தமிழக அரசியலை ஆட்கொள்ள ஆன்மிகம் மட்டும் போதாது.. மலேசியா துணை முதல்வர் பரபர அறிக்கை

ஆன்மீகத்திற்கும் அரசியலிற்கும் வேறுபாடு தெரியாதவரா ரஜினிகாந்த் ?-

நடிகர் ரஜினிகாந்த்த்தின் ஆன்மீக அரசியல் மூலம், தமிழகத்து அரசியலை ஆட்கொள்ள முடியாது என்று மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவரது பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் விரிவான, விமர்சன அறிக்கை ஒன்றை ராமசாமி வெளியிட்டுள்ளார். அதில், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அவர் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பான பேராசிரியர் ராமசாமியின் அறிக்கை: இரண்டு தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்டது, விரைவில் நனவாகவுள்ளது. கடந்த 31 டிசம்பர் 2017 அன்று, தென்னிந்தியாவின் சூப்பர்ஸ்டார், திரைப்பட்ட நட்சத்திரம் ரஜினிகாந்த், தாம் அரசியல் கட்சி ஆரம்பித்து 2021-இல் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் தமிழ்நாட்டின் திரைத்துறையில் இருந்து சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ரஜினிகாந்த். அவற்றில் பல வெற்றிப்படங்கள். ரஜினியின் கபாலி திரைப்படம், உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்து தமிழர்களிடம் பாராட்டை பெற்றதோடு, 100 மில்லியன் மலேசிய ரிங்கிட்டுக்கு மேல் வசூலை குவித்தது. இந்தியாவின் அதிகம் ஊதியம் வாங்கும் நடிகரில் ரஜினி ஒருவர். தமிழகத்தின் சென்னையில் இருந்துதான் இவர் இந்த புகழை அடைந்தார். சுமார் இரு தசாப்தங்களாக, அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா என்ற இழுபறியான நிலையில்இருந்த ரஜினி, இறுதியாக, அரசியல் நிலையற்றத்தன்மையை மாற்றி தமிழகத்தை காப்பாற்ற அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

அது என்ன ஆன்மீக அரசியல் ?

தனது உரையில், தமிழ்நாட்டு அரசியலின் நிலைக்கு காரணம் தமிழ்நாட்டை ஆண்டு வந்த இரு திராவிட கட்சிகளான திராவிட முன்னேற்ற கழகம், மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். சுயநலமில்லா தமது தொண்டர்களின் உழைப்பில், ஒரு புதிய அரசியல் மாற்றத்தை தனது கட்சி ஏற்படுத்தும் என்ற ரஜினியின் பேச்சு, இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகம் எங்கிலும் ஊடகங்களின் தலைப்புசெய்தியாக வெளிவந்தது. தனது அரசியல் பயணம் சாதி, மத பேதமற்ற “ஆன்மிக அரசியல்” என்று அவர் கூறியுள்ளார்

திட்டமிட்டு நடக்கிறதா ?

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி, தமிழகம் உட்பட்ட தென்னிந்திய மாநிலங்களில் தனது இருப்பை நிலைக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ரஜினியின் அரசியல் அறிவிப்பு வெளிவந்துள்ளது திட்டமிடப்பட்டதா, அல்லது எதேட்சையாக நடந்ததா என்பது தெரியவில்லை. தமிழகத்தில் வேருன்ற, பாஜக-விற்கு தமிழகத்தில் கூட்டணி நண்பர்கள் வேண்டும் என்பது பரவலான கருத்தாக இருக்கின்றது. ரஜினியும், பாஜகவும் கூட்டணி சேர்வார்களா என்பது, போக, போகத்தான் தெரியும். பாஜக முன்னெடுத்து செல்லும் மதவாத அரசியலும், ரஜினி முன்வைக்கும் “ஆன்மிக அரசியலுக்கும்” நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அதேவேளையில், அரசியல் அனுபவம் குறைவான, தமிழரல்லாத ரஜினி, ஒரு கட்டத்தில் பாஜகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழகத்தைச் சேர்ந்தவரா ரஜினி

ரஜினி, தமிநாட்டை சேர்ந்தவரல்ல, அவர் ஒரு தமிழரும் அல்ல. கர்நாடகாவில் ஒரு பேருந்து நடத்துனராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, தமிழ்நாட்டுக்கு வந்து திரைத்துறையில் தனக்கென ஒரு பெயரை பதித்துள்ளார். தமிழ் திரையுலகின் ஒரு சிறந்த நடிகர் ரஜினி. உலகமெங்கிலும் இரசிகர்களை கொண்டுள்ளார். உலகின் பல நாடுகளிலும் ரஜினியின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. மலேசியாவில் படமாக்கப்பட்ட “கபாலி” போன்ற திரைப்படங்கள், தமிழர் அல்லாதோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவ்வாறு ரஜினியின் நடிப்புக்கு ரசிகர்களுள் ஒருவர், மலேசிய பிரதமர் நஜீப் ராசாக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தால்தான், தனது அண்மைய இந்த்ய பயணத்தின் போது, அவர் ரஜினியை அவரது இல்லத்திலேயே சென்று சந்தித்தார்.