இல்லம் இல்லாவிட்டிருந்தால் இன்றையநிலை இல்லை!
மாணவரில்லத்தில் 12வருடங்களிருந்து உயர்தரத்தில் 3ஏபெற்றமாணவன் கிஷோர் கூறுகிறார்!
எதிர்காலத்தில் வழக்கறிஞராகி நிருவாகசேவையிலீடுபடுவதே இலட்சியம் என்கிறார் கிஷோர்!
(காரைதீவு  நிருபர் சகா)
இந்த இல்லம் இருந்திராவிட்டிருந்தால் இன்றைய இந்த நிலை இல்லை.எனது ஒட்டுமொத்த நன்றியும் விசுவாசமும் இல்லத்திற்கே. எதிர்காலத்தில் எனது பூரண பங்களிப்பு இல்லத்திற்கு கிடைக்கும்.
இவ்வாறு வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் 12வருட காலம் பயின்று அண்மையில் வெளியான க.பொத. உயர்தரக்கலைப்பிரிவில் 3ஏ சித்திகளைப்பெற்ற ஜெயசீலன் கிஷோர் தெரிவித்தார்.
இவர் கலைப்பிரிவில் 3ஏ சித்திகளைப்பெற்று அம்பாறைமாவட்டத்தில் 6ஆம் நிலையிலுள்ளார். இசட் புள்ளி 1.97ஆகும். தேசிய நிலை 161ஆகும்.
கல்முனை தமிழ்ப்பிரிவிலுள்ள துரைவந்தியமேட்டைப் பிறப்பிடமாகக்கொண்ட கிஷோர் இளமையில் தந்தையில்லாத காரணத்தினால் வீரமுனையிலுள்ள சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் 2006இல் 3ஆம் வகுப்பில் இணைந்து கொண்டார்.
தொடர்ந்து 12வருடங்கள் இல்லத்தில் வாழ்ந்து 2014இல் க.பொத சாதாரண தரம் வரை வீரமுனை இராமகிருஸ்ணா மகா வித்தியாலயத்தில் பயின்றார்.
இல்லத்தின் பூரண உதவியுடன் உயர்தரத்தை கல்முனை உவெஸ்லி கல்லூரியில் பயின்று இன்று 3 ‘ஏ’க்களுக்கு சொந்தக்காரனாகியுள்ளார்.
அவரிடம் இச்சாதனை பற்றி எடுக்கப்பட்ட சிறு செவ்வி வாசகர்களுக்காகவும் எதிர்காலசந்ததிக்காகவும் தரப்படுகி;றது.
முதலில் இச்சாதனைக்கு காரணம் யார் என்று கருதுகின்றீர்கள்?
எனது இன்றைய நிலைக்குக்காரணம் வீரமுனை இல்லமும் அதன் நிருவாகி பொறியியலாளர் வினாயகமூர்த்தி ஜயாவும் எனது தாய் கௌரி அம்மாவும்தான்.
அத்தோடு என்னைக்கற்பித்த ஆசிரியர்களையும் நன்றிகூறுகின்றேன்.
இல்ல வாழ்க்கை பற்றிக்கேட்டபோது:
அ ஆ  தெரியாமல்தான் நான் இல்லத்தில் சேர்ந்தேன். அங்கு உணவு உடை உறையுள் அனைத்தும் வழங்கப்பட்டு கல்வியும் வழங்கப்பட்டது.
உவெஸ்லில் உயர்தரம் கற்கும்போதுகூட இல்லத்தால் சகல வசதிகளும் உதவிகளும் வழங்கப்பட்டன. வகுப்புகளுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட சகல செலவுகளையும் இல்லமே வழங்கியது. ஏன் ஒரு பென்கூட இல்லத்தாலேயே வழங்கப்பட்டது.
இந்தப்பெறுபேறு கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?
நிச்சயமாக 3 ஏ கிடைக்குமென்று எதிர்பார்த்தேன். ஆனால் மாவட்ட நிலையில் 1ஆம் இடம் கிடைக்குமென்று எதிர்பார்த்தபோதிலும் 6வது கிடைத்தது ஏமாற்றமே. அது கவலை.
உங்கள் இலட்சியம் என்ன என்று கேட்டதற்கு இவ்வாறு பதிலளித்தார்.
நான் ஒரு வழக்கறிஞராக வந்து பின்னர் இலங்கை நிருவாக சேவைக்குள் இணைந்து சேவையாற்றவேண்டும் என்பதே எனது இலட்சியம்.
அதுமட்டுமல்ல என்னைவளர்த்து ஆளாக்கிய இந்த இல்லத்pற்கு எனது பூரண பங்களிப்பை வழங்குவேன் என்றார்.
இல்ல நிருவாகி காரைதீவைச்சேர்ந்த பொறியியலாளர் தாமோதரம் வினாயகமூர்த்தியிடம் கேட்டபோது:
எமது இல்லம் இறையருளால் 2003இல் ஆரம்பிக்கப்பட்டது. 14வருடங்கள் கடந்து இன்று வளர்ந்து நிற்கின்றது. இதற்கு பலரது பங்களிப்பு காரணமாகஅமைந்துவருகின்றன.
இதுவரை இங்கு பயின்ற மாணவர்களுள் முதலாவதாக அட்டப்பளத்தைச்;சேர்ந்த மயூரன் கல்விக்கல்லூரிக்குத் தெரிவாகி இன்று துறைநீலாவணையில் ஆசிரியராக கற்பித்துவருகிறார்.
இரண்டாவதாக சிவரஞ்சன் நுவரேலியாவில் பொலிஸ் உத்தியோகத்தராகப் பணியாற்றிவருகிறார்.
மூன்றாவதாக கிசோர். இன்று 3 ஏ பெற்று இல்லத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இன்று 10 மாணவர்கள் இல்லத்திலுள்ளனர். என்றார்.

By admin