அம்மன் ஆலயமருகே மாட்டெலும்புகள்! மக்கள் விசனம்! கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் கண்டனம்!
(காரைதீவு  நிருபர் சகா)
 
கல்முனை மாநகரிலுள்ள புனிதம் மிக்க கல்முனை கடற்கரை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்கு கழிவுகளை கொண்டு வந்து கொட்டியதோடு மட்டுமன்றி அப்பிரதேசத்திலுள்ள தெரு மின் விளக்குகளை சேதப்படுத்தியுள்ளமை அமைதியாகக் காணப்படும் கல்முனையின் இன நல்லுறவை சீரழிக்கின்ற நாசகாரச் செயலாகும்.
இவ்வாறான செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன் இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கு முனைப்புடன் செயற்படும் தீய சக்திகளை பொலிஸார் கண்டறிந்து அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெற்று வரும் இத்தருணத்தில் சுயலாப அரசியல் நோக்கம் கொண்ட சிலர் இத்தகைய விரும்பத்தகாத செயல்களை அரங்கேற்றுவதில் ஆர்வமாக உள்ளனர். இதே வேளை எமது தமிழ் மக்கள் இவ்விடயம் தொடர்பில் ஆத்திரமடைந்தவர்களாக காணப்படுகின்றனர்.
 எமது மக்கள் நிதானமாகவும் பொறுமையுடனும் செயற்பட்டு இத்தகைய நாசகாரச் செயல்களை மேற்கொண்டவர்களை கண்டறிவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
நாம் மாற்று இனத்தவர்களையோஇ மதத்தவர்களையோ இம்சிப்பதால் கண்டபயன் எதுவுமில்லை. மாறாக ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டு முட்டி மோதி இரத்த ஆறு ஓடுவதற்கே இத்தகைய செயல்கள் வழிசமைக்கும்.
 எனவே இவ்வாறான ஈனச் செயல்களை எந்த சமுகத்தைச் சார்ந்தவர் செய்திருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி உச்ச பட்ச தண்டனை வழங்கி தண்டிக்க வேண்டும்.
தமிழ்இ முஸ்லிம் மக்கள் பின்னிப் பிணைந்து வாழும் கல்முனையின் இன நல்லுறவுக்கு வேட்டு வைப்பதற்கும் அதன் மூலம் அரசியல் சுயலாபம் தேடுவதற்கும் கங்கணம் கட்டியுள்ளவர்களுக்கு இடமளிக்காத வகையில் தமிழ் முஸ்லிம் சமூகத் தலைவர்கள் சமயத் தலைவர்கள் புத்தி ஜீவிகள்தொழிற்பட வேண்டுமென்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

By admin