விக்ரம் பாலா மோதல்! விவகாரத்திற்குள் சிக்கிய இளையராஜா

விக்ரம் மகன் துருவ் பாலாவிடம் சிக்கி பல மாதங்கள் ஆச்சு. ஆனால் இன்னும் ஒரு முன்னேற்றமும் இல்லை. படம் துவங்குவது எப்போது? ஹீரோயின் யார்? படப்பிடிப்பு எங்கே? இதுபோன்ற எந்த தகவலும் யாருக்கும் தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள். பாலா மட்டும் நடுவில் ஒரு முறை அமெரிக்கா போய் வந்துவிட்டார். எதற்காக இந்த ட்ரிப்? சொந்த விஷயமா? அல்லது பட சம்பந்தப்பட்டதா? அதற்கான விளக்கங்களும் இல்லை.

இந்த நிலையில்தான் இப்படியொரு தகவல். என்ன?

பாலா படங்களில் பெரும்பான்மையான படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜாதான். பொதுவாகவே எந்த இயக்குனரும் ராஜாவிடம் கருத்து சொல்ல முடியாது. அவர் போட்டுத் தருவதுதான் பாட்டு. ஆனால் பாலா மட்டும், இது வேணாம். வேற கொடுங்க என்று கேட்கிற அளவுக்கு தைரியசாலி. இவரது தைரியத்தை ராஜாவும் பல நேரங்களில் ரசித்திருக்கிறார். சில நேரங்களில் கோபித்துக் கொண்டு ரெக்கார்டிங் ரூமிலிருந்து வெளியேறியும் இருக்கிறார் பாலா. டைரக்டர் இசையமைப்பாளர் தாண்டி, தந்தை மகன் உறவு போலவே இருக்கும் அந்த உறவு.

அப்படிப்பட்டவர், இந்தப்படத்திற்கும் இளையராஜா வேண்டும் என்று நினைப்பதுதானே சரி? அதுதான் நடந்திருக்கிறது. ஆனால், விக்ரம் குறுக்கே விழுந்து தடுக்கிறாராம். என் பையன் யூத். இளசுகளை கவர்கிற மாதிரி மியூசிக் வேண்டும் என்றால் யுவன், அல்லது அனிருத் பக்கம் போகலாம் என்கிறாராம். ஆனால் வழக்கம் போல பாலா, நான் சொல்றத கேட்கறதுன்னா உன் பையன இந்தப்பக்கம் அனுப்பு. இல்லேன்னா அப்படியே வீட்லயே வச்சுக்க என்கிற லெவலுக்கு புகைகிறாராம்.

ஓப்பனிங்கே உருமி மேளமா இருக்கே?