குடியிருப்பு பகுதியில் புகுந்த ரயில் – 5 பேர் பலி

மெக்சிகோ நாட்டின் கடேபெக் நகரில் ரயில் தடம்புரண்டு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கடேபெக் நகரிலிருந்து நேற்று காலை ரயில் ஒன்று கிளம்பியது. ரயில் புறப்பட்ட சில மணித்துளிகளில் திடீரென தடம் புரண்டது. இதனால், ரெயில் பெட்டிகள் தாறுமாறாக கவிழ்ந்தன. ஒரு பெட்டி அங்குள்ள குடியிருப்பு பகுதியில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத விபத்தால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. மேலும் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.