அமெரிக்காவுக்கு அடிபணிந்தது பாகிஸ்தான்: ஹபீஸ் சயீத்தின் ‘ஜமாத்-உத்-தவா’ பயங்கரவாத இயக்கம் என பாகிஸ்தான் அறிவிப்பு

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கிறது என்றும், நிதி உதவி பெறுவதற்காக அமெரிக்காவை ஏமாற்றிவிட்டது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அமெரிக்கா பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை. இப்போது பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடியாக நடவடிக்கையில் இறங்கி உள்ளது. முதல்கட்டமாக அந்த நாட்டுக்கு வழங்கவிருந்த 255 மில்லியன் டாலர்  ராணுவ நிதி உதவியை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தியது.
 இப்போது பாகிஸ்தானுக்கான ராணுவ நிதி உதவிகள் அனைத்தையும் அமெரிக்கா அதிரடியாக நிறுத்திவிட்டது.
 2017 நிதி ஆண்டுக்கான கூட்டணி ஆதரவு நிதி 900 மில்லியன் டாலர்  நிதி உதவியும் நிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் இப்போதும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுகிறோம் என பாகிஸ்தான் கூறிஉள்ளது.
இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான், இந்தியாவின் சொல்படி அமெரிக்கா நடக்கிறது எனவும் கூறியது. இதற்கிடையே ஹபீஸ் சயீத்தின் இயக்கங்களான ஜமாத்-உத்-தாவா மற்றும் பலாக்-இ-இசானியாத் பொதுமக்களிடம் இருந்து நிதிஉதவி பெறுவதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. அமெரிக்கா நிதிஉதவியை அளிக்க மறுத்ததை அடுத்து பாகிஸ்தான் ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா(லஷ்கர் இ தொய்பாவின் தாய் அமைப்பு) இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து உள்ளது. பாகிஸ்தானில் வெளியாகும் செய்தி பத்திரிக்கைகளில் இதுதொடர்பான விளம்பரத்தை அந்நாட்டு அரசு வெளியிட்டு உள்ளது.
உருது மொழியில் நாடு முழுவதும் பத்திரிக்கையில் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது, பிராந்திய மொழி பத்திரிக்கைகளிலும் வெளியிடப்பட்டு உள்ளது.
தொண்டு நிறுவனங்கள் என அழைக்கப்படும் ஹபீஸ் சயீத் இயக்கங்கள் உள்பட தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதிஉதவி வழங்குபவர்கள் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்க்கொள்ள வேண்டும், கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பான எச்சரிக்கை அடங்கிய விளம்பரங்கள் பாகிஸ்தான் முழுவதும் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டு உள்ளது.  ஜமாத்-உத்-தாவா, பலாக்-இ-இசானியாத், லஷ்கர்-இ-தொய்பா, மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது உள்பட 72 இயக்கங்களை பாகிஸ்தான் பட்டியலிட்டு உள்ளது.
பாகிஸ்தானின் பயங்கரவாத தடை சட்டம் 1997 மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சட்டம் 1948-ன் கீழ் பயங்கரவாத இயக்கங்கள் என பட்டியலிடப்பட்ட மற்றும் கண்காணிப்பின் கீழ் இருக்கும் இயக்கங்களுக்கு நிதிஉதவி வழங்குவது என்பது கிரிமினல் குற்றமாகும் என எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எச்சரிக்கையை மீறி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதிஉதவி வழங்கினால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும், 10 மில்லியனுக்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுடைய சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.