குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குஜராத்தில் சபர்மதி ஆஸ்திரமத்தை பார்வையிட்டதுடன், ஐ கிரியேட் மையத்தையும் தொடங்கி வைத்தார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். நேற்று ஆக்ரா சென்ற நெதன்யாகுவும், அவரது மனைவி சாராவும் தாஜ்மகாலை பார்வையிட்டனர்.இன்று பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் நெதன்யாகு பங்கேற்றார். அவருடன் பிரதமர் மோடியும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

முன்னதாக அகமதாபாத்தில் நெதன்யாகுவும், பிரதமர் மோடியும் ஒரே காரில் சுமார் 8 கி.மீ., தூரத்திற்கு சாலை மார்க்கமாக சென்றனர். பின்னர் சபர்மதியில் உள்ள மகாத்மா காந்தி ஆசிரமத்திற்கு சென்றனர். அங்கு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய நெதன்யாகுவும் அவரது மனைவியும் ராட்டையை கையால் சுற்றிப் பார்த்தனர். தொடர்ந்து அங்கு பட்டம் விட்டு மகிழ்ந்தனர்.

பின்னர் அகமதாபாத் நகரில் நடந்த ஐ கிரியேட் எனப்படும் தொழில்நுட்ப மைய தொடக்க விழாவில் பங்கேற்ற நெதன்யாகு பேசுகையில், ”குஜராத் இஸ்ரேல் மக்களுக்கு இடையே நீண்ட காலம் உறவு உள்ளது. அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு வேண்டும் என விரும்புகிறோம். இந்தியாவுக்கு எல்லையில்லா ஆற்றல் உள்ளது. ஜெய்ஹிந்த் ஜெய் இந்தியா ஜெய் இஸ்ரேல்” எனக் கூறினார்.

பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், ”புதிய கண்டுபிடிப்புகள் இந்தியாவையும் இஸ்ரேலையும் ஒரே நேர்க்கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இஸ்ரேலின் கண்டுபிடிப்புகள் மூலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் பங்கு கொள்ள இஸ்ரேல் உறுதி கொண்டுள்ளது” எனக் கூறினார்.