ஆஸி. ஓபனில் இருந்து ஆண்டி மர்ரே விலகல்

 காயம் காரணமாக இங்கிலாந்தின் ஆண்டி மர்ரே ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 15ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இதில், ஆசிய நம்பர்-1 வீரரான ஜப்பானின் நிஷிகோரி காயம் காரணமாக சமீபத்தில் விலகினார். இதைத்தொடர்ந்து, முன்னாள் நம்பர்-1 வீரரான இங்கிலாந்தின் ஆண்டி மர்ரேவும் தற்போது விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு விம்பிள்டன் தொடரின் கால் இறுதியில் தோற்ற பிறகு, இடுப்பு காயம் காரணமாக எந்த போட்டியிலும் மர்ரே பங்கேற்காமல் இருந்தார்.

இன்னும் காயம் முழுமையாக குணமாகாததால் ஆஸ்திரேலிய ஓபனில் இருந்தும் விலகுவதாக அவர் நேற்று அறிவித்துள்ளார். இதே போல, முன்னாள் நம்பர்-1 வீரரும், 6 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற செர்பியாவின் ஜோகோவிச்சும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். ஏற்கனவே அபுதாபி, கத்தார் ஓபனில் இருந்து விலகிய ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பது குறித்து அடுத்த வாரம் உறுதி செய்வதாக கூறி உள்ளார்.