காத்தான்குடி, காங்கேயனோடைப் பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் கூறினர்.

காங்கேயனோடையைச் சேர்ந்த முஹம்மட் இஹ்லாஸ் (வயது 26) என்பவரே கத்திக் குத்துக்கு உள்ளாகியுள்ளார். பெருநாள் சிறப்பு நிகழ்வாக காங்கேயனோடையிலுள்ள பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (1) இரவு கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்பட்டது. இதில் கல்முனை சனிமூன் விளையாட்டுக்கழகக் கால்பந்தாட்ட வீரர்களும் காங்கேயனோடை நியூஸ்டார் கழகக் கால்பந்தாட்ட வீரர்களும் போட்டியில் பங்குபற்றினர்.

அப்போது, இப்போட்டியில் பங்குபற்றுவதற்கு தமக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை எனக் கூறி, இளைஞர்கள் சிலர் மைதானத்துக்குள்; புகுந்து கலகத்தில் ஈடுபட்டனர். இவ்வேளையில் முஹம்மட் இஹ்லாஸ் என்பவரின் முதுகுப் புறத்தில் கத்திக் குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பொலிஸார், குறித்த இடத்துக்குச் சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published.