ஹிந்து பெண்ணுக்கு பாதுகாப்பு : பாக்., கோர்ட் அதிரடி உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான, ஹிந்து பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அண்டை நாடான, பாகிஸ்தானின், சிந்து மாகாணத்தில், மாதந்தோறும், 20 – 25 ஹிந்து பெண்கள், வலுக்கட்டாயமாக, இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுவதாக, மனித உரிமை கமிஷன் கூறியுள்ளது.
இம்மாகாணத்தில், வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், அப்பகுதியில் வசித்து வரும் ஹிந்து பெண்ணை, பலாத்காரம் செய்துள்ளான்.
இந்த சம்பவம் தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட, டி.என்.ஏ., சோதனையில், அப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது.
இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவர் குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி, தலைமை நீதிபதி, அஹமது அலி ஷேக் உத்தரவிட்டார். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டு உள்ள நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, போலீசுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்த வழக்கை பாரபட்சமின்றி விசாரிப்பதற்காக, தன் கண்காணிப்பில், சிறப்பு குழு அமைத்து உள்ளதாக, நீதிமன்றத்தில், போலீஸ், டி.ஐ.ஜி., தெரிவித்தார்  – நன்றி : தினமலர்