தனுசை சந்தித்து பேச ரஜினி உதவ வேண்டும் – மகன் உரிமைகோரும் மதுரை கதிரேசன் பேட்டி

நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று மதுரை மேலூர் மலம்பட்டியை சேர்ந்த தம்பதி கதிரேசன் – மீனாட்சி உரிமை கோரி வருகிறார்கள்.
 தனுஷ் தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்பு செலவு வழங்க உத்தரவிடக் கோரி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை ரத்து செய்ய கோரி தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் கதிரேசன் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இதில் அவர் பேசும் போது, தாய், தந்தை தான் முக்கியம். அவர்கள் தான் வாழும் தெய்வங்கள், அவர்கள் காலில் மட்டுமே விழ வேண்டும். குடும்பத்தை நன்றாக கவனியுங்கள் என்று கூறியுள்ளார். அதற்காக அவருக்கு மனதார வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

அவரது மருமகனான தனுசின் பெற்றோர்களான எங்களை தனுஷ் நேரில் சந்தித்து பேச ரஜினி உதவி செய்ய வேண்டும்.
 நான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது. தனுஷ் எங்கள் மகன்தான் என்ற உண்மை ரஜினி, தனுசின் மனசாட்சிக்கு தெரியும். எங்களுக்கு பணம் வேண்டாம். உடல் நலமில்லாமல் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் என் மனைவியை தனுஷ் ஒரே ஒரு முறை சந்தித்தால் போதும். இவ்வாறு அவர் கூறினார்.