சீனாவில் ஷாங்காய் அருகே சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி தீப்பிடித்தது, 32 சிப்பந்திகள் மாயம்

சீனாவில் ஷாங்காய் அருகே சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி தீப்பிடித்தது.

சீன கடலில், ஷாங்காய் அருகே பனாமா நாட்டு கொடியுடன் கூடிய ‘தி சாஞ்சி’ என்ற எண்ணெய் கப்பல் 1 லட்சத்து 36 ஆயிரம் டன் எண்ணெய்யுடன் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது.

அப்போது இந்த கப்பல், சி.எப். கிறிஸ்டல் என்ற சரக்கு கப்பலுடன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் எண்ணெய் கப்பலில் தீப்பிடித்தது. அதன் 32 சிப்பந்திகள் காணாமல் போனார்கள். அவர்களில் 30 பேர் ஈரான் நாட்டினர், 2 பேர் வங்காளதேச வாசிகள். விபத்தினால் சரக்கு கப்பலும் சேதம் அடைந்தது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று சரக்கு கப்பலின் சிப்பந்திகள் 21 பேரையும் பத்திரமாக மீட்டு விட்டனர். அவர்கள் அத்தனை பேரும் சீன நாட்டினர்.

எண்ணெய் கப்பல் நேற்று மதியம் வரை எரிந்து கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அந்த கப்பல் ஈரான் நாட்டின் குளோரி கப்பல் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்தது, தென்கொரியா நோக்கி சென்று கொண்டிருந்தபோதுதான் விபத்து நேரிட்டது.

விபத்தில் சிக்கிய சரக்கு கப்பல் ஹாங்காங் கொடியுடன் 64 ஆயிரம் டன் உணவு தானியங்களை சுமந்து கொண்டு சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.

மாயமான எண்ணெய் கப்பல் சிப்பந்திகளை தேடும் வேட்டையில் 8 கப்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. தென்கொரியா, அந்த பகுதிக்கு ஒரு விமானத்தையும், கடலோரக்காவல்படை கப்பலையும் அனுப்பி வைத்துள்ளது.