கார் விபத்தில் சிக்கிய மகன்: ஹெலிகாப்டரில் சென்று மீட்ட தந்தை

ஆஸ்திரேலியாவில் கார் விபத்து நடந்த பின்னர், தன்னுடைய மகனை ஹெலிகப்டரில் தேடுவதற்கு தந்தை எடுத்த முடிவு, அவரது மகனை உயிரோடு மீட்பதற்கு உதவியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 17 வயதான சாமுவேல் லெத்பிரிட்ஜின் கார் நியூ சௌத் வேல்ஸ் நெடுஞ்சாலையை விட்டு கடந்து விபத்தில் சிக்கியது. காரில் மாட்டிக்கொண்ட அவர் 30 மணிநேரம் காரில் காருக்குள்ளேயே இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அன்றய தினம் அவர் தமது நண்பரின் வீட்டிற்கு சென்றடையாததால், குடும்பத்தினர் மிகவும் கவலையடைந்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

“சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர்” உள்ளூரில் நடைபெற்ற கார் விபத்து ஒன்றை நினைவுகூர்ந்தவுடன் அவரது தந்தை டோனி லெத்பிரிட்ஜ் ஹெலிகட்பர் ஒன்றை வாடகைக்கு எடுக்க முடிவு செய்தார்.

” ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில், துரதிஷ்டவசமாக, 5 நாட்கள் யாரும் கண்டுபிடிக்காததால். அந்த மனிதர் இறந்துவிட்டார். சாமுவேலுக்கு அவ்வாறு நிகழ நான் விடப்போவதில்லை என்று “சவன்” என்ற உள்ளூர் சேனலிடம் அவர் தெரிவித்தார்.

மகன் காணாமல் போய்விட்டது, அவனுடைய வழக்கத்துக்கு மாறானது என்பதால், அவன் சிக்கலில் இருப்பதாக டோனி லெத்பிரிட்ஜ்க்கு சந்தேகம் எழுந்துள்ளது.

“எனவே, நாங்கள் நேரடியாக ஹெலிகப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து சென்று, 10 நிமிடங்களில் அவனை கண்டுபிடித்தோம்” என்று அவர் கூறினார்.

சிட்னியின் வடக்கில் 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிரான்கென் விரிகுடாவில், சாலைக்கு வெளியே 20 மீட்டர் தூரத்தில் கார் உடைந்து கிடப்பதை இந்த குடும்பம் கண்டுபிடித்தது.

காரின் டேஷ்போர்டுக்குள் சிக்கியிருந்த அவனை, அதிலிருந்து அகற்றுவதற்கு அவசரகால மீட்புதவி குழுவினர், ஒரு மணிநேரத்திற்கு அதிகமாகவே எடுத்துக்கொண்டனர்.

அதிக எலும்பு முறிவுகளோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த இளைஞன், ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“உயிரோடு இருப்பது அவனுடைய அதிஷ்டம்” என்று நியூ சௌத் வேல்ஸ் ஆம்புலன்ஸ் சேவை ஆய்வாளர் ஜெஃப் அட்கின்ஸ் தெரிவித்தார்.

இந்த கார் விபத்து பற்றி புலனாய்வு நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.