நாம் ஏன் த.வி.கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுகின்றோம்?
ஆலையடிவேம்பு பிரச்சினைகளை தீர்க்க த.வி.கூட்டணிக்குவாக்களியுங்கள்!
விளக்குகிறார் ஈரோஸ் ஜனநாயகமுன்னணியின் செயலாளர்  இராஜேந்திரா!
(காரைதீவு   நிருபர் சகா)
 

ஆலையடிவேம்பில் எஞ்சியுள்ள பிரச்சனைகளை தேவைகளை நடுநிலையாய் நின்று தீர்த்துவைக்க  த.வி.கூட்டணிக்குவாக்களியுங்கள். நாம் ஏன் த.வி.கூட்டணியுடன் சேர்ந்தோம் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

இவ்வாறு ஈரோஸ் ஜனநாயகமுன்னணியின் செயலாளர் நாயகம்  இராஜஇராஜேந்திரா தெரிவித்தார்.

வடக்க கிழக்கில் எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மட்டும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி  தமிழர்விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுகின்றதே அதற்கான காரணம் என்ன என்று வினவியதற்குப் பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஈரோஸ் ஜனநாயகமுன்னணியினராகிய நாம் ‘உதயசூரியன்’சின்னத்தில் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சார்பில் மக்கள் ஆணையை வேண்டி நிற்கின்றோம்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த 1972 குடியரசு அரசியல் யாப்பு உருவானபோது தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அங்கீகாரம் புறக்கணிக்கப்பட்டது. இதன்போதுதமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு அஹிம்சை வழியிலான போராட்டங்களும் அதனைத் தொடர்ந்து ஆயுத வழியிலான போராட்டங்களும் முனைப்புப் பெற்றன. இக்கால கட்டத்தில்தான் எமது முன்னோடி அமைப்பான ஈரோஸ் 1975ல் லண்டனில் கருப்பெற்று ஈழத்தில் உருப்பெற்று பல காத்திரமான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

1987ல் ஏற்படுத்தப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினையடுத்து உருவான யுத்தமற்றதும்; யுத்தமுமான சூழ்நிலையில் 1989ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஈரோஸ் களமிறங்கிய போது மக்கள் வழங்கிய பெரும்பான்மை ஆதரவினால் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர். எனினும் மீண்டும் அரசு-புலிகள் யுத்தம் ஆரம்பமானதும் பாராளுமன்ற ஜனநாயகம் அர்த்தமற்றுப் போனது.

இதனால் ஈரோஸ் அமைப்பின் 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களின் நலன்கருதி பதவி விலகியது வரலாற்று நிகழ்வு. இதுவும் இதன் பின்னரான பல விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளியது.

எனினும் 2009 க்குப் பின்னரான காலத்தில் நிறுவன ரீதியாக இல்லாவிட்டாலும் தமிழ் தேசியத்தின் குரலாக இனம் காட்டப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எமது ஆதரவினையும் பங்களிப்புக்களையும் நாம் வழங்கியிருந்ததுடன் இணைந்தும் செயற்பட்டிருந்தோம். த.தே.கூட்டமைப்பை தமிழ் மக்களின் பலமான சக்தியாக மாற்றுவதற்கு நாமும் முடிந்தவரை உழைத்திருக்கிறோம்.

எனினும் கடந்த சில வருடங்களாக த.தே.கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக பலபிரச்சனைகளும் குழப்பங்களும் ஏற்பட்டிருந்ததுடன் எதிர்காலத்தில் தமிழ் தேசியத்தின் தலைமை பற்றிய சந்தேகத்தையும் எமக்கு ஏற்படுத்தியிருந்தது. இன்றும் அந்நிலைமை கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்நிலையில் கட்டமைப்பு ரீதியாக செயற்பாடுகளற்று மக்களோடு மக்களாக இருந்தநாம் மக்களுக்காக மக்களிடம் ‘ஈரோஸ் ஜனநாயக முன்னணி’யாக 2015ம் ஆண்டு மட்டக்களப்பில் வைத்து எம்மை பிரகடனம் செய்தோம்.

இவ்வேளையில் த.தே.கூட்டமைப்புக்குள் ஏற்கனவே உருவாகியிருந்த கருத்து முரண்பாடுகள் காரணமாக அதிலிருந்த ஒருசில கட்சிகள் வெளியேறின. இது த.தே.கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் பலயீனத்தை ஏற்படுத்துமென நாம் கருதியதால் கூட்டமைப்பை பலப்படுத்தும் நோக்கத்தோடு நாமும் ஒரு பங்காளிக் கட்சியாக இணைந்து செயற்படுவதற்கான விருப்பத்தை முறைப்படி த.தே.கூட்டமைப்பின் தலைமைக்குத் தெரிவித்திருந்தோம். எனினும் இதுவரை எமக்கு எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை.

த.தே.கூட்டமைப்பானது தனித்தமிழரசுக் கட்சியின் ஆதிக்கத்திற்குள்ளும் ஆளுமைக்குள்ளும் அகப்பட்டுக்கொண்டிருந்ததும் அதன் நடைமுறைகளும் போக்குகளும் தமிழ் மக்கள் எதிர்பார்த்த தீர்வுகளை எட்டக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்குமா? என்பது மக்களுக்கும் அதனுடன் இணைந்திருந்த கட்சிகளுக்கும் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது. மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலத்த விமர்சனங்களுக்கும் உள்ளானது. இவ்வேளையில்தான் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கிடைக்கப்பெற்றதும் அதன் பின்னர் ஏற்பட்ட ஆசனப்பங்கீடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் த.தே.கூட்டமைப்புக்குள் உருவானதும் அதிலிருந்த சில கட்சிகளின் வெளியேற்றமும் ஆகும்.

இந்த சூழ்நிலைமைகளை அவதானித்த நாம் எதிர்வரும் தேர்தலில் எந்த அணியும் சாராது தனித்து சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுவதெனத் தீர்மானித்து ஊடகங்களுக்கும் வெளிப்படுத்தியிருந்தோம். இதன்போது த.தே.கூட்டமைப்பின் பலத்தை சிதைப்பதாகவும் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பதாகவும் எம்மீது அவதூறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வேளையில்தான் ஏற்கனவே த.தே.கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய கட்சிகளுடன் ஏனைய பல தமிழ் அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் ‘தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்னும்  பெயரில ;செயற்பட முடிவு செய்திருந்தனர். இதற்கான அழைப்பு எமக்கும் கிடைக்கப் பெற்றபோது தமிழ் மக்களின் நலனையும் தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டியதன் அவசியத்தையும் கருத்திற்கொண்டு நாமும் ஒரு பங்காளிக் கட்சியாக புதிய கூட்டமைப்புடன் இணைந்து கொண்டோம்.

இதனடிப்படையில்தான் எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஆலையடிவேம்பில் களமிறங்குகின்றோம். பல்வேறு சிக்கல்கள் நிறைந்த இப்பிரதேசத்தில் எமது பிரதேசமக்கள் நின்று நிதானித்து பொறுப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டிய தருணத்திலிருக்கிறார்கள். பேரினவாதகட்சிகளும் தங்களது முகவர்களுடாக வாக்குவேட்டையிலிறங்கி ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் மக்களின் ஒற்றுமையையும் பலத்தையும் சிதறடிக்க முனைகின்றனர்.

அற்பசொற்ப சலுகைகளுக்காக அபிவிருத்தி தொழில்வாய்ப்பு என்று ஆசைவார்த்தை கூறி எமது மக்களின் வாக்குகளை அபகரிப்பதன் மூலம் எமது பிரதேசத்தை எமது பிரதேசம் சாராத வேறு சக்திகளுக்கு தாரைவார்க்க முயல்கின்றனர். இவர்கள்பற்றி எமது பிரதேசமக்களும் புத்திஜீவிகளும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒருபோதும் நிறைவேற்ற முடியாத இவர்களின் போலியான வாக்குறுதிகளை நம்பவேண்டாம். இழக்கப்பட்ட எமது எல்லைகளையும் உரிமைகளையும் மீட்டெடுக்கவும் எமது தன்மானத்தை அடகுவைக்காமல் எதிர்கால இருப்பை உறுதிப்படுத்த வேண்டுமானால் உங்களது பெறுமதியான வாக்குகளை தமிழ் மக்களின் உரிமைச் சின்னமான உதயசூரியனுக்கே வழங்கவேண்டும். இதனூடாகவே இருண்டு போய்க்கிடக்கின்ற எமது பிரதேசத்தை ஒளிமயம் மிக்கதாக மாற்ற முடியும். உதயசூரியனின் ஒளியினால் எமது பிரதேசத்தினை பிரகாசிக்கச் செய்ய உதய சூரியனுக்கே வாக்களியுங்கள்.

By admin