ஏமன் உள்நாட்டுப் போரில் 5,000 குழந்தைகள் இறந்திருக்கலாம்?- ஐ.நா

ஏமனில் நடக்கும் உள் நாட்டுப் போரில் 5,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

உள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு நாளும் 5 குழந்தைகள் இறப்பதாக ஐ. நா.வின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

இதுகுறித்து ஐ.நா.வின் குழந்தைகளுக்கான யூனிசெஃப் அமைப்பு கூறுகையில், ”ஏமனில் உள் நாட்டுப் போர் நடைபெற்ற இரண்டு வருடங்களில் சுமார் 3 லட்சத்துக்கு அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் பசி, வன்முறை தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர். 5,000க்கும் மேற்பட்டோர் இந்த போர் காலங்களில் இறந்திருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம். ஏமனின் ஒட்டுமொத்த இளம் தலைமுறையும் வறுமையிலும், வன்முறையிலும் வளர்கின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.