இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனாவுடன் நடக்கும் அரசியல் போர்.

இலங்கை பிற தெற்கு ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது குறைவான எண்ணிக்கையிலேயே கொரோனா வைரஸ் மரணங்களை சந்தித்துள்ளது.

ஜூலை 29ம் தேதி நிலவரப்படி இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 3 ஆயிரத்தை விடவும் குறைவு.

அவர்களில் 11 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான ஊரடங்கு அமலாக்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளைத் தடமறிதல் ஆகியவற்றின் மூலம் இந்த வெற்றியை இலங்கை அடைந்துள்ளதாக கருதப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளில் பெரும்பாலும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

மார்ச் மாதம் இலங்கையின் 8வது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலுக்கு மத்தியில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேசிய அளவில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்த இலங்கை தயாராகி வருகிறது.

இலங்கையின் மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் சுமார் 1.6 கோடி மக்கள் மூலம் இந்தத் தேர்தலில் தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 29 பேர் கட்சிகளின் வாக்கு விகிதத்துக்கு ஏற்ப நியமனம் செய்யப்படுவார்கள்.

தற்போது இலங்கை ஜனாதிபதியாக இருக்கும் கோட்டபாய ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
அவர் தேர்வான மூன்று மாத காலத்துக்கு பிறகு, மார்ச் 2-ஆம் தேதி இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது அதன் பதவி காலத்தில் ஆறு மாதங்கள் எஞ்சியிருந்தன.

ஏப்ரல் 25ஆம் தேதி நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இதனை நடத்துவதை விட இலங்கை அரசுக்கு வேறு ஒரு முக்கியமான பணி இருந்தது.

தேர்தலைத் தள்ளி வைத்து விட்டு நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டுமென்றும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் மார்ச் 16ஆம் தேதி தொடங்கி எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.

ஆனால் ஏப்ரல் 25ஆம் தேதி தேர்தலை நடத்துவது என்பதில் கோட்டாபய உறுதியாக இருந்தார்.இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனுவைப் பெற ஆரம்பித்தது.

வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக மார்ச் 19ம் தேதி இருந்தது.

ஆனால் மார்ச் 20ஆம் தேதி முதலே நாடு முழுவதும் மூன்று மாத கால ஊரடங்கு அமலாகிறது என்று அரசு அறிவித்தது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டது.

முதலில் ஜூன் 20ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அதுவும் தள்ளிவைக்கப்பட்டு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.

BBC