிட்ட அமெரிக்க அதிபர், மாநகராட்சி வரி குறைப்பு, வேலையின்மை விகிதத்தை குறைத்தது, முன்பு எப்போதையும்விட தனது அரசு அந்நிய முதலீட்டை அதிகமாக பெற்றுள்து ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.

ஒரு எளிய செய்தியை வழங்குவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன் என்று கூறிய டிரம்ப், “அமெரிக்காவில் வேலை செய்ய, அதை கட்டியெழுப்ப, அங்கு முதலீடு செய்வதற்கு இது மிகவும் பொருத்தமான நேரம். அமெரிக்கா வர்த்தகத்திற்காக திறந்திருக்கிறது, நாங்கள் மீண்டும் போட்டி போடுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

டிரம்ப் மாநாட்டில் பேசிக்கொண்டிருந்தபோது, அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கான சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன. அதில் கடந்த ஆண்டிற்கான இறுதி காலாண்டில் அமெரிக்காவின் வளர்ச்சி 3.2% என்பதில் இருந்து 2.6% என சரிந்துள்ளது.

எனவே, 2017 ஆம் ஆண்டு வளர்ச்சி விகிதம் 2.3% ஆக உள்ளது. இது 2016 ஆம் ஆண்டின் 1.5% வளர்ச்சியைவிட இது அதிகம் என்றாலும், டிரம்ப்பின் 3% என்ற இலக்கை விட குறைவானது.

“நியாயமான மற்றும் பரஸ்பரத்தன்மை கொண்ட” சீர்திருத்தப்பட்ட சர்வதேச வர்த்தக முறை தேவை என்ற கோரிக்கையை முன்வைத்த டிரம்ப், தொழிற்துறைக்கு அரசு உதவி வழங்கும் என்று கூறினார். மேலும், “பெரிய அளவிலான அறிவார்ந்த சொத்து திருட்டு” உட்பட நியாயமற்ற நடைமுறைகளை அடையாளம் தெரியாத நாடுகள் மேற்கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பசிபிக் நாடுகளுடனான கூட்டமைப்பில் இருந்து வெளியேறியிருக்கும் அமெரிக்க அதிபர், அந்த நாடுகள் உட்பட, பிற நாடுகளுடன் நியாயமான இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கு நலம் பயப்பதாக இருந்தால், பசிபிக் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கலாம் என்று தெரிவித்தார்.

மாநாட்டில் பேசிய பிறகு, கேள்வி-பதில் அமர்வில் பேசிய டிரம்ப், ஊடகங்களை தாக்கிப்பேசியதோடு, ஊடகங்கள் போலிச் செய்திகளை வெளியிடுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டியதற்கு மாநாட்டில் கலந்து கொண்ட பலர் எதிர்மறையாக கருத்து தெரிவித்துள்ளனர்.

“ஒரு தொழிலதிபர் என்ற முறையில் பத்திரிகையாளர்கள் எப்போதும் என்னிடம் நன்றாக நடந்துக் கொண்டார்கள்… நான் ஒரு அரசியல்வாதி ஆன பிறகு, ஊடகங்கள் எவ்வளவு மோசமாக, சுயநலமாக, கொடூரமாக, போலிச் செய்திகளை எப்படி வெளியிடும் என்பதையும் உணர்ந்தேன்” என்று அவர் கூறினார்.

President Trump's speech was eagerly awaited

கூட்டம் நடைபெறும் பிரதான அரங்கிற்கு வியாழக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை தந்தபோது அவருக்கு மாபெரும் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

வியாழன்று பிரிட்டன் பிரதமர் தெரீசா மேயுடன் பேசிய டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சியைக் காணும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரிட்டனின் தீவிர வலதுசாரி குழுவின் டிவிட்டர் செய்திகளை தான் பகிர்ந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்க தயாராக உள்ளதாக டிரம்ப் கூறியது டிவிட்டர் செய்தி பிரச்சனையை முடித்து வைக்குமாறு இருந்தது.

இறக்குமதி செய்யப்பட்ட சலவை இயந்திரங்கள் மற்றும் சோலார் பேனல்கள் மீது 50% வரை புதிய வரியை அறிவித்த சில நாட்களுக்கு பின்னர் தற்போது டாவோஸில் அமெரிக்க அதிபரின் உரையானது, இந்த நடவடிக்கைகளில் பெரிதும் பாதிக்கப்படும் சீனா மற்றும் தென் கொரியாவின் கண்டனங்களை எழுப்பும்.

டாவோஸிற்கு சென்றிருக்கும் அமெரிக்க கருவூல செயலர் ஸ்டீவ் முச்சின், வர்த்தக நுழைவுக் கட்டணங்கள் “மேலும் அதிகரிக்கலாம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.  – BBC NEWS