சசிகலா குடும்பத்தில் மோதல் உச்சகட்டம்

சசிகலா குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மோதல் தமிழக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதன்பிறகு கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதால் அதிமுக எம்எல்ஏக்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் சசிகலாவால் முதல்வர் பதவியேற்க முடியாமல் போனது. அதனால் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வரானார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட சசிகலா, பெங்களூரு சிறைக்கு செல்லும் முன்பு, தனது அக்கா மகன் டிடிவி. தினகரனை அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார். அதன்பிறகு முதல்வர் பழனிசாமி – ஓபிஎஸ் அணிகள் இணைந்ததால் சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டனர். அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் பழனிசாமி – ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டது.

விதவிதமான கருத்துகள்

இப்படி ஒருபுறம் கட்சியிலும், ஆட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நடந்து கொண்டிருக்க மறுபுறம் சசிகலா குடும்பத்தில் அவரது கணவர் நடராஜன், டிடிவி. தினகரன், திவாகரன் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

தினகரன் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது முதல் சசிகலாவின் தம்பி திவாகரன் அவருக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். கடந்த ஏப்ரலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, பிரச்சாரத்தில் சசிகலா படங்களை தினகரன் பயன்படுத்தவில்லை. இது சசிகலா குடும்பத்தில் உள்ள சிலரால் விமர்சிக்கப்பட்டன.

விவரம் தெரியாத பெண்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப் பதிவுக்கு ஒரு நாள் முன்பாக கடந்த டிசம்பர் 20-ம் தேதி மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை, தினகரனின் தீவிர ஆதரவாளரான பி.வெற்றிவேல் வெளியிட்டார். இதற்கு சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா கண்டனம் தெரிவித்ததுடன், “தினகரனுக்குத் தெரியாமல் இது வெளியாக வாய்ப்பில்லை” என்றும் விமர்சித்தார். இதற்கு தினகரன், “கிருஷ்ணபிரியா விவரம் தெரியாத பெண்” என பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சசிகலாவின் கணவர் நடராஜன், “சசிகலாவுக்கு பரோல் பெற்று, வரும் ஜூன் மாதம் அவரும், நானும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறோம். சசிகலா உத்தரவு கிடைத்ததும் முதல்வர் பழனிசாமி மாற்றப்படுவார். தினகரனுக்கு ஓரளவு மக்கள் ஆதரவு உள்ளது. தினகரனை விமர்சித்த கிருஷ்ணபிரியாவின் கன்னத்தில் அறைவேன்” என அதிரடியாக பல கருத்துகளைத் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு தனது முகநூலில் பதிலளித்த கிருஷ்ணபிரியா, “சிறு பிள்ளைகளுக்குக் கூட மரியாதை அளிக்கப்படவேண்டும் என்ற கருத்துடையவள் நான். வயது வந்த குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் ஒரு பெண்ணை ஊடகத்தில் ‘கன்னத்தில் அறைவேன்’ என்று பெரியவர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர் கூறுகிறார். முதலில் அறைய முயலட்டும்” என்று கூறியுள்ளார்.

தனி அமைப்பு தொடக்கம்

இப்படி சசிகலா குடும்பத்தில் வெளிப்படையாக மோதல்கள் நடக்க, சமரச முயற்சிகளும் நடந்துள்ளன. இந்த நிலையில் எம்ஜிஆர் பிறந்த நாளில் புதிய கட்சி தொடங்குவேன் என தினகரன் அறிவித்தது மோதலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான அன்றிரவே நேதாஜி பெயரில் தனி அமைப்பு தொடங்கப் போவதாக திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் அறிவித்தார். தினகரன் மீதான கோபத்தின் வெளிப்பாடே இந்த அறிவிப்பு என்று கூறப்படுகிறது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று முன்தினம் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பேசிய திவாகரன், “அப்போலோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா டிசம்பர் 4-ம் தேதி மாலை 5.15 மணிக்கே உயிரிழந்தார். மருத்துவனையின் பாதுகாப்பு கருதி மறுநாள்தான் அவரது மரணம் அறிவிக்கப்பட்டது” என்றார்.

தனி விசாரணை ஆணையம்

ஏற்கெனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க தனி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களைப் பலரும் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் திவாகரன் பேசியது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவரது செல்வாக்கு அதிகரித்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் திவாகரன் பேசி வருவதாக தினகரன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நடக்கும் நிகழ்வுகளையும், குடும்ப உறுப்பினர்களின் பேச்சுகளையும் அறிந்த சசிகலா கடும் கோபமடைந்ததாகவும், ஆளாளுக்கு இப்படி பேசிக் கொண்டிருந்தால் எதிரிகள் வலுப்பெற்று நாம் பலவீனமாகி விடுவோம் என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே புதிய கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என தினகரன் அறிவித்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குடும்பத்தில் நடக்கும் மோதல்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடராஜன், “நீரடித்து நீர் விலகாது. உறவுகள் மாறாது” என்று தெரிவித்துள்ளார். ஆனாலும், மோதல்கள் ஓயாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.