வைத்தியட்சகர்களான முரளீஸ்வரன், சுகுணன் ஆகியோரின் ஏற்பாட்டில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இலவச கண் சத்திரசிகிச்சை!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இலவச கண் அறுவை சிகிச்சை நடைபெற்றுவருகிறது. நேற்று   (25) நடைபெற்றதுடன் இன்றும் (26) நடைபெறுகிறது. .இவ் வைத்திய முகாமானது தற்காலத்தில் வைத்திய நிர்வாக சேவை மூலம் பொதுமக்களின் நன்மதிப்பை ஈர்த்துள்ள வைத்திய அத்தியட்சகர்களான வைத்தியர் இரா.முரளீஸ்வரன் , களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை  வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கு.சுகுணன் ஆகியோரின் கூட்டு முயற்சியினாலும், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடனும் ஒழுங்கு செய்யப்பட்டதாகும்.

இச் சேவையை பெற மிக பின்தங்கிய, யுத்தத்தின் பாதிப்பை அனுபவித்த பிரதேசத்திலிருந்து பதிவுசெய்யப்பட்ட 600 நோயாளர்களுக்கு களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் அதில் 150 நோயாளர்களுக்கு 25,26 ம் தேதிகளில் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் இலவச கண் சத்திர சிகிச்சையானது கண் சத்திர சிகிச்சை கூடத்தில் நடைபெறுகின்றது.

நேர ஒழுங்கிற்கமைய எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிகிறது.
அறுவைச் சிகிச்சையானது கல்முனை ஆதாரவைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் வைத்தியர் H.M.S.A.B கங்கிலிபொல அவர்களின் வைத்திய குழுவினருடன், லண்டன் தமிழ் வைத்திய நிபுணர் சங்கம் வைத்திய நிபுணர் ராதா தர்மரெட்ணம் அவர்களின் தலைமையிலும் இணைந்து நடைபெறுகின்றது.

வைத்திய நிபுணர் வைத்தியர் ராதா தர்மரெட்ணம் அவர்கள் களுவாஞ்சிக்குடியில் பிறந்து லண்டனில் வசித்தாலும் தான் பிறந்த பகுதிக்கு சேவையாற்ற வேண்டுமென்ற நோக்கில் இதற்கான உதவிகளைச் செய்துள்ளார்.

கல்முனை ஆதாரவைத்தியசாலையில் நடைபெறும் இச் சிகிச்சையானது வளங்களை பகிர்தளிக்கும் முகமாக வைத்திய அத்தியட்சகர் இரா முரளீஸ்வரன் அவர்களின் ஒத்துழைப்புடன் நடைபெறுகின்றது. வைத்திய அத்தியட்சகர் இரா முரளீஸ்வரன் அவர்கள் கூறுகையில்…

‘இவ் வைத்தியசாலையின் வளங்கள் உண்மையாக பாதிப்புற்ற மக்களுக்கு பயன்படுவதால் பெருமையடைவதாகவும். இதற்கு உதவிய வெளிநாட்டு அமைப்புக்களின் உதவும் மனநிலையையும் பாராட்டுகிறேன்’ என்றார்.

களுவாஞ்சிக்குடி வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் கூறுகையில் ‘வசதிகள் அற்ற எம் மக்களுக்கு கண் பார்வையை மீளளிப்பதனால் இன்றைய காலைப்பொழுதை மனம்நிறைந்த மகிழ்வுடன் சந்திக்கின்றேன்’ என்றார்.

மேலும் உணர்வாளர்களாக இந் நிகழ்வில் பங்குபற்றும் கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இரா முரளீஸ்வரன் அவர்கட்கும் இணைந்த குழுவினரிற்கும் களுவாஞ்சிக்குடி நலன்புரி அமைப்புக்கும் அரச சார்பற்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கும் பங்கு கொண்ட வைத்தியர் அசேல , நிபுணர் காந்தா நிரஞ்சன், ஏனைய பங்கு கொண்ட வைத்தியர்கள் ஆகியோருக்கும் தனக்கு பல வழிகளிலும் ஒத்தாசையும் உதவியும் புரியும் மட்டு பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கிறேஸ் அவர்களின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்தார்.

இதன்போது வைத்திய நிபுணர் குழுவிற்கு அவர்களின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு வழங்கப்பட்டது.

 

By admin