பாகிஸ்தானின் அத்துமீறிய துப்பாக்கிச்சூடுக்கு இந்தியா பதிலடி: 3 பாக்.வீரர்கள் பலி

பாகிஸ்தானின் அத்துமீறிய துப்பாக்கிச்சூடுக்கு இந்திய ராணுவம் அளித்த பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் பலியாகினர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இத்தகைய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுக்கிறது. அந்த வகையில் நேற்று அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தரப்புக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.
எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ருக் சக்ரி செக்டாரில், இரு தரப்பும் மாறி மாறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது. இந்தியாவின் பதிலடியில் பாகிஸ்தான் வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான்  ஊடகங்கள் இந்த செய்தியை தெரிவித்துள்ளன. மேலும், இந்திய ராணுவம் தான் முதலில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் பாகிஸ்தான் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ மேஜர் உட்பட 4 வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவம் நடைபெற்ற சில தினங்களில் மேற்கண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.