(அஸ்லம் எஸ்.மௌலானா)- (காரைதீவு நிருபர் சகா)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த வருடம் திண்மக்கழிவகற்றல் சேவைக்காக 55 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டிருப்பதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

அதேவேளை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு சுமார் 06 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான எரிபொருள் எமது மாநகர சபையினால், கல்முனை பிராந்திய சுகாதார துறையினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த வாரம் தொடக்கம் வகைப்படுத்தப்படாத குப்பைகள் எக்காரணம் கொண்டும் கல்முனை மாநகர சபையினால் பொறுப்பேற்க மாட்டாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக இன்று வியாழக்கிழமை (04) அப்பிரதேசம் முழுவதும் கொத்தணி முறையிலான திண்மக் கழிவகற்றல் விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே ஆணையாளர் மேற்படி விடயங்களை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற சேவைகளுள் திண்மைக் கழிவகற்றல் நடவடிக்கைகளுக்கே அதிகூடிய பணம் செலவு செய்யப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு மாத்திரம் எமது மாநகர சபையின் 55 மில்லியன் ரூபா நிதி திண்மைக் கழிவகற்றல் சேவைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் கடந்த வருடம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நான்கு வலயங்களில் மொத்தம் 15854 ஆயிரம் கிலோ கிராம் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. குறிப்பாக சாய்ந்தமருதில் 5551 ஆயிரம் கிலோ கிராம், கல்முனைக்குடியில் 5095 ஆயிரம் கிலோ கிராம், கல்முனை நகரம், நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதிகள் உள்ளடங்கிய வலயத்தில் 3425 ஆயிரம் கிலோ கிராம், மருதமுனை, பெரிய நீலாவணை ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கிய வலயத்தில் 4863 ஆயிரம் கிலோ கிராம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு பாரிய நிதியினை செலவிட்டு கல்முனை மாநகர சபை திண்மக் கழிவகற்றல் சேவையை மேற்கொண்டு வருகின்ற போதிலும் பொது மக்களின் ஒத்துழைப்பு போதாமையாகவே இருந்து வருகின்றது. குப்பைகளை வகைப்படுத்தாமல் கையளிப்பதும் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் குப்பைகளை வீசுவதும் எமக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது. பொதுவாக கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் அன்றாடம் சேருகின்ற குப்பைகளில் 90 வீதமானவை எம்மால் சேகரித்து அகற்றப்படுகின்றன.
உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கண்டிப்பான பணிப்புரையின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் நாடு முழுவதும் வகைப்படுத்தப்பட்ட குப்பைகள் மாத்திரமே உள்ளூராட்சி மன்றங்களினால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் இத்திட்டம் வெற்றியளித்துள்ளன.
அது போன்று கல்முனையிலும் நடைமுறைக்கு வந்துள்ள இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு இப்பகுதி வாழ் பொது மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம். அந்த வகையில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அடுத்த வாரம் தொடக்கம் வகைப்படுத்தப்படாத குப்பைகள் எக்காரணம் கொண்டும் கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் வாகனங்கள் பொறுப்பேற்க மாட்டாது என்பதை கண்டிப்பாக அறியத்தருகின்றேன்.
குப்பைகள் வகைப்படுத்தி ஒப்படைக்கப்படுமாயின் அவற்றை துரிதமாகவும் கூடுதலான அளவிலும் சேகரித்து, அகற்ற வாய்ப்புள்ளது என்பதை பொது மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன்படி உக்கக்கூடிய கழிவுகளான சமையல் மற்றும் உணவுக் கழிவுகள், இலைகுழைகள் போன்றவற்றை ஒரு பொதியிலும் உக்க முடியாத பிளாஸ்டிக் போத்தல்கள், உலோகப் பொருட்கள், பொலித்தீன் பைகள், இலத்திரனியல் கழிவுகள், காட்போட் என்பவற்றை மற்றொரு பொதியிலும் உடைந்த கண்ணாடிகளை வேறாகவும் ஒப்படைக்க வேண்டும்.
அதேவேளை பொது இடங்கள் மற்றும் வீதிகளில் குப்பைகள் வீசப்படுவதனால் துர்நாற்றம், சூழல் பாதிப்பு என்பவற்றுக்கு அப்பால் அவற்றுள் டெங்கு பெருக்கக்கூடிய கொள்கலன்கள் காணப்படுவது மிகவும் ஆபத்தான விடயமாக காணப்படுகின்றது. ஆகையினால் இவ்வாறு குப்பைகளை  போடுவோருக்கு எதிராக பொலிஸார் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன்.
கடந்த வருடம் கல்முனை பிராந்திய சுகாதாரத்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட டெங்கு நுளம்புகளை அழிப்பதற்கான புகை விசுறும் நடவடிக்கைகளுக்கு எமது மாநகர சபையினால் சுமார் 06 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான எரிபொருட்கள் வழங்கப்பட்டதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இதன்படி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 345720 ரூபா, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு 168624 ரூபா, கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு 79426 ரூபா, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு 51040 ரூபா பெறுமதியான எரிபொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இது தவிர கடந்த சில வருடங்களாக கல்முனைத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு கல்முனை மாநகர சபையானது ஆளணி மற்றும் இயந்திர வளங்களை வழங்கி பாரிய பங்களிப்பை செய்து வருகின்றது” என்று ஆணையாளர் ஜே.லியாகத் அலி மேலும் குறிப்பிட்டார்.

By admin