“வெற்றிடம்-” (Bhooter Bhobishyot) -இயக்குனர் ரிதுபர்னோ உருவாக்கிய வங்காள சினிமா

ஆவிகளின் எதிர்காலம்’ (Bhooter Bhobishyot) அந்த வங்காளப் படத்தின் தலைப்பு இதுதான். முதல் காட்சியிலிருந்தே படம் தொடங்கிவிடுகிறது. ஒரு பழங்கால மாளிகை வீடு. விளம்பரப் படம் ஒன்றை எடுக்க லொக்கேஷன் பார்க்க அங்கே வந்திருக்கிறார் ஓர் இளைஞர். வங்க சினிமாவில் இயக்குநராவது அவரின் லட்சியம். அந்த வீட்டில் நடுத்தர வயதுக்காரர் ஒருவரைச் சந்திக்கிறார். “பாரம்பரியமும் பழமையும் மிக்க கடந்தகால கல்கத்தாவின் மாளிகை வீடுகள் இடிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் வணிக வளாகங்களாகவும் மாறிக்கொண்டிருக்கின்றன.

எங்களைப் போன்ற ஆவிகளைப் பற்றி அரசு கவலைப்படுவதில்லை. ஏனென்றால், நாங்கள் நுகர்வோரும் அல்ல; வாக்காளர்களும் அல்ல. உங்களைப் போன்றவர்களும் சினிமா படப்பிடிப்பு என்று வந்துவிடுகிறீர்கள். எங்களைத் தொந்தரவு செய்கிறீர்கள். இப்படிச் செய்தால் நாங்கள் வேறு எங்கே போவது. ரியல் எஸ்டேட், கார்ப்பரேட் மாபியாக்களிடமிருந்து வரலாறு நிறைந்த இவ்வீடுகளைக் காப்பாற்றுங்கள்.” என்று கோரிக்கை வைத்த அந்த நடுத்தர வயதுக்காரர், ஓர் ஆவி.

வங்க சினிமாவின் இருவேறு முகங்கள்

ஆவிகளின் கடந்தகாலக் கதைக்குள் ஆண்டான் அடிமை வர்க்கப் போராட்டம், கல்கத்தாவை காலனி தேசத்தின் மையமாக்கிய ஆங்கில ஆதிக்கத்தின் நீட்சி, சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்ற அரசியலுக்கு இணையாக வளர்ந்த நிழலுலகம், அதை மீறி எழுந்து நிற்கும் கார்ப்பரேட் உலகம், இத்தனைக்கு நடுவிலும் உயிர்த்திருந்த வங்க சினிமா என 2012-ல் இத்திரைப்படத்தின் திரைக்கதை, வசனங்கள் வழியாக இயக்குநர் அனிக் தத்தா படத்தில் உருவாக்கிய அடுக்குகளால் ஒரு வெகுஜனத் திரைப்படம் என்பதைத் தாண்டி Bhooter Bhobishyot வெற்றிகரமான மாற்றுத் திரைப்படமாகவும் பர்வையாளர்களை வசீகரிக்கிறது.

தற்காலத்தின் இளம் இயக்குநருக்கும் சத்யஜித் ரே காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதரின் ஆவிக்குமான உரையாடல்போலத் தொடங்கி, வங்க சினிமா மற்றும் வங்க சினிமா ரசனை பற்றிய ஒரு விசாரணையை இந்தப் படம் முன்வைக்கிறது. சத்யஜித், ரித்விக், மிர்ணாள் என நினைவுகூரும் அந்த ஆவிக் கதாபாத்திரம், “இவர்கள் எல்லாம் எத்தனை அற்புதமான படங்களைத் தந்தார்கள், ஆனால், இன்று வங்க சினிமாவின் நிலை என்ன?” என்ற கேள்வியை எழுப்பினாலும் பாக்ஸ் ஆபீஸிலும் தோற்றுவிடாத சீரியஸ் திரைப்பட முயற்சிகளை அனிக் தத்தா போன்ற இளைய தலைமுறை இயக்குநர்கள் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறார்கள் என்பதை மறைமுகமாகப் பார்வையாளர்களுக்கு உணர்த்திவிடுகிறது.

அனிக் தத்தா போன்ற தற்காலத் திறமைகளுக்கு உந்து சக்தியாக தொடர்ந்து மாற்று முயற்சிகளில் ஈடுபட்டு வணிகரீதியிலும் அவற்றை வெற்றிகரமாக சாதித்துக்காட்டிய இரண்டு முக்கிய திரை ஆளுமைகள் என்று அபர்ணா சென்னையும் ரிதுபர்னோ கோஷையும் குறிப்பிடலாம்.

அபர்ணா சென் தற்கால அரசியல், அவர் அவதானிக்கும் பண்பாட்டு நகர்வுகளிலிருந்து பெண் மற்றும் ஆண் மையக் கதாபாத்திரங்களை உருவாக்குபவர். 2010-ல் இவர் இயக்கத்தில் வெளியான ‘த ஜாப்பனிஸ் ஒய்ஃப்’ மிக அரிதான காதல் திரைப்படம். வங்க கிராமம் ஒன்றில் பள்ளி ஆசிரியராக இருக்கும் இளைஞர் ஒருவர் நேரில் பார்த்திராத ஜப்பானிய பெண் ஒருவரை பேனா நட்பு மூலம் காதலித்துக் கடிதங்கள் மூலமே திருமணம் செய்துகொள்கிறார். தனது முதுமையின் கடைசி வரையிலும் அந்தத் திருமணத்துக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கிறார்.

உண்மையில் அந்தப் பெண்ணை அவர் கடைசிவரை சந்திப்பதில்லை. நீங்கள் ஒருபோதும் சந்தித்திராத ஒருவருக்கு உண்மையான அன்பை வழங்க முடியும் என்பதையும் மானுட அன்பின் மீதான தேய்ந்துவிடாத நம்பிக்கையையும் இந்தப் படம் கலையழகுடன் பேசியது. அபர்ணா சென் எனும் பெண் இயக்குநரால், ஒரு ஆணின் அன்பைப் பதிவு செய்ய முடிந்தது என்றால் பெண்களின் அகவுலகை ஓர் ஆண் இயக்குநராகத் துல்லியமாகச் சித்தரித்தவர் ரிதுபர்னோ கோஷ். இதற்கான கதைக் களங்களுக்கு அவர் தலைசாய்த்த இடம், வற்றாத இலக்கியம்.

இலக்கியத்தை விட மறுக்கும் திரை

வங்க இலக்கியத்தின் செழுமையைத் தொடர்ந்து தனக்குரிய உள்ளடக்கமாகப் பயன்படுத்திக்கொள்வதில் அறுந்துவிடாத பந்தத்துடன் வங்க மாற்று சினிமா முயற்சிகள் வெளிப்பட்டுவருகின்றன. இதற்குக் கடந்த 2013-ல் 49 வயதில் மறைந்த வங்க நவயுக மாற்று சினிமாவின் முக்கியப் படைப்பாளி ரிதுபர்னோ கோஷின் ஒரு டஜன் படங்களை உதாரணமாகக் காட்ட முடியும்.

வங்கத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஷிரிசேந்து முகோபாத்யாயவின் நாவலைக்கொண்டு இவர் எடுத்த முதல் திரைப்படம், ‘ஹிரேர் ஆங்க்தி’. தாகூரைக் குறித்து மிகச் சிறந்த ஆவணப்படம் ஒன்றை எடுத்த ரிதுபர்னோ கோஷ், தாகூரின் ‘சோக்கர் பாலி’ நாவலை அதே பெயரில் படமாக்கினார். மூல நாவலின் மையத் தன்மை சிறிதும் சிதையாமல் ஆனால், நாவல் முன்வைக்கும் நிலப்பிரபுத்துவ ஆட்சியில் அதிகார மையத்தினர் எத்தனை குரூரமாகச் செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டியது.

குரூரத்தை மட்டுப்படுத்திக் காட்ட வேண்டும் என்ற தணிக்கைச் சிந்தனையை மீறியெழும் படைப்பாகவே இந்தப் படம் வெளிப்பட்டு நின்றது. அதிகார மையத்தின் பழமைவாதம் மீதான சாடலைக் காட்சிமொழியின் முழுமையான வீச்சுடன் ரிதுபர்னோ இந்தப் படத்தில் கடத்தியிருப்பதைக் கண்டுகொள்ள முடியும்.

பெண்களின் அகவுலகை அதிகமும் காட்சிப்படுத்தத் துடிக்கும் ரிதுபர்னோ கோஷ் பற்றி, “பெண்களின் உள்ளக் கிடக்கையை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட ஆண் படைப்பாளி” என்று வங்க சினிமாவில் நடிப்பதை எப்போதும் விரும்பும் அனுபம் கெர் கூறியிருக்கிறார். சத்யஜித் ராயை மானசீகக் குருவாக ஏற்றுக்கொண்ட இவரும் ராயின் வழியில் நாவல்களையும் சிறுகதைகளையும் உலகத் திரைப்படங்களாக்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றார்.

ரிதுபர்னோவின் மற்றொரு படைப்பான ‘ஷோப் சரித்ரோ கல்போனிக்’ 2009-ல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், கான் உட்படப் பல சர்வதேசப் படவிழாக்களில் திரையிடப்பட்டுப் பாராட்டையும் பெற்றது. நவீன வங்க இலக்கியத் தளத்தில் புகழ்பெற்ற கவிஞராகக் கொண்டாடப்படும் ஒருவரை மணந்துகொள்ளும் பெண், மகிழ்ச்சியற்ற வாழ்வை வாழ்கிறாள். சொற்கள் மீது இச்சை கொண்ட கணவரது கவிதைகள் குறித்தோ அவரது படைப்பாளுமை குறித்தோ ஏதும் தெரிந்துகொள்ளும் ஆர்வமற்று வாழும் அவள், கணவனின் திடீர் மரணத்தை எதிர்கொள்கிறாள்.

அது அவளுக்கு இழப்பாகத் தோன்றவில்லை, மாறாக ஆறுதலாக உணர்கிறாள். ஆனால், சில காலம் சென்ற பிறகு கணவரது படைப்புகளின் உன்னதம் அவளால் உணரப்படும்போது, அரூபவெளியில் கலந்துவிட்ட கணவனையும் அவரது கவிதைகளையும் காதலிக்கத் தொடங்குகிறாள். காதலை மையப்பொருளாகக் கொள்ளும் வெகுஜன வங்காளப் படங்களின் முகத்தில் கரியைப் பூசிய படம் இது.

சிக்கலான கதாபாத்திரங்களுடன், வெகுஜன சினிமா காதல் குறித்து கற்பித்த அனைத்தையும் மறுகட்டமைப்பு செய்த படைப்பு என்று இதைக் கூறலாம். தன் மிகச் சிறிய கலை வாழ்க்கையில் 12 தேசிய விருதுகளைப் பெற்ற ரிதுபர்னோ கோஷின் படைப்பாளுமையானது, வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் உலக சினிமா அரங்கிலும் வரவேற்பு பெற்ற படங்களைத் தந்து, வணிக சினிமா – மாற்று சினிமா என்ற சுவரை உடைத்துக் காட்டியது.

தற்கால வங்க சினிமாவில் ரிதுபர்னோவின் மறைவு உருவாக்கிய வெற்றிடம் அப்படியே இருக்க, மார்க்சிய சித்தாந்தத்தை உள்வாங்கி வெளியாகிக்கொண்டிருந்த இடதுசாரி மாற்றுப் படங்கள் கடந்த 15 ஆண்டுகளில் அரிதாகிப் போனது வருத்தத்துக்குரிய மற்றுமொரு பின்னடைவு.

ஆர்.சி.ஜெயந்தன்