அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் வழங்கியதெல்லாம் பொய்களும் வஞ்சகமும்தான்: அதிபர் ட்ரம்ப் கடும் சாடல்

இந்த ஆண்டின் தன் முதல் ட்வீட்டிலேயே அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்புப் புகலிடம் அளிக்கிறது என்று சாடியுள்ளார்.

கடுமையான வார்த்தைகளில் அமைந்த ட்வீட் இதோ:

கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக 33 பில்லியன் டாலர்களை உதவி என்ற பெயரில் வழங்கியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் நமக்குத் திருப்பிக் கொடுத்ததோ பொய்களும் வஞ்சகமும்தான்.

ஆப்கானிஸ்தானில் நாம் தேடும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் புகலிடம் அளிக்கிறது.என்று பதிவிட்டுள்ளார்.

ஆகஸ்டில் அவர் வெளியிட்ட புதிய தெற்காசிய கொள்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கவில்லையெனில் பாகிஸ்தானுக்கு எதிராக மேலும் கிடுக்கிப் பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.