இந்திய ராணுவ தளபதியின் பேச்சு ஆக்கப்பூர்வமானது அல்ல: சீன வெளியுறவு அமைச்சகம் கண்டனம்

சீனாவுடன் நமக்கு டோக்லாம் பிரச்சினை இருப்பதாக இந்திய ராணுவ தளபதியின் பேச்சு ஆக்கப்பூர்வமானது அல்ல என்று சீன வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் அண்மையில் பேசும்போது, மேற்கு எல்லையில் பாகிஸ்தான் மீதும், வடக்கு எல்லையில் சீனா மீதும் நமது ராணுவத்துக்கு மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. சீனாவுடன் நமக்கு டோக்லாம் பகுதியில் பிரச்சினை உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு சீன வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்து உள்ளது. அந்த அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லூ காங்க் நேற்று கூறும்போது, “இந்திய தளபதியின் கருத்து, கடந்த செப்டம்பர் மாதம் பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி இடையே எல்லையில் அமைதியை பேணுவதற்கு ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைக்கு எதிரானது. டோக்லாம் பிரச்சினை குறித்து அவர் கூறியிருப்பது, ஆக்கப்பூர்வமானது அல்ல. இது எல்லையில் அமைதியை பராமரிக்க எவ்விதத்திலும் உதவாது. டோக்லாம் என்றைக்குமே சீனாவுக்கு உரிய பகுதிதான்” என்றார்.

இந்த நிலையில் இந்தியாவின் வடக்கு பிராந்திய ராணுவ தளபதி அபய் கிருஷ்ணா, “நாங்கள் நன்கு தயார் நிலையில் இருக்கிறோம். டுடிங் (அருணாசலபிரதேசம்) பகுதியில் அண்மையில் சீனா ராணுவத்தினர் வந்தனர். அங்கு நமது படைகளும் இருந்ததால் அவர்கள் தங்களது எல்லைக்குள் மீண்டும் சென்றுவிட்டனர். இதுபோன்ற நடவடிக்கைகளில் இனி சீனா இறங்காது என்றே கருதுகிறேன்” என்று தெரிவித்து உள்ளார். #Armychief #BipinRawat #Doklam #India #China