இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை நடக்கிறது.

இலங்கை தேர்தல்
இலங்கையில் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முழுமையாக சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் நாளைய தினம் (ஆகஸ்டு 5) நடைபெறவுள்ளது.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள வாக்களிப்பு நடவடிக்கைகள், மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்களிப்பதற்கு ஒரு மணித்தியாலம் அதிக நேரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளைய தினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை அடுத்து, புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி கூடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு (ஆகஸ்ட் 3) வெளியிடப்பட்டது.

அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் சட்டம் ஆகியவற்றின் ஊடாக கிடைக்கப் பெறும் அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்கு சீட்டுக்கள் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு சுகாதார ஏற்பாடுகளுக்கு மத்தியில் இந்த முறை தேர்தல் நடைபெறவுள்ளது.

இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலில் சுகாதார ஒழுங்கு விதிகளை கடைப்பிடிப்பதற்காக சுமார் 8000திற்கும் அதிகமான சுகாதார அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

இந்த தேர்தலின் ஊடாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்குள் வாக்களிப்பு இடம்பெறாது என கூறிய அவர், தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேறி வீடுகளில் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்களுக்கு மாத்திரம் வாக்களிக்க இந்த முறை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வீடுகளில் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பிற்பகல் 4 மணிக்கு பின்னர் தமது சொந்த போக்குவரத்து சேவையின் ஊடாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைத் தந்து வாக்களித்ததன் பின்னர் அவ்வாறே வீடுகளுக்கு செல்லுமாறும் டொக்டர் அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கும் இந்த முறை வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அனைத்திலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் ஆணையாளரின் பதில்.

இலங்கை தேர்தல் ஏற்பாடு
வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குபெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகளின் போது ஒரு போலீஸ் அதிகாரி வாக்கு பெட்டிகளுடன் செல்லும் அதேவேளை, மற்றைய அதிகாரிகள் பிரதேச போலீஸ் நிலையங்களில் இருந்து கடமைகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவிக்கின்றார்.

வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் போது கைகளை சுத்திகரிக்கும் அதேவேளை, வாக்களிப்பு நிலையங்களுக்குள்ளும் கைகளை சுத்திகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

BBC