காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு எந்தவித தீர்வையும் பெற்றுத்தராதவர்கள் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் இந்த விடயத்தை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையிலும் எங்களின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.

மக்கள் பிரதிநிதிகளால் தாங்கள் ஏமாற்றப்பட்ட நிலையில் தங்களின் பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் 316 நாட்கள் ஆகின்றன.
இரவு பகலாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வீதியில் போராடி வருவதாகவும், தாங்கள் அனைத்து தரப்பினராலும் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தர முடியாதவர்கள் தங்களின் பிரச்சினையை தேர்தல் காலங்களில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக் கூடாது எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.