காரைதீவின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டால்  காரைதீவைப் இழக்கவேண்டிநேரிடும்!
சுயேச்சைக்குழுத்தலைவர் சி.நந்தகுமார் தெரிவிப்பு!
(காரைதீவு  நிருபர் சகா)
இலங்கையில் தனிமுகவரியுடன் திகழும்  காரைதீவு மண்ணின் தனித்துவம் இருப்பு இறைமை  பாதுகாக்கப்படவேண்டுமானால் காரைதீவு மக்களின் ஒட்டுமொத்த ஒற்றுமை அவசியமாகும். காரைதீவின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டால் காரைதீவை நாம் இழக்கவேண்டிவரும்
இவ்வாறு எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் காரைதீவு பிரதேசசபைக்காக போட்டியிடும் சுயேச்சைக்குழு-1 இன் தலைமை வேட்பாளரும்  பிரபல சமூகசெயற்பாட்டாளருமான சந்திரசேகரம் நந்தகுமார்  தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
முத்தமிழ் வித்தகன் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் வழித்தோன்றல்களால் ஒற்றுமையாகத் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் தோற்றம் பெற்றதே சுயேச்சைக்குழுவாகும். அக்குழுவில் காரைதீவில் அரசியல் சாயமற்ற தரமான சமுகநோக்குடைய ஊழலற்ற வேட்பாளர்கள் 14பேர் இடம்பெற்றுள்ளனர். கண்ணகைத்தாயின் அருளால் அவர்கள் எவ்வித சவாலுமின்றி மக்கள்சக்தியால் வெற்றிபெறுவார்கள் என்பது எனது பூரண நம்பிக்கை.
இந்த வேட்பாளர்கள் அனைவரும் பொதுச்சேவைகளில் தடம்பதித்தவர்கள். ஊர்ப்பிறந்தவர்கள்.ஏலவே தேசியத்திற்காக அரசியலில் ஆதரவளித்தவர்கள். எவ்வித ஊழலுமற்ற நேர்மையானவர்கள். தரமானவர்கள். இளந்தலைமுறையினர் பொருத்தமானவர்கள்.
இவர்களை 100வீதம் வெற்றியடையச்செய்வதுதான் காரைதீவார்களுடைய தார்மீக கடமை.விபுலபுரி மண் மைந்தர்களின் தனித்துவம் உலகெங்கும் பறைசாற்றப்படவேண்டும். இதற்கு அனைவரும் பூரண ஒற்றுமையோடு செயற்படுவார்கள் என்பது எமது நம்பிக்கை.
இதனை த.தே.கூட்டமைப்போ அல்லது எந்த ஒரு கட்சியோ மீறாது என்பது எமதூர் மக்களின் கருத்து. அதனை மீறி யாராவது தேர்தலில் இறுதிவரை நிற்கமுனைந்தால் ஊர்ஒற்றுமையை குழப்பியவர்கள் துரோகிகள் என்ற வரலாற்றுப்பழியைச் சுமக்கவேண்டிவரும்.
எந்தவொரு கட்சியும் அத்தகைய ஈனச்செயலில் ஈடுபடாதென்பது காரைதீவு மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையாகும். கல்வியும் வீரமும் போற்றப்பட்ட காரையூர்மண்ணில் பிறந்த எவரும் அத்தகைய துரோகச்செயலில் ஈடுபடமாட்டார்கள் என்றார்.

By admin