ஈழ எழுத்தாளர் சயந்தனுக்கு ‘இளம் படைப்பாளருக்கான பிரமிள் விருது”

இளம் படைப்பாளிக்கான  “தி இந்துவின் Lit for life -2018 இன் “இளம் படைப்பாளருக்கான பிரமிள் விருது” எழுத்தாளர் சயந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று (07.01.2018) இந்த விருதினைப் பெற்றுக்கொண்டார் சயந்தன். இந்த விருதுத் தொகை இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் இலங்கை ரூபாய். இதைச் சயந்தன், இலங்கையின் மன்னார்ப் பகுதியில் இயங்கும் “மாற்றுத்திறனாளி மாதர்களின் நலனோன்பு – வன்னி” என்ற அமைப்பின் செயற்திட்டங்களுக்காக வழங்கியிருக்கிறார்.  விருதினைப் பெற்றதற்காக சயந்தனுக்கு வாழ்த்துகள். அதேவேளை, பாதிப்புக்குள்ளான ஒரு மக்கள் திரளுக்கு இந்த விருதினை வழங்கியிருப்பதையிட்டு சயந்தனுக்கு பாராட்டுகள். எழுத்தாளரின் சமூக அக்கறை என்பது எழுத்தில் மட்டுமல்ல, சாத்தியப்படுமிடங்களில் செயற்படுவதும்தான் என்பதற்கான அடையாளம் இது.

சயந்தனின் அடையாளம் இந்த விருதுகளுக்கும் இவ்வாறான பங்களிப்புகளுக்கும் அப்பாலானது. மேலும் மேலும் புதிய தளங்களை நோக்கி விரியக் கூடிய ஆற்றலை அவருடைய எழுத்துகளும் சமூகப் பங்களிப்புகளும் நிரூபித்துள்ளன.  “ஆதிரை” நாவல் சயந்தனுக்கு மிகப் பெரியதொரு பாய்ச்சலும் வலுவான தகுதியுமாகும். ஆனால், இதற்கு முன்பே அவருடைய முதல் நாவல், ஆறாவடு கவனத்தை உண்டாக்கியது. அதற்கு முன்பு “பெயரற்றது” என்ற சிறுகதைத் தொகுதி வெளியாகியிருந்தது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வரும் சயந்தன், மேலும் மேலும் விரிந்து ஆழமாகியே வந்திருக்கிறார். இப்பொழுது புதிதாகக் “கலையாடி” என்ற நாவலை எழுதியிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது கலையாடி. உண்மையில் கலையாடி மீதான எதிர்பார்ப்பை உண்டாக்கியது ஆதிரையே.

“ஆதிரை” தமிழ் நாவல்களில் தனித்துத் துலங்கும் ஒன்று. அதனுடைய கட்டமைப்பும் அரசியலும் அழகியலும் அதைச் சிறப்பித்தன. ஆதிரைப் பற்றி ஏராளமான விமர்சனங்களும் மதிப்பீடுகளும் எழுதப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் இன்னும் அதைப் பற்றி எழுதப்படக் கூடிய சாத்தியங்கள் உண்டு. சிறந்த எழுத்துகளுக்கான அப்படை இது. தலைமுறைகள் தோறும் கவனிக்கப்படும். பேசப்படும்.

சயந்தனையும் அவருடைய எழுத்துகளையும் ஆதிரையையும் சில மையங்கள் அடையாளம் கண்டிருக்கின்றன. “கனடா இலக்கியத் தோட்டம்” கடந்த ஆண்டு சயந்தனை அழைத்துக் கௌரவித்தது. இப்பொழுது “தி இந்து” “இளம் படைப்பாளருக்கான பிரமிள் விருது” வழங்கியுள்ளது. ஆனால், உண்மையில் ஈழத்திலேயே சயந்தனுக்கான விருது முதலில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆதிரையும் ஆறாவடுவும் பெயரற்றதில் உள்ள பல கதைகளும் ஈழ மண்ணைப் பற்றியவை. ஈழச்சனங்களைப் பற்றியவை. ஈழ வாழ்க்கையைப் பற்றியவை. ஈழச்சூழலைப் பற்றியவை. ஆகவே, ஈழமே முதல் மதிப்பை சயந்தனுக்குக் கொடுத்திருக்க வேணும். அதை வாசகர்கள் கொடுத்திருக்கிறார்கள்.   இருந்தாலும் இலங்கையிலுள்ள எந்த அமைப்புகளும் இதைச் செய்யவில்லை. இது தனியே சயந்தனுக்கு மட்டும் நathiraiிகழ்ந்த ஒரு பாராமுகமல்ல. ஏனைய படைப்பாளிகளுக்கும் நடந்ததுதான். புலம்பெயர் நாடுகளிலும் இலங்கையிலுமாகப் பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் மகத்தான பங்களிப்புகளை இலக்கியத்தில் செய்திருக்கிறார்கள். இலக்கியத்தின் வழியாக மொழிக்கும் பண்பாட்டிற்கும் வரலாற்றுக்கும் பங்களித்திருக்கிறார்கள். ஆண்டுதோறும் புதிய படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், எதுவும் பொருட்படுத்தப்படுவதில்லை. மாகாணசபைகளும் அரச சாதித்திய மண்டலமும் அவற்றை நாடுவோருக்கான பரிசில்களை வழங்குகின்றன. பொது அவதானிப்பின்படி தேர்வுகள் நடப்பதில்லை. இது ஏறக்குறைய ஒரு சம்பிரதாயபூர்வமான நிகழ்ச்சியே தவிர, முழுத்தேர்வின் அடிப்படையில் நடக்கும் ஒன்றல்ல.

இதை விட்டால், வேறு எந்த அமைப்பும் எந்தத் தரப்பும் எழுத்தாளர்களைக் கண்டு கொள்வதில்லை. பல்கலைக்கழகங்களில் இலக்கியம் ஒரு துறையாகப் போதிக்கப்படுகிறது. தமிழ்த்துறை மொழித்துறை என்ற பேரோடு துறைகள் இயங்குகின்றன. இதை விட வெளியே பல தமிழ்ச்சங்கங்களும் இலக்கிய அமைப்புகளும் உள்ளன. ஆனால், எவையும் நல்ல புத்தகங்களை அடையாளப்படுத்துவதில்லை. கௌரவிப்பதில்லை. விருதுவழங்குதில்லை. குறைந்த பட்சம் எழுத்தாளர்களையோ கவிஞர்களையோ விமர்சகர்களையோ அழைத்து உரையாடுவது கூட இல்லை.

இத்தகைய ஒரு உறைநிலைச் சூழலில் வெளியே – குறிப்பாகத்  தமிழ் நாட்டில் சயந்தனுக்கும் ஈழ இலக்கியத்துக்கும் கிடைத்திருக்கும் இத்தகைய அங்கீகாரம் பெரியதொரு அறிமுகத்தை பரந்த தளத்தில் உண்டாக்கும். மேலும் பல வாசகர்களை சயந்தனின் எழுத்துகளும் ஈழ இலக்கியமும் சென்று சேர வாய்க்கும். இதற்குக் காரணமான சயந்தனுக்கும் தி இந்து குழுமத்துக்கும் பிற நண்பர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த சயந்தன் வன்னியில் அகதி வாழ்க்கை அனுபவத்தோடு புலம்பெயர்ந்தவர். அவுஸ்ரேலியாவில் சில ஆண்டுகாலம் இருந்தார். பிறகு, சுவிற்சர்லாந்துக்குப் பெயர்ந்து தற்போது அங்கேயே வாழ்கின்றார்.

கருணாகரன்

நன்றி . தேனீ