ஆஸ்திரேலியாவில் கடலில் விழுந்தவர்களை காப்பாற்றிய ட்ரோன்!

ஆஸ்திரேலியாவில் கடலில் விழுந்தவர்களை காப்பாற்றுவதற்காக ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தை பாதுகாப்பு பணிக்காக வீரர்கள் பணன்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் இளைஞர்கள் இருவர் நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த போது அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனை கண்ட பாதுகாப்பு வீரர் ட்ரோனை அவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தார். அவர்கள் இருக்கும் இடத்தை சரியாக கண்டுபிடித்த ட்ரோன் உயிர்காக்கும் இரப்பர் பலூனை கீழே போட்டது. அதனை பிடித்து கொண்டு இருவரும் கரை வந்து சேர்ந்தனர்.

அவர்கள் சோர்வாக இருந்ததாகவும், காயம் எதுவும் இல்லை என்றும் தன்னார்வ அமைப்பு ஒன்று கூறியுள்ளது. மேலும் வெறும் 70 விநாடிகள் மட்டுமே இந்த ட்ரோன் எடுத்துக் கொண்டதாகவும், சாதாரணமாக இவர்களை கண்டறிய பாதுகாப்பு வீரர்களுக்கு சில நிமிடங்கள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர். ட்ரோன்கள் பொதுவாக மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் கடலில் சுறா, திமிங்கலம் போன்ற பெரிய மீன்கள் வருவதை கண்டுபிடித்து எச்சரிக்கை செய்யவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.