அதிரடிக்கு தயாராகும் டிடிவி தினகரன்: சட்டப்பேரவையில் பேசப்போவதை பொறுத்திருந்து பாருங்கள்!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டசபை உறுப்பினராகியுள்ள டிடிவி தினகரன் தனது அரசியல் பயணத்தில் நீண்ட காலத்துக்கு பின்னர் வெற்றி அடைந்துள்ளார்.

 ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தனக்கு போட்டியாக நின்ற அதிமுகவின் மதுசூதனனை சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கி வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார் தினகரன். இவரது வெற்றியால் எதிர் தரப்பினர் சற்று கலங்கிப்போய் உள்ளனர். தினகரனின் இந்த வெற்றி அவரை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. இதனால் அவர் அடுத்தடுத்த தனது திட்டங்களுடன் புலிப்பாய்ச்சலுக்கு தயாராகியுள்ளார்.
ஆர்கே நகர் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி பதவியேற்றுக்கொண்ட தினகரன் புத்தாண்டையொட்டி மன்னார்குடியில் உள்ள தட்டன்கோவில் குலதெய்வம் கோவிலில் வழிபாடு நடத்த சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அதிமுகவினர் தோல்வி பயத்தால் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருக்கின்றனர். சட்டப்பேரவையில் என்ன பேசப்போகிறேன் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என அதிரடியாக கூறியுள்ளார்.
வரும் 8-ஆம் தேதி சட்டசபை கூட உள்ள நிலையில் தனது முதல் பேச்சை சட்டமன்றத்தில் ஆரம்பிக்க உள்ளார் தினகரன். இதனை அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.