மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி

மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் படம் முழுக்க வரும் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

‘காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் மணிரத்னம். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் மணிரத்னம். பெயரிடப்படாத புதிய படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளார்கள். எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை பெரும் பொருட்செலவில் தங்களுடைய 17-வது தயாரிப்பாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முன்னதாக, விஜய் சேதுபதிக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அது சிறிய அளவிலேயே இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது படம் முழுக்க விஜய் சேதுபதி வரும் அளவுக்கு கதையில் மாற்றம் செய்திருக்கிறாராம் மணிரத்னம்.

‘விக்ரம் வேதா’ படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதிக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதால், அவர் கதாபாத்திரத்தை விரிவாக்கம் செய்திருக்கிறார் மணிரத்னம். இதனால் கமர்ஷியல் ஹீரோவுக்கான எல்லா அம்சங்களும் கைவரப்பெறும் படமாக மணிரத்னம் படம் இருக்கும் என்று விஜய் சேதுபதி நம்பிக்கையுடன் வலம் வருகிறார்.