இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையின் பிரகாரமே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கல் பணிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, ஒஸ்லோ உடன்படிக்கை என்பது இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒரு பரஸ்பர உடன்படிக்கையாகும்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போருக்கு மத்தியஸ்த்தம் வகிக்கும் வகிபாகத்திலிருந்து இந்தியா உத்தியோக பூர்வமாக வெளியேறியது.

இதனையடுத்து இருதரப்பிற்குமிடையில் நீடித்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அரசியல் தீர்வினையடைவதற்கு மத்தியஸ்தராக நோர்வேயினைப் பயன்படுத்த இருதரப்பும் உடன்பட்டன.

இதன்படி, 2002ஆம் ஆண்டு மாசி மாதம் 22ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட நோர்வே உதவியது.

2002 டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுகளின் முடிவில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆரம்ப ஏற்பாடாகத் தங்களுக்குள் ஏற்பட்ட இணக்கம் குறித்து இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் வெளியிட்ட கூட்டு அறிவிப்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களையே ஒஸ்லோ உடன்படிக்கை பிரதிபலித்து நிற்கின்றது.

குறித்த உடன்படிக்கையின் பிரகாரம் “உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில், ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சிமுறை தழுவிய தீர்வு ஒன்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது.

இதுவே ஒஸ்லோ கூட்டறிக்கையின் சாரமாகும். ஆயினும், தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி முறைமையே வலியுறுத்தப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர்களும் கூறிவருகின்றனர்.

இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையின் பிரகாரமே புதிய அரசியல் அமைப்பு உருவாக்க பணிகளை முன்னெடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

tamilwin

By admin