ஜாதவ் மனைவியின் செருப்பில் சிப் இருந்தது: பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிராக உளவு சாதியில் ஈடுபட்ட்தாக கருதப்படும் இந்தியாவின் குல்பூஷன் ஜாதவை சந்திக்கச் சென்ற அவரது மனைவியின் செருப்பில் உலோக சிப் இருந்ததாகவும், அது ஆராயப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் காவாஜா முகம்மது ஆசிஃப் கூறியுள்ளார்.ஜாதவை சந்திக்கச் சென்றபோது அவரது குடும்பத்தினர் நடத்தப்பட்ட விதம் குறித்தும், சந்திப்புக்குப் பின் ஜாதவின் மனைவியின் செருப்பு திருப்பி அளிக்கப்படாதது குறித்தும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குற்றம்சாட்டியிருந்தார்.இதற்குப் பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், சுஷ்மா-வின் குற்றச்சாட்டுகள் முழுவதையும் மறுத்தார்

.”கமாண்டர் ஜாதவை அவரது மனைவியும், தாயும் சந்திக்க அனுமதித்தது முற்றிலும் மனிதாபிமான அடிப்படையிலானது. எல்லா இடைஞ்சல்களையும் தாண்டி இந்த சந்திப்பு நடைபெற்றுவிட்டது. இதை ஒப்புக்கொள்ளவேண்டும். இந்த சந்திப்புக்கு முதலில் 30 நிமிடமே அனுமதி அளிக்கப்பட்டது.

அவர்களின் வேண்டுகோளை ஏற்று இது 40 நிமிடமாக நீட்டிக்கப்பட்டது. ஜாதவின் தாய் பாகிஸ்தானுக்கு நன்றி சொன்னதில் இருந்தே இந்த சந்திப்பின் வெற்றி தெரியும்,”என்று ஆசிஃப் தெரிவித்தார்.

சந்திப்பு நிகழ்ந்த விதம் குறித்து இந்திய ஊடகங்களில் எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்குப் பதில் அளித்த ஆசிஃப், “நடந்தது மகனுக்கும் தாய்க்கும் இடையில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடந்த சாதாரண சந்திப்பு அல்ல என்பதை மனிதாபிமான அடிப்படையில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த பாகிஸ்தான் மறந்துவிட முடியாது. கமாண்டர் குல்பூஷன் ஜாதவ் ஒரு இந்திய கடற்படை அதிகாரி, பாகிஸ்தானில் உளவு வேலை பார்த்து பாகிஸ்தானில் பேரழிவும், பல மரணங்களும் நிகழக் காரணமாக இருந்த ஒரு பயங்கரவாதி என்கிற உண்மை அப்படியே இருக்கிறது.

எனவே விரிவான பாதுகாப்பு சோதனை அவசியமானதாக இருந்தது. ராஜீய நிலையிலான தொடர்புகளின்போது முன்கூட்டியே இரு தரப்பாலும் இது ஒப்புக்கொள்ளப்பட்டது,” என்று கூறியுள்ளார் ஆசிஃப்.

மேலும் இதுபற்றிப் பேசிய அவர் ஜாதவின் குடும்பத்தினர் மரியாதையாகவும், கண்ணியமாகவும் நடத்தப்பட்டதாகவும் அவர்களது நகைகள் கழற்றப்பட்டதும், ஆடை மாற்றும்படி சொல்லப்பட்டதும் பாதுகாப்புக் காரணங்களுக்காகத்தான் என்றும் கூறினார். “சந்திப்புக்குப் பிறகு அவர்கள் தங்கள் சொந்த உடைக்கு மாறிக்கொண்டனர். அவர்களது உடமைகள் திருப்பி அளிக்கப்பட்டுவிட்டன. பாதுகாப்பு சோதனைகளில் நிறைவு ஏற்படாததால் ஜாதவ் மனைவியின் செருப்பு மட்டும் திருப்பி அளிக்கப்படவில்லை. அந்த செருப்பில் ஒரு உலோக சிப் இருந்தது. அது ஆராயப்பட்டுவருகிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நல்லெண்ணத்தோடு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு முழுவதிலும், பாகிஸ்தான் திறந்த மனத்தோடும் வெளிப்படையாகவும் இருந்தது என்றும், பொய்க் குற்றச்சாட்டில் ஈடுபட தங்களுக்கு விருப்பமில்லை என்றும் பல தடைகளை, சவால்களைத் தாண்டியும், உண்மைகள் திரிக்கப்பட்டதையும், ஆதாரமற்ற பிரசாரங்களையும் தாண்டியும் இந்த சந்திப்பு நிகழ்ந்தது என்ற நேர்மறையான விளைவில் தாங்கள் கவனம் செலுத்த விரும்புவதாகவும் ஆசிஃப் குறிப்பிட்டார்.

இது தவிர, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பிலும் இதே போன்ற விளக்கம் அளிக்கப்பட்டது. குடும்பத்தினர் ஜாதவுடன் மராத்தியில் பேச அனுமதி மறுக்கப்பட்டதும் பாதுகாப்பு நிமித்தமாகவே என்று கூறப்பட்டதுடன், இந்தியிலும் மராத்தியிலும் சுருக்கமான சுலோகங்களை சொல்ல அனுமதிக்கப்பட்டது என்றும் அந்த கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.