சமுக நல்லிணக்கத்தை ஏற்படுத்த இளைஞர்களின் பங்களிப்பு அவசியமாகும்! -மனிதஉரிமை செயற்பாட்டாளர் ஸ்ரீகாந்த்

காரைதீவு நிருபர் சகா

சமுக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியமாகும். அதனால்தான் நாம் ஒருவருட மனிதஉரிமைக்கல்வி ஊடாக இளைஞர்களை உள்ளீர்த்து நல்லிணக்கத்திற்கு வழிவகுத்தோம்.

இவ்வாறு அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கான மனித உரிமைக்கல்வி செயற்றிட்டத்தின் (REYAD) ஒருவருடநிறைவையொட்டி நடாத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில்   கலந்து கொண்டுரையாற்றிய மனித அபிவிருத்தித் தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

இச்செய்தியாளர் மாநாடு காரைதீவு மாளிகைக்காடு பிஸ்மில்லா விடுதியில் நடைபெற்றது.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

இளைஞர்களுக்கான இச்செயற்றிட்டத்தினூடாக அரசாங்கத்தினால் எதிர்வரும் 8ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவிருக்கின்ற தேசிய நல்லிணக்க வாரத்திற்கு பங்களிப்புச்செய்யவிருக்கின்றோம்.

கடந்த ஒருவருட காலமாக அம்பாறை மாவட்ட மூவின இளைஞர்கள் மாணவர் மத்தியில் அமெரிக்கா தூதரகத்தின்  கலாச்சார பிரிவின் அனுசரணையில்   அம்பாறை மாவட்டத்திலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் உயர் கல்வி கல்லூரிகளை உள்ளடக்கியதாக 25 பயிற்சி வகுப்புக்கள் நடாத்தப்பட்டன.

இதில் 607 ஆண்கள், 717 பெண்கள் அடங்களாக 1324 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்கள். இது நல்ல பின்னூட்டல்களைத் தந்துள்ளன.

இக்கருத்தரங்குகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, வலயக்கல்வி அலுவலகம், உயர் தொழிநுட்ப கல்லூரிகளின் அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்புடன் நடாத்தப்பட்டன. இதற்கு வளவாளர்களாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள், சிவில் அமைப்பு செயற்பாட்டாளர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் ஆகியோர்கள்  கலந்து கொண்டு நடாத்தினார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் (REYAD) செயற்திட்ட பயிற்சிகளில் கலந்து கொண்டவர்கள், பிரதேச மட்டத்தில் பதிவு செய்து செயற்படும் இளைஞர் கழகங்களின் அங்கத்துவ இளைஞர்கள் என்ற அடிப்படையில் பல்லின இளைஞர்களை ஒன்றிணைத்து கல்முனை நகரில் மனித உரிமைகளை பலப்படுத்தல் ஊடாக சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்தல் தொடர்பான மகாநாடு நடாத்தப்பட்டது. இந் நிகழ்வுக்கு மாவட்டத்திலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ இளைஞர்கள், கிராமட்ட அமைப்புக்களின் தலைவர்கள், அரச மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக 300 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

எமது செயற்திட்டத்தின் அடிப்படையில் சமூக நல்லிணக்கம் தொடர்பான வீதி நாடகம் அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக ஒன்று கூடும் பொது இடங்களான கல்முனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை போன்ற இடங்களில் நடாத்தப்பட்டன.

மற்றொரு விடயம். கிராமட்ட மக்களுக்கிடையே காணப்படும் கலாச்சார ரீதியான தடைகள் காரணமாக இளவயது திருமணம் அதிகாரிக்கின்றது. அதனால் ஏற்படும் மனித உரிமை மீறல்கள் நிரந்தர சமாதானத்திற்கு பாதகம்  ஏற்படுகின்றன. இதனை இல்லாது செய்து சம உரிமையுடன் கூடிய நல்லுறவை பலப்படுத்தல், கிராமமட்ட மக்களின் உரிமையை பாதுகாத்தல் தொடர்பான துண்டு பிரசுர பிரச்சாரம் கிராமமட்டத்திலும், சமூக மட்டத்திலும் செய்யப்பட்டுள்ளது. என்றார்.

செய்தியாளர் மாநாட்டில் உதவி இணைப்பாளர் எம்.ஜ.றியால் மகளிரணித்தலைவி எம்.எவ்.நுஸ்ரத் ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.

இறுதியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தனர்.

By admin