அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் நடால், வோஸ்னியாக்கி பெயஸ் ஜோடி வெளியேற்றம்

அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர். இந்தியாவின் பெயஸ் ஜோடி வெளியேறியது.

அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர். இந்தியாவின் பெயஸ் ஜோடி வெளியேறியது.

சிலிச் 100-வது வெற்றி

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 7-வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் அரங்கேறின.

இதில், 6-ம் நிலை வீரர் குரோஷியாவின் மரின் சிலிச் தன்னை எதிர்த்த பாப்லோ காரெனோ பஸ்தாவை (ஸ்பெயின்) 6-7 (2-7), 6-3, 7-6(7-0), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். 20 ஏஸ் சர்வீஸ்கள் வீசி அசத்திய சிலிச், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பெற்ற 100-வது வெற்றி இதுவாகும். அத்துடன் கிராண்ட்ஸ்லாமில் அதிக முறை கால்இறுதியை எட்டிய குரோஷிய வீரரான இவானிசெவிச்சின் (11 முறை) சாதனையையும் சமன் செய்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-7 (4-7), 6-3, 6-3 என்ற செட் கணக்கில் டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை (அர்ஜென்டினா) 3 மணி 51 நிமிடங்கள் போராடி விரட்டினார். இந்த வெற்றியின் மூலம் நடால் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அவுஸ்திரேலியா ஓபனை வெல்ல முடியாமல் போனாலும் இப்போதைக்கு அவரது ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து இல்லை.

அவுஸ்திரேலியா ஓபனில் 10-வது முறையாக கால்இறுதிக்கு வந்துள்ள நடால் அடுத்து மரின் சிலிச்சுடன் மல்லுகட்டுகிறார். இருவரும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியிருக்கிறார்கள். இதில் 5-ல் நடாலே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

டிமிட்ரோவ் வெற்றி

இன்னொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா) 7-6 (7-3), 7-6 (7-4), 4-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியாசை சாய்த்தார். மணிக்கு அதிகபட்சமாக 201 கிலோ மீட்டர் வேகத்தில் சர்வீஸ் போட்டு மிரட்டியதுடன், 36 ஏஸ் சர்வீஸ்களும் வீசிய கிர்ஜியாஸ், டைபிரேக்கரில் திணறியதால், டிமிட்ரோவின் ‘வீறுநடை’க்கு அணை போட முடியாமல் போய் விட்டது.

இதே போல் இங்கிலாந்து வீரர் கைல் எட்மன்ட் 6-7 (4-7), 7-5, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஆண்ட்ரியாஸ் செப்பியை (இத்தாலி) வீழ்த்தினார். தனது கிராண்ட்ஸ்லாம் வாழ்க்கையில் முதல் முறையாக கால்இறுதி அனுபவத்தை பெற காத்திருக்கும் எட்மன்ட் அடுத்து டிமிட்ரோவுடன் மோதுகிறார்.

வோஸ்னியாக்கி கலக்கல்

பெண்கள் பிரிவில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-3, 6-0 என்ற நேர் செட்டில் ரைபரிகோவாவை (சுலோவக்கியா) பந்தாடினார். 63 நிமிடங்களில் எதிராளியின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்த வோஸ்னியாக்கி கால்இறுதியில் கார்லா சுவாரஸ் நவரோவை (ஸ்பெயின்) எதிர்கொள்கிறார். முன்னதாக நவரோ 4-வது சுற்றில் 4-6, 6-4, 8-6 என்ற செட் கணக்கில் அனெட் கோன்டாவெய்ட்டை (எஸ்தோனியா) வென்றார்.

பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் 7-6 (5), 7-5 என்ற நேர் செட்டில் குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சை வென்று கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக கால்இறுதியை எட்டினார். நள்ளிரவு 12 மணி அளவில் களம் புகுந்த 4-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-3, 6-0 என்ற நேர் செட்டில் டெனிசா அலெர்ட்டோவாவை (செக்குடியரசு) பந்தாடினார்.

பெயஸ் ஜோடி ‘அவுட்’

ஆண்கள் இரட்டையர் 3-வது சுற்றில் இந்தியாவின் மூத்த வீரர் லியாண்டர் பெயஸ்- புராவ் ஜாரா ஜோடி 1-6, 2-6 என்ற செட் கணக்கில் ஜூவான் செபாஸ்டியன் கபால்- ராபெர்ட் பாரா (கொலம்பிபியா) இணையிடம் தோற்று நடையை கட்டியது.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா, ஹங்கேரி வீராங்கனை டைமியா பபோசுடன் கைகோர்த்து களம் இறங்கினார். இவர்கள் முதலாவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஆந்த்ரே ஒயிட்டிங்டன்- எலென் பெரேஸ் இணையை 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வீழ்த்தினர்.

தனது குழந்தைகளை டென்னிசுக்குள் இழுக்க விரும்பாத பெடரர்

19 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடருக்கு 8 வயதில் இரட்டை பெண் குழந்தைகளும், 3 வயதில் இரட்டை ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள். தன்னை போலவே அவர்களும் டென்னிசில் பெரிய ஆளாக வர வேண்டும் என்பதில் பெடரருக்கு விருப்பமில்லையாம். 36 வயதான பெடரர் நேற்று கூறுகையில், ‘எனது குழந்தைகள் நிச்சயம் ஏதாவது ஒரு விளையாட்டில் கால்பதிப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால் என்னை பின்பற்றி டென்னிசுக்குள் வர வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஏனெனில் இன்னொரு 25 ஆண்டுகள் டென்னிசுக்காக உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டிக்க முடியாது. முழு நேர டென்னிஸ் வீரர், வீராங்கனைகளாக உருவெடுக்க வேண்டும் என்று ஒரு போதும் அவர்களை கட்டாயப்படுத்த மாட்டேன். விளையாட்டு போட்டியில் ஆர்வம் காட்டினாலோ அல்லது பிசினஸ், பைனான்ஸ் தொழிகளில் ஈடுபட விரும்பினாலோ அவர்களின் போக்கில் விட்டுவிடுவேன்’ என்றார்.