இன்று கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான விரதமில்லை

வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் உணவு தயாரிக்க வேண்டும்.சில ஊர்களில் 21 வகையான காய்கறிகள் கொண்டு சமைத்து உணவில் சேர்த்துக் கொள்வார்கள்!

சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. ஒருவிஷயம்… துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.

சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார். பார்வதி. ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று விளக்கினார்.

உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் தூய்மை முதலான பலன்கள் கிடைக்கின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர். வைகுண்ட ஏகாதசி அன்று பலரும் விரதம் மேற்கொள்கின்றனர்.

வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும் உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும் என்பதே முக்கியம். .

மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை எனும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை சாப்பிட வேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம்.

காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜபித்தபடி இருக்க வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர் என்பது ஐதீகம் என்கிறார் மதுரை அழகர்கோவில் அம்பிபட்டர்!

மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது இருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு முக்கோடி (அளவற்ற) பலன்களைத் தருவதால், முக்கோடி ஏகாதசி என்பார்கள். பேச்சு வழக்கில் முக்குட்டி ஏகாதசி, முக்கோட்டை ஏகாதசி என்றெல்லாம் சொல்வார்கள். தேவர்களுக்கு இடையறாத துன்பங்களை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாள் இது என்கிறது புராணம்!

வைகுண்ட ஏகாதசியன்று, திருவரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில், வைணவக் கோயில்கள் பலவற்றிலும் சொர்க்க வாசல் திறப்பது திருவிழாவாகவே நடைபெறுகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்த சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில் பங்கு கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசி விரதம் தரும் பலன்கள் கணக்கில் அடங்காதவை என்பதால், இந்த விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்பட்டு, அனுஷ்டிக்கப்படுகிறது