நட்சத்திர விழா: கொஞ்சம் திருப்பி தந்தால் குறைந்தா போகும்? நடிகர் சங்கத்திற்கு எஸ்.வி.சேகர் கேள்வி!

தென்னிந்திய நடிகர் சங்க டிரஸ்ட்டி பதவியில் இருந்து நடிகர் எஸ்வி சேகர் விலகுவதாக அறிவித்துள்ளார். மலேசியர்களிடம் சம்பாதித்த பணத்தில் ரூ.1 கோடியாவது நலிந்த மலேசிய குழந்தைகளிடம் கொடுத்தால் நடிகர்கள் என்ன குறைந்தா போய்விடுவார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்ற பிறகு சங்கத்தின் அறங்காவலராக நியமிக்கப்பட்டவர் நடிகர் எஸ்.வி.சேகர். அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் ஒன்றின் வழி அறிவித்தார். அதில் நடிகர் சங்கத்திலும் மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சியிலும் நிறைய குளறுபடிகள் இருந்ததாக இவர் காரணம் தெரிவித்துள்ளார்.

 

கடிதத்ததில், “நம் சங்க தேர்தல் முடிந்தபின் என்னை நடிகர் சங்க டிரஸ்டிக்களில் ஒருவனாக நியமித்து என்னுடைய அறிவுரை,ஆலோசனைகள்,வழி நடத்துதல் தேவை என கேட்டுக்கொண்டீர்கள். ஆனால் ஒரு வருடத்தில் பல மாற்றங்கள். கையெழுத்திடுவதற்கு மட்டும் டிரஸ்டி என்ற நிலை வந்த போது நான் பல மெயில்கள் அனுப்பியதற்கு எந்த பதிலும் அளிக்காமல் எனக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினீர்கள். என் பதில் கடிதத்தில் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை.

அதே போல் சமீபத்தில் மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவிலும் பல குளறுபடிகள்.பல கலைஞர்கள் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் என தெரிந்து கொண்டேன் . குறிப்பாக இயக்குனர் சங்கதலைவர் விக்ரமன்,R சுந்தரர்ராஜன், பார்த்திபன் ,இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் போன்ற பலர். இதன் பெயர்தான் நிர்வாக கோளாறு” என்று கூறியுள்ளார்.

மேலும், “ரஜினி கமலுக்கு மரியாதை கொடுப்பதில் தவறில்லை ஆனால் அதே மரியாதையை அனைத்து மூத்த கலைஞனர்களுக்கும் கொடுக்கத் தெரிய வேண்டும். அதை  எப்படி என்று நம் முன்னாள் தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் திருந்த வாய்ப்பில்லை.மலேசியாவில் பிச்சை எடுக்க வந்த தமிழ் நடிகர்கள் தலைப்பிட்டு வந்த பத்திரிகை பார்க்கவில்லையா? இத்தனை பணம் மலேசிய தமிழர்கள் மூலம் சம்பாதிக்கும் நாம் நலிந்த மலேசிய தமிழ்  குழந்தைகள் கல்விக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் குறைந்து போய் விடுவோமா?பணம் தேவைதான் ,அது சுய மரியாதையை விற்று சம்​பாதிப்பதை  என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“என் மனசாட்சிக்கு எதிராக நம் சங்கத்தின் பக்கம் ஏற்படும் தவறுகளுக்கு  நான் உடன்பட முடியாது என்பதாலும் டிரஸ்டி என்ற பதவி நடிகர் சங்கத்தை பொருத்த வரையில் ஒரு அலங்காரப்பதவியாக கருதப்படுவதாலும்,மற்ற சகா கலைஞர்களுக்கு உங்களால் ஏற்பட்ட அவமரியாதைக்காகவும் ​ எனக்களிக்கப்பட்ட டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று எஸ்.வி.சேகர் கடிதத்தில் தெரிவித்தார்.