ரஜினி அரசியலுக்குப் பின்னால் பெரும் முதலாளிகள்… பகீர் கிளப்பும் பழங்குடி மக்கள் சங்கம்!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் திடீரென அரசியல் களத்தில காலடியெடுத்து வைப்பது பெரும் முதலாளிகளின் சதியே என்று தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் தலைவர் குணசேகரன் கூறியுள்ளார். ரஜினியின் அரசியலுக்குப் பின்னால் ஏழை, எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க சக்திகள் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பு அவர் பாஜகவின் முகமாக செயல்படுவார் என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது. ஆனால் யாருமே பார்க்காத ஒரு கோணத்தில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் தலைவர் வி.பி.குணசேகரன் ரஜினியில் அரசியல் வருகையை விமர்சித்துள்ளார். அவர் இது குறித்து கூறும் போது, நேற்று இரவு முதல் நாடெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்றைய புத்தாண்டு பிறக்கை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இதே சமயத்தில் தான் நாட்டிலுள்ள 95 சதவீத மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடாமல், அதற்கான எந்த மகிழ்ச்சியுமில்லாமல் தங்களின் அன்றாட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

உழைத்தால் தான் சாப்பாடு. தமிழகமெங்கும் உள்ள பல லட்சம் மக்கள் சாப்பாட்டுப் பையை கையில் எடுத்துக்கொண்டு இன்று காலையே அறுவடைக்கும், உழவுப் பணிகளுக்கும், ஆடு-மாடுகளை மேய்க்கவும், நெசவு செய்யவும், கூலிவேலைக்கும் சென்றுள்ளனர். அவர்களெல்லாம் இன்று உழைத்தால் மட்டுமே நாளைக்கு சாப்பாடு என்ற நிலையில் உள்ளனர்.

ஏழை ஏழையாகவே இருப்பதற்கு காரணமான அரசியல் இந்த ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையில் அரசியல் தினமும் குறுக்கிடுகிறது. அதுதான் இவர்களை இந்த நிலையில் வைத்துள்ளது என்பது அவர்களுக்கே புரியவில்லை. ஏழை, ஏழையாகவே இருக்கவும், பணக்காரன் மேலும் பணக்காரானாக மாறிக் கொண்டிருப்பதற்கும் காரணமே இந்த அரசியல்தான் என்பது இவர்களுக்கு தெரியவில்லை.
அரசியில் நிலை தாழ்ந்துவிட்டது கடந்த ஒரு ஆண்டாக தமிழகத்தில் அரசியல் மிகவும் தாழ்ந்த நிலைக்கு சென்றுவிட்டது. அதை மாற்றம் செய்ய இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தான் ஆரசியலில் கால் வைக்கப்போவதாகவும், அதுவரை யாரைப்பற்றியும் எந்த விமர்சனமும் செய்யப் போவதில்லை என்று ரஜினி கூறியிருப்பது மக்களை ஏமாற்றும் வேலை.

அரசியல் விழிப்புணர்வு தேவை நம் நாட்டு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு தேவை. அந்த விழிப்புணர்வு வந்து விட்டாலே நல்ல ஆட்சி வந்துவிடும். இதற்காக ரஜினி அரசியலுக்கு வரவேண்டிய அவசியமே இல்லை. மகளுக்கான போதிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டாலே போதுமானது. அரசியல் தானாக நல்ல நிலைக்கு வந்துவிடும்.

திடீர் அரசியல் பின்னணியில் பெரும்முதலாளிகள் சாமானிய மக்களுக்கும் சரி, நடிகர் நடிகர் ரஜினிகாந்துக்கும் சரி, போதிய விழிப்புணர்வு இல்லாத இந்த திடீர் அரசியல் வெற்றி பெறாது. வெற்றி பெறவும் கூடாது. கால் நூற்றாண்டுகாலம் சமூகத்தில் இருந்து முற்றிலும் விலகியிருந்த ரஜினி, இன்று தீடீரென தமிழக அரசியல் களத்தில் கால் வைப்பதன் பின்னணியில் இந்தியாவின் பெரும் முதலாளிகள் அல்லது ஏழை, எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்பது தெரிகிறது. இது சமூகத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.