கத்தார் ஓபன் டென்னிஸ்: பிரான்சின் கெய்ல் மோன்பில்ஸ் சாம்பியன்

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டிகள் அந்நாட்டின் தலைநகரான தோஹாவில் கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், ரஷியாவின் அண்ட்ரே ருப்லெவ், பிரான்சின் கெய்ல் மோன்பில்சை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி முழுவதும் மோன்பில்ஸ் ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை 6-2 எனவும், இரண்டாவது செட்டை 6-3 எனவும் மோன்பில்ஸ் எளிதாக கைப்பற்றினார். இதன்மூலம் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற கெய்ல் மோன்பில்ஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இது மோன்பில்சின் ஏழாவது ஏ.டி.பி. சாம்பியன் பட்டமாகும்.

முன்னதாக நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் முதல் நிலையில் இருக்கும் புருனோ சோரஸ் (பிரேசில்) – ஜேமி முர்ரே (பிரிட்டன்) ஜோடி, இரண்டாம் நிலையில் இருக்கும் மேட் பவிக் (குரோசியா) – ஆலிவர் மரச் (ஆஸ்திரியா) ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில், 6-2, 7-6 என்ற நேர் செட்களில் மேட் பவிக் – ஆலிவர் மரச் ஜோடி வெற்றி பெற்ற இரட்டையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.