2017-ன் சிறந்த சினிமா புத்தகங்கள்

தமிழில் சினிமா குறித்த புத்தகங்கள் அரிது என்ற காலம் மலையேறிவிட்டது. திரைக்கதை, தொழில்நுட்பம், வாழ்க்கை வரலாறு, உலக சினிமா, விமர்சனம் என நிறையவே சினிமா புத்தகங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. கடந்த 2017-ல் வெளியாகி, கவனம் ஈர்த்த புத்தகங்களில் சிலவற்றின் அறிமுகம் இங்கே…

ஒளி வித்தகர்கள் | தமிழில்: ஜா.தீபா

காகிதத்தில் இருக்கும் திரைக்கதையைக் காட்சிகளாக மாற்றும்போது ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் என்ன செய்கிறார்? இயக்குநருக்கும் அவருக்குமான புரிதல் என்ன? எழுதப்பட்ட காட்சி ஒரு நாளின் எந்த நேரத்தில் எந்த ஒளியில் எடுக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும்? ஒரு காட்சிச் சட்டகத்தை (காம்போஸிஷன்) வடிவமைப்பது என்றால் என்ன? வண்ணங்கள் ஒரு காட்சியின் தன்மையை எப்படி மாற்றுகின்றன? கேமரா நகர்வு என்றால் என்ன? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் மட்டுமல்ல, ஒளிப்பதிவு தொழில்நுட்பம் கலையாகப் பரிமாணம் பெரும் தருணங்களையும் இந்தப் புத்தகம் நமக்குக் காட்டுகிறது. உலகின் சிறந்த எட்டு ஒளிப்பதிவாளர்களின் உரையாடல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஜா.தீபா. ‘மாஸ்டர்ஸ் ஆஃப் லைட்’ எனும் ஆங்கில நூலில் இடம்பெற்றிருக்கும் உரையாடல்களின் ஒருபகுதியை முதல் பாகமாகப் பதிப்பித்திருக்கிறது டிஸ்கவரி புக் பேலஸ்.

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், விலை ரூ. 150   தொடர்புக்கு: 044-65157525

கதை, திரைக்கதை, இயக்கம் | ஆசிரியர்: கலைச்செல்வன்

திரைக்கதை, இயக்கம் குறித்து ஆங்கிலத்தில் எண்ணற்றப் புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆனால் தமிழில் அதுபோன்ற புத்தகங்களை வெற்றிபெற்ற படைப்பாளிகள் நூலாக எழுத முன்வருவதில்லை. மாறாக திரைப்படக் கல்வி நிறுவனம் நடத்தத் தொடங்கிவிடுகிறார்கள். கல்லூரிகள், பயிற்சிப்பட்டறைகளில் சினிமாவைப் பயிற்றுவிப்பதில் அனுபவம் மிக்கவரான கலைச்செல்வன், திரை ஆர்வலர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு வாசகர்களுக்கும் புரியும் வண்ணம் இதை எழுதியிருக்கிறார். திரைக்கதை கட்டமைப்பது, அதை எப்படி காட்சிகளாக மாற்றுவது, காட்சிகளை எப்படி ஷாட்களாகப் பிரித்து படமாக்கம் செய்வது என்பதுவரை விரிந்துசெல்லும் இப்புத்தகம் ,குழந்தைக்கு கற்பிப்பதைப் போலச் சிறந்த தமிழ்ப் படங்களை உதாரணங்களாகக் காட்டி, சொல்லித் தருகிறது. இந்நூலுக்குப் பேராசிரியர் சொர்ணவேல் வழங்கியிருக்கும் முன்னுரை புத்தகத்துக்கான உழைப்பை உறுதிசெய்கிறது.

வெளியீடு: நிழல் பதியம் பிலிம் அகாடமி, விலை ரூ. 350 தொடர்புக்கு: 9444484868

நான் உங்கள் ரசிகன் | ஆசிரியர்: மனோபாலா

னோபாலாவை நகைச்சுவை நடிகராக, தயாரிப்பாளராகத் தெரிந்த இன்றைய தலைமுறைக்கு அவர் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பது தெரியாது. ரஜினிகாந்த், விஜயகாந்த், மோகன் உட்பட அன்றைய முன்னணிக் கதாநாயகர்களை வைத்து 40-க்கும் அதிகமான படங்களை இயக்கியவர். இந்தியிலும் கால்பதித்தவர். தனது வெற்றிக் கதையை அனுபவப் பொக்கிஷமாக ‘குங்குமம்’ வார இதழில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுதிவந்தார். அது புத்தக வடிவம் பெற்றுக் கவனிக்க வைத்தது. நூலாசிரியரின் செறிவான அனுபவங்கள், சரளமான மொழி, தொடக்கம் முதல் இறுதிவரை இழையோடும் நகைச்சுவை ஆகியன இந்நூலைக் கவனிக்கவைத்தன.

வெளியீடு: சூரியன் பதிப்பகம், விலை ரூ 180  தொடர்புக்கு: 044 – 42209191

தலைசிறந்த ஈரானிய திரைக்கதைகள் | ஆசிரியர்: தி.குலசேகர்

டுமையான நான்கு அடுக்கு தணிக்கை முறையின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தலைசிறந்த படங்களைத் தந்துகொண்டிருக்கிறது ஈரானிய சினிமா. ஈரானிய புதிய அலை சினிமாவின் முக்கியப் படைப்பாளிகளான மஜித் மஜீதி, ஜபார் பனாஹி, மார்ஸீ மெஸ்கினி, அபாஸ் கிராஸ்டமி, அஸ்கார் ஃபர்ஹாதி ஆகிய ஐந்து இயக்குநர்களின் புகழ்பெற்ற ஏழு படங்களின் சுருக்கமான திரைக்கதைகள் இடம்பெற்றிருக்கும் நூல். ஈரானிய இயக்குநர் மோஷென் மெக்மல்பஃபுடன் ஒளிப்பதிவாளர் செழியன் நிகழ்த்தியிருக்கும் உரையாடல் இன்றைய ஈரானிய சினிமாவின் குறுக்குவெட்டை முன்வைக்கிறது.

வெளியீடு: எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ்ஸ், விலை ரூ. 250    தொடர்புக்கு: 044-24332696

மான்டேஜ் மனசு | ஆசிரியர்: க.நாகப்பன்

காதலும் காதல் நிமித்தமுமாக அல்லது சினிமாவும் சினிமா நிமித்தமுமாகவே நம் வாழ்க்கை இருக்கிறது. காதல், சினிமா என்ற இரு கூறுகளை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. க.நாகப்பனின் ‘மான்டேஜ் மனசு’ நூல் சினிமா காதலையும், நிஜக் காதலையும் ஒற்றைப் புள்ளியில் இணைக்கிறது. நிறைவேறிய காதல், நிறைவேறாத காதல், மாற்றுக்காதல் என பல்வேறு காதல் சார்ந்த வாழ்வியலையும் அதன் திரைக் களங்களையும் விவரிக்கும் ‘மான்டேஜ் மனசு’, அன்பையும் காதலையும் மட்டுமே மாறி மாறிச் சொல்கிறது. திரைப்படங்கள் சார்ந்தும், திரைக்கதை சார்ந்தும், திரைத்துறையின் தொழில்நுட்பம் சார்ந்தும் மட்டுமே திரைப் புத்தகங்களை அணுகியவர்களுக்கு ‘மான்டேஜ் மனசு’ புது வாழ்வியல் அனுபவத்தைத் தரும்.

வெளியீடு: தோழமை பதிப்பகம், விலை ரூ.150     தொடர்புக்கு 9444302967

100 நாடுகள் 100 சினிமா | ஆசிரியர் பிரதீப் செல்லத்துரை

லக சினிமாக்களை அவற்றின் காட்சி மொழி குறித்துப் புரியாத மொழியில் அறிமுகப்படுத்தும் எழுத்துக்கள் அதிகம். பிரதீப் செல்லத்துரை எழுதியிருக்கும் இந்த நூல், எவ்விதப் பாசாங்கும் இல்லாத மென்வாசிப்புக்கு ஏற்றவகையில் எளிய மொழியில், நூறு தற்கால உலக சினிமாக்களை அறிமுகப்படுத்துகிறது. குறிப்பிட்ட சில நாடுகளின் படங்களை மட்டுமே கொண்டாடிக்கொண்டிருக்காமல் புவர்த்தோ, ரீகா, மால்டா, அங்கோலா, எத்தியோப்பியா மாதிரியான அபூர்வமாகத் திரைப்படங்களை எடுக்கக் கூடிய நாடுகளின் படங்களையும் இதில் கவனப்படுத்தியிருப்பது சிறப்பு. ஒவ்வொரு படத்துக்கான அறிமுகத்தையும் 3 நிமிடங்களில் வாசித்துவிடலாம்.

வெளியீடு: மோக்லி பப்ளிஷர்ஸ், விலை ரூ. 220     தொடர்புக்கு: 9176891732

காட்சிகளுக்கு அப்பால் | ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்

சினிமா குறித்து இலக்கியப் பார்வையுடன் எழுதிவரும் நவீன எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள், சினிமா மொழியைப் புரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு ரசனையான திறப்புகளைக் கண்டெடுத்துத் தருபவை. 14 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கும் இந்தச் சிறிய நூலில் பெரும்பாலும் தற்கால உலக சினிமாக்களில் அதிக கவனம் பெற்றவற்றை இன்னும் நெருக்கமாக நமக்குப் புலப்பட வைக்கிறார். இந்நூலில் ‘அறம்’ படத்துக்கு இடமளித்திருப்பதும் அனிமேஷன் படங்களின் கலாப்பூர்வம் குறித்த பார்வை, கமலின் திரைக்கதை பாணியை அலசும் கட்டுரை ஆகியவையும் கூடுதலாகக் கவனிக்க வைக்கின்றன.

தேசாந்திரி பதிப்பகம், விலை ரூ.75         தொடர்புக்கு: 044-23644947

கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை | தொகுப்பு நூல்

திரையுலகில் பெரும் வெற்றியை ருசித்தவர்கள், ஒரு சில வெற்றிகளோடு மறக்கப்பட்ட சமகாலத்தவர்கள், முதல் முயற்சியை வெற்றியாக மாற்றிக்காட்டியவர்கள் என்று 50-க்கும் அதிகமான திரைப் பிரபலங்களை வெறும் நட்சத்திர பிம்பங்களாகப் பார்க்காமல் ரத்தமும் சதையுமான மனிதர்களாகப் பார்க்கும் நேர்காணல்களும் கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கும் தொகுப்பு இது. கடந்த ஆண்டுகளில் வெளியானவற்றில் மிகச்சிறந்தவற்றைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறது அந்திமழை. கலைஞர்களின் வாழ்க்கை வெளிப்பட்டிருப்பது புத்தகத்தின் தனித்துவம்.

வெளியீடு: அந்திமழை, விலை ரூ. 300     தொடர்புக்கு :9443224834

அயல் சினிமா மாத இதழ்

தமிழில் வெகுஜன சினிமா பத்திரிகைகள் கிட்டத்திட்ட இல்லாமல் போய்விட்டன. கொஞ்சம் தீவிரத் தன்மையுடன் பிறக்கும் சினிமா சிற்றிதழ்கள் சில இதழ்களுடன் மூச்சை நிறுத்திக் கொள்வதே வழக்கம். ஆனால் இந்த இரண்டு தரப்பு வாசகர்களையும் கவனத்தில் கொள்ளும் விதமாகத் தனது நோக்கத்தைத் தீர்மானித்துக்கொண்டு நேர்த்தியான வடிவமைப்பு, அடர்த்தியான உள்ளடக்கங்களுடன் ஈர்க்கிறது `அயல்’ சினிமா மாத இதழ்.

டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடாக அதன் பதிப்பாளர் வேடியப்பனை ஆசிரியராகக் கொண்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் வெளிவரும் இதில் உலக சினிமா அறிமுகங்கள், இந்திய மொழிப்படங்கள், தமிழின் முக்கிய முயற்சிகள் ஆளுமைகளின் நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள் எனத் தரம், ரசனை ஆகியவற்றை மேம்படுத்தும் உள்ளடக்கங்கள் நம்பிக்கை தருவதாக இருக்கின்றன.