ஐந்து கேள்விகள் ஐந்து பதில்கள்: எழுத்துநடை என்பது பாம்புச் சட்டை – இரா முருகன்

கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், பத்தி எழுத்து, திரைப்பட வசனம் என்று எழுத்துலகின் பல தளங்களில் தொடர்ந்து இயங்கிவருபவர் இரா.முருகன். அறிவியல் புனைகதைகளில் முத்திரை பதித்தவர். அடுத்து, மாய யதார்த்த வகைமையின் கீழ் ‘அரசூர் வம்சம்’ நாவலைப் படைத்திருக்கிறார். அவரிடம் ஒரு மின்னல் வேகப் பேட்டி.

அறிவியல் எழுத்தைக் குறைத்துக்கொண்டதாகத் தெரிகிறதே… ஏன்?

ஒரு பாம்பு சட்டையை உரிப்பதுபோல் அவ்வப்போது ஒரு எழுத்து நடை இருக்கும். இப்போது மாய யதார்த்தத்துக்குள் நுழைந்திருக்கிறேன். பெரும்பான்மையான கதைகளில் மாய யதார்த்த எழுத்தைக் கடைப்பிடிக்க விரும்புகிறேன். அதைவிட முக்கியமாக சிறுகதை என்ற வடிவத்திலிருந்து நாவல் என்ற வடிவை வந்தடைந்துவிட்டேன். தற்போது, நாவல்களில்தான் என் கவனமும் முனைப்பும் ஈர்ப்பும் இருக்கின்றன.

அறிவியல் புனைகதைகள் என்ற வகைமை, தமிழில் போதுமான வளர்ச்சி அடைந்திருக்கிறதா?

அறிவியல் புனைகதைகளுக்கென்று வாசகர்கள் இருக்கிறார்கள் என்றாலும், அது ஒரு பெரிய வட்டத்தை இன்னும் சென்றடையவில்லை. 1948-50களிலேயே பெ.நா.அப்புஸ்வாமி, எளிமை யான தமிழில் கணினி பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். நம்முடைய காலத்தில், தன்னுடைய சிறுகதைகள் மூலம் கிடைத்த வாசகர் வட்டத்தைப் பயன்படுத்தி, அவர்களுக்கு மிக எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் தன் கதைகள் மூலமாகவும் கட்டுரைகள் மூலமாகவும் அறிவியலை அறிமுகப்படுத்தி பெரிதும் வெற்றிபெற்றவர் சுஜாதா. அவரது கால்தடத்தில் அவரையும் மிஞ்சி அறிவியலை எழுதுபவர்களாக அடுத்த தலைமுறையினர் இருக்க வேண்டும். ஆனால், அது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை.

மாய யதார்த்த எழுத்து என்ற வகைமை தமிழில் எந்த அளவு பரிணமித்துள்ளது?

எல்லாவற்றுக்கும் இங்கே இடம் இருக்கிறது. இங்கு பல புதிய விஷயங்களையும் தொடங்குகிறோம். நான் மாய யதார்த்தத்தை அதிகமாக எழுதியிருக்கிறேன். எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக நான் அதிலேயே முனைப்பாக இருப்பதால், நான்கு நாவல்கள் எழுதிவிட்டேன். இப்போது மாய யதார்த்தத்திலிருந்து கொஞ்சம் விலகி சிதறுண்ட கதையாடலை (Fragmentation) அதிகம் முயற்சி செய்துபார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் எழுதிக்கொண்டிருக்கும் அடுத்த நாவலில் சிதறுண்ட கதையாடல்தான் முழுக்க இருக்கும். மாய யதார்த்தம் இருக்காது.

தங்களுக்குச் சவால் விடக்கூடிய எழுத்தாளர்கள் என்று யாரைச் சொல்வீர்கள்?

சவால் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. எல்லா எழுத்தாளர்களும் நண்பர்கள்தான். எனக்குப் பிடித்தவர்களில் முக்கியமானவர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா. தமிழ் இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதில் இவர்களுடைய பணி முக்கியமானது.

வருங்காலத் திட்டங்கள்?

வருங்காலத் திட்டம் நிறைய நாவல்கள் எழுதுவது. மீண்டும் சிறுகதைகள் எழுத வேண்டும்.

 – ச.கோபாலகிருஷ்ணன்