செயற்கைக்கோளை ஏவ தயாராகும் வடகொரியா

 அணு ஆயுத சோதனைகளை செய்து உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் வடகொரியா, அடுத்தக்கட்டமாக செயற்கைக்கோளை ஏவ தயாராகி உள்ளது. ஐநா, அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி, கடந்த 2006 முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, ஐநா.வும் அமெரிக்காவும் அந்நாட்டின்மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதையும் மீறி், எந்த நாட்டின் உதவியும் இன்றி தனது சொந்த முயற்சியில்  செயற்கைகோளை வடகொரியா தயாரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி தென்கொரிய நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ‘வடகொரியா சமீபத்தில் புதிய செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.

அதற்கு, ‘க்வாங்மியாங்சாங்-5’ என்று பெயரிட்டுள்ளது. விரைவில் இது விண்ணில் ஏவப்பட உள்ளது. இதில் புவி கண்காணிப்பு சாதனைங்கள் பொருத்தப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது. வடகொரியாவின் அரசு நாளிதழான ரோடாங் சின்முன் வெளியிட்டுள்ள செய்தியில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ‘சர்வதேச சட்டப்படி இறையாண்மை உள்ள ஒவ்வொரு நாடும் விண்ணில் செயற்கைகோளை ஏவும் உரிமையை பெற்றுள்ளது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் நடந்த ஐநா பொதுக் கூட்டத்தில் பேசிய வடகொரிய பிரதிநிதி கிம் இன்-ரியாங், ‘பொருளாதார முன்னேற்றம் மற்றும் வடகொரிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில், எங்கள் நாடு 2016-2020ல் செயற்கைகோள் திட்டத்தை செயல்படுத்தும். அமெரிக்காவின் மிரட்டலுக்காக செயற்கைகோளை ஏவும் உரிமையை விட்டுக் கொடுக்கவோ, மாற்றிக் கொள்ளவோ முடியாது.’ என்று தெரிவித்தார். அதன்படி, செயற்கைகோள் திட்டத்தில் வடகொரியா தற்போது வெற்றி பெற்றுள்ளதாக தெரிகிறது.