இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 286 ரன்னில் ஆல்–அவுட் இந்திய அணியும் திணறல்

இந்தியாவுக்கு எதிராக கேப்டவுனில் நேற்று தொடங்கிய முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது.
 இந்தியாவுக்கு எதிராக கேப்டவுனில் நேற்று தொடங்கிய முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அபாரமாக பந்து வீசிய இந்திய பவுலர் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரஹானே நீக்கம்3 டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் துணை கேப்டன் ரஹானே அதிரடியாக கழற்றி விடப்பட்டு ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. முகமது ‌ஷமி, புவனேஷ்வர்குமார், அறிமுக வீரராக ஜஸ்பிரித் பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம் பிடித்தனர். தென்ஆப்பிரிக்க ஆடும் லெவனில் டேல் ஸ்டெயின், மோர்னே மோர்கல், வெரோன் பிலாண்டர், காஜிசோ ரபடா ஆகிய 4 வேக சூறாவளிகள் அங்கம் வகித்தனர்.

மிரட்டிய புவனேஷ்வர்‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதன்படி டீன் எல்கரும், எய்டன் மார்க்ராமும் தென்ஆப்பிரிக்காவின் இன்னிங்சை தொடங்கினர்.

ஓரளவு புற்களுடன் கூடிய உயிரோட்டமான இந்த ஆடுகளத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்குதலை தொடுத்தனர். புவனேஷ்வர்குமார் வீசிய முதல் ஓவரின் 3–வது பந்திலேயே டீன் எல்கர் (0) விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் ஆனார்.

ஆடுகளத்தில் பவுன்சுடன், ‘ஸ்விங்’கும் ஆனதால் நமது பவுலர்கள் உற்சாகமாக பந்து வீசி, தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினர். புவனேஷ்வர்குமார் தனது அடுத்த இரு ஓவர்களில் மார்க்ராம் (5 ரன்), அம்லா (3 ரன்) ஆகியோரையும் போட்டுத் தாக்கினார்.

டிவில்லியர்ஸ் அரைசதம்12 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை (4.5 ஓவர்) பறிகொடுத்து தென்ஆப்பிரிக்க அணி தத்தளித்த சூழலில் முன்னாள் கேப்டன் டிவில்லியர்சும், கேப்டன் பாப் டு பிளிஸ்சிசும் கைகோர்த்தனர். தடுப்பாட்டத்தை தவிர்த்து அதிரடியில் இறங்குவதே சாலச்சிறந்தது என்ற நோக்குடன் டிவில்லியர்ஸ் மட்டையை வேகமாக சுழட்டினார். புவனேஷ்வர்குமாரின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விரட்டியடித்தார். உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்திய அவர் 55 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். சரிவில் இருந்து மீண்ட தென்ஆப்பிரிக்க அணி மதிய உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

உணவு இடைவேளைக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா மறுபடியும் தடுமாற்றத்திற்கு உள்ளானது. டிவில்லியர்ஸ் 65 ரன்களில் (84 பந்து, 11 பவுண்டரி) பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொண்ட போது, பந்து பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. சிறிது நேரத்தில் பிளிஸ்சிஸ்சும் (62 ரன், 104 பந்து, 12 பவுண்டரி) நடையை கட்டினார். அச்சமயம் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 142 ரன்களுடன் இருந்ததால் எப்படியும் அவர்களை 200 ரன்னுக்குள் முடக்கி விடலாம் என்று இந்திய வீரர்கள் கணக்கு போட்டனர்.

தென்ஆப்பிரிக்கா 286 ரன்ஆனால் பின்வரிசை வீரர்களை காலி செய்வது தான் இந்திய பவுலர்களுக்கு உண்மையிலேயே சிரமமாக போய் விட்டது. துரிதமான ரன் சேகரிப்பில் ஈடுபட்ட விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக், பும்ராவின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசியதுடன் தனது பங்குக்கு 43 ரன்கள் (40 பந்து, 7 பவுண்டரி) எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

கடைநிலை வீரர்கள், இந்தியாவின் ஆக்ரோ‌ஷமான பந்து வீச்சை சமாளித்த விதம் ஆச்சரியப்படுத்தியது. வெரோன் பிலாண்டர் (23 ரன், 4 பவுண்டரி), கே‌ஷவ் மகராஜ் (35 ரன், 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரபடா (26 ரன், ஒரு சிக்சர்), ஓராண்டுக்கு பிறகு சர்வதேச களத்திற்கு திரும்பிய ஸ்டெயின் (16 ரன்) ஆகியோர் அளித்த கணிசமான பங்களிப்பு தென்ஆப்பிரிக்க அணி சவாலான ஸ்கோரை எட்ட வித்திட்டது. முடிவில் அந்த அணி முதல் இன்னிங்சில் 73.1 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதில் கடைசி 5 வீரர்கள் 102 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்க வி‌ஷயமாகும்.

இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

புவனேஷ்வர்குமார் சாதனை*ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் முத்திரை பதித்து வரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் மூலம் நேற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். 24 வயதான பும்ரா இந்தியாவின் 290–வது டெஸ்ட் வீரர் ஆவார். தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் பயணத்தை தொடங்கிய 7–வது இந்தியர் ஆவார்.

*இந்த டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் முதல் ஓவரிலேயே, டீன் எல்கரின் விக்கெட்டை கபளீகரம் செய்தார். இந்திய துணை கண்டத்துக்கு வெளியே இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர், தொடக்க ஓவரிலேயே விக்கெட் எடுப்பது 1992–ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

*‘ஸ்விங்’ செய்வதில் கில்லாடியான புவனேஷ்வர்குமார் தனது முதல் மூன்று ஓவர்களில் 3 விக்கெட்டுகளை சாய்த்து அமர்க்களப்படுத்தினார். 2001–ம் ஆண்டுக்கு பிறகு வெளிநாட்டு டெஸ்டில் ஒரு பவுலர் தனது மூன்று ஓவர்களில் 3 விக்கெட்டுகளை எடுப்பது இது 3–வது நிகழ்வாகும். நியூசிலாந்தின் ஜேம்ஸ் பிராங்ளின் (ஜிம்பாப்வேக்கு எதிராக, 2005–ம் ஆண்டு), ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் (வங்காளதேசத்துக்கு எதிராக, 2017–ம் ஆண்டு) ஆகியோர் ஏற்கனவே இத்தகைய சாதனையை படைத்துள்ளனர்.

ஒரே ஓவரில் ஏமாற்றமும்…மகிழ்ச்சியும்….

தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்சுக்கு, 36–வது ஓவரின் போது ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. கேட்டு இந்திய வீரர்கள் முறையிட்டனர். நடுவர் ரிச்சர்ட் கெட்டில்போரப் விரலை உயர்த்த மறுத்ததால் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தனர். ‘ரீப்ளே’யில் பந்து, நடு ஸ்டம்பை மேல்வாக்கில் தட்டுவது போல் தெரிந்தது. ஆனால் 3–வது நடுவர், கள நடுவரின் முடிவுக்கு விட்டதால் அவர் நாட்–அவுட் என்று அறிவித்து விட்டார். இதனால் கோலி, பாண்ட்யா ஏமாற்றத்தில் உரக்க கத்தினர். ஆனால் அதே ஓவரில் அடுத்த 2 பந்திலேயே பிளிஸ்சிஸ் விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் ஆனதால், அந்த ஏமாற்றம் பூரிப்பாக மாறியது.