ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து குண்டு வெடித்ததில், 41 பேர் பலி , 84 பேர் படு காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், அடுத்தடுத்து குண்டு வெடித்ததில், 41 பேர் உடல் சிதறி இறந்தனர்;84 பேர் படுகாயம் அடைந்தனர் ஆப்கானிஸ்தானில், தலிபான் மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிராக, ஆப்கன் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து, தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் காபூலில் உள்ள, ‘ஷியாட் டெபியான்’ கலாசார மையத்தில், ஆப்கானிஸ்தான் மீது, ரஷ்யா படையெடுத்த, 38 ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அப்போது, பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள், அலறியடித்து ஓடினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மேலும் இரண்டு குண்டுகள், அடுத்தடுத்து வெடித்தன. இந்த குண்டு வெடிப்புகளில் சிக்கி, 41 பேர் இறந்தனர். மேலும்,84 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்; சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
தாலிபான் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தங்களுக்கு இந்த தாக்குதலில் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்திருந்தது
அதே சமயம் ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர், நஸ்ரத் ரகிமி கூறுகையில், ”இந்தத் தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது,” என்றார்.