விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்த அமெரிக்கா திட்டம்: ரஷ்யா கடும் எதிர்ப்பு

அமெரிக்காவின் பாதுகாப்பை மேம்படுத்த விண்வெளியில் ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான சாத்திய கூறுகளை ஆராயுமாறு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுக்கு அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் எதிரி நாடுகள் அமெரிக்கா மீது ஏவுகணைகளை வீசினால் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்ட ஏவுகணை மூலம் அதனை இடைமறித்து அழிக்க முடியும். மேலும் அதிநவீன ஆயுதங்களை விண்வெளியில் தயார் நிலையில் வைத்திருக்கவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரவ், மாஸ்கோவில் நேற்று நிருபர்களிடம் கூறியபோது, “விண்வெளியை ராணுவமயமாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன்காரணமாக சர்வதேச பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். அமெரிக்காவின் இந்த முயற்சியை ரஷ்யாவும், சீனாவும் கடுமையாக எதிர்க்கும்” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 2007-ல் சீனாவின் செயற்கைக்கோள் ஒன்றை அந்த நாட்டு ராணுவம் தரையில் இருந்து ஏவுகணையை வீசி அழித்தது. இத்தகைய ஏவுகணைகளை சீனா அதிக அளவில் தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. இத்தகைய சவால்களை எதிர்கொள்ளவே விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது என்று அந்த நாட்டு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன