அனர்த்தங்களும் ஆயத்தங்களும் – பாக்கியராஜா மோகனதாஸ்

 

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது(மார்கழி 26)

அனர்த்தமும் அழிவுகளும் ஒரு கணப்பொழுதில் முடிந்து விடுகின்றன. அவ் அனர்த்தங்களால் ஏற்படும் உயிரழிவுகளும் தாக்கங்களும் அதன் பிரதிபலிப்புக்களால் உருவாகும் விளைவுகளும் சமூகத்தில் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருப்புக் கொள்ளச்செய்கின்றன.

அனர்த்தத்திற்கு ஒரு செக்கனுக்கு முன்னரான செவியேறல் செய்திகளும் அனர்த்தத்தின் போதான நேரடிக் விளைவுகளும் அனர்த்தத்திற்கு பின்னரான உருக்குலைந்த காட்சி விளைவுகள் என்பன ஒரு சராசரி மனிதனை பெரும் மன அவஸ்தைக்குள்ளாக்குகின்றது.

சுனாமி, சூறாவளி, சுழல் காற்று ,மழை வெள்ளம், மண்சரிவு, மண் மேடு சரிவு, வரட்சி, பூகம்பம், யுத்தம், பனிப்பொழிவு, பனி மழை, பயங்கர குண்டுவெடிப்பு, தீவிரவாத தாக்குதல், மிதிவெடி, துப்பாக்கிச்சூடு, அனல் மின்சார கசிவு ஆகிய இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களால் மனிதர்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்படுவதுடன் மனித வளத்திற்கு நடத்தை ரீதியாக எதிர்மறைத் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.

பேரழிவுகள் யாரையும் விட்டு வைப்பதில்லை, பேரழிவு ஏற்படும்போது மக்கள் நியாயமாக யோசிப்பதோ சிந்திப்பதோ கிடையாது. ஆனால் எதிர்வரும் காலங்களில் பேரழிவின் போது உயிர் தப்புவதற்கு, நாம் அனைவரும் ஆயத்தமாக இருப்பதற்கு முறையான முறைமைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

பேரழிவு சம்பந்தமாக அரசாங்கம் மற்றும் ஊடகங்களில் மாத்திரம் சொல்வதை கவனித்திலெடுக்க வேண்டும். இயற்கையான பேரழிவுகள் இன்னும் இரு மணி நேரங்களில் அரை மணி நேரங்களில் ஏற்படப்போவதை அறிந்து, உங்களுக்கும் உங்கள் அன்பானவர்களுக்கும் ஆபத்து வரும் என்பதை மனதளவில் ஏற்றுக்கொள்வதுடன் பேரழிவுக்கு முன்னராக ஆயத்தமாக இருக்க மனதை தயார்ப்படுத்தவேண்டும், இல்லையெனில் அனர்த்தத்தின் போது உயிர் தப்புவது பெரும் கஸ்டமாகி விடும்.

கரையோரப்பிரதேசங்களில், மத்திய மலைநாடுகளில், நகர்ப்புறங்களில், ஒதுக்குப்புறங்களில் என ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன பேரழிவுகள் இடம்பெறலாம் என்பதை நிச்சயமாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். கரையோரப் பிரதேசங்களில் மண்சரிவின் தாக்கம் குறைவாக இருப்பதுடன் மண்ணரிப்பினால் கடல் ஊருக்குள் ஊடுருவுவதையும் அறிந்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பேரழிவுக்கேற்ப பாதுகாப்பான இடங்கள் எங்கே இருக்கின்றது எவ்வாறு செல்லலாம் என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வீடு கட்டப்பட்டிருக்கும் விதமும் அது அமைந்திருக்கும் இடமும் பாதுகாப்பானதாக இருக்கின்றதா என்று நீங்களே உங்களின் உயிர் இருப்பினை உறுதிப்படுத்துபவராக இருக்க வேண்டும்.

நீர் நிரம்பி வழியும் குளம் இருந்த இடத்தில் மண்ணை எவ்வளவுதான் இட்டு கட்டிடங்கள் ,வீடுகள், தொழிற்சாலைகள் கட்டினாலும் நீங்கள் இருக்கும் பகுதி மழை வெள்ள காலங்களில் மூழ்கும் நிலைக்கு உள்ளாகும் என்பதை நிச்சயமாக அறிந்து வைத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்பவர்களாக இருக்க வேண்டும்.

குளம் இருந்த இடத்தில் வீட்டுத்திட்டங்கள் மற்றும் அரச நிறுவனங்களை அமைக்கும் போது மண் மற்றும் நிலத்தின் தன்மையினை கவனத்தில் எடுக்க வேண்டும். கட்டிடங்கள் அரசாங்கத்தினால் வந்தது என்பதற்காக உயிர் காப்பாற்றக்கூடிய இடமான வைத்தியசாலையை குளம் அமைந்திருந்த மற்றும் நெற்காணி செய்யும் இடத்தில் கட்ட முடியாது. அவ்வாறு கட்டினால் கட்டிடத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு கட்டிடம் இடிந்து விழவோ தாழிறங்கவோ வெள்ளத்தினால் நீர் நிரம்பி வழியும் நிலைக்கோ உள்ளாக்கப்படும். இதனால் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்று உயிரை காப்பாற்ற வந்தவர்களின் உயிர் பறிபோகும் நிலையும் ஏற்படும் என்பதை மனிதம் உள்ளவர்கள் அறிய வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் எமது பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன , அடிக்கல் வைக்கப்பட்டுள்ளன என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்துள்ளோம்.

மண்ணின் தன்மையறிந்து எல்லாம் அறிந்து கட்டிடங்கள் கட்டப்பட்டு மீண்டும் கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலைக்கு உள்ளாகியுள்ள நிலைமை பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களது வரிப்பணத்தில் வருகின்ற அரச நிதி வீண்விரயமாகின்றது. இவ்வாறான நிலைமைகளை குறித்த அமைச்சர்கள், அலுவலர்கள் கவனத்தில் எடுத்து இடம் அறிந்து கட்டிடங்களை அமைப்பது சாலச் சிறந்ததாக இருக்கும்.

வீட்டினுள், அரச நிறுவனங்களினுள் தீ விபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை அகற்ற வேண்டும். புகையை கண்டறியும் கருவி ஒவ்வொரு இடங்களிலும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும், அதன் பேட்டரிகளை வருடத்துக்கு ஒரு தடவையோ பல தடவையோ மாற்றி முறையாக அதை காண்காணிக்க வேண்டும்.

அனர்த்தங்களின் போது அவசரத்துக்குத் தேவையான பொருள்களை ஆயத்தமாக வைத்திருத்தல் வேண்டும். மின்சாரம், தூயகுடிநீர், கையடக்கத் தொலைபேசி, போக்குவரத்து வசதி ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். உங்களிடம் வாகனம் இருந்தால் அதில் முழுமையாக எரிபொருளை நிரப்பி வையுங்கள், உங்கள் வீட்டில் உணவு, தண்ணீர், முதலுதவிப் பெட்டி ஆகியவை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையானதை நீங்களே வைத்திருக்கின்றீர்களா என்று மீண்டும் மீண்டும் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பக்கத்திலும் தூரத்திலும் உள்ள உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கையடக்கத் தொலைபேசியின் இலக்கத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இடி மின்னல் மழை வெள்ளத்தின் பேர்து வீடுகளில் மற்றும் நிறுவனங்களில் மின்சாரம் தடைப்படலாம். அதேற்கேற்ற வகையில் மின்சாரத்தினை சேமித்து வைக்கக்கூடிய, மின்னேற்றப்பட்ட விளக்குகளை ,பேட்டரி, சூரியப் படலம் மூலம் இயங்கக்கூடிய மின் விளக்குகளை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

உங்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் தீ முழுவதும் பரவிய பேரனர்த்தத்தின்;போது உங்கள் கட்டிடத்திலிருந்து வெளியே எவ்வழியால் எங்கே இலகுவாக செல்லலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வந்து சந்திப்பதாக இருத்தல் வேண்டும்.

தீ பிடிக்க ஆரம்பிச்சதும் அவ்விடத்தை விட்டு உடனே வெளியில் போக வேண்டும். விவேகமாக தரையில் நகர்ந்தோ நடந்தோ போகும்போது யாராவது தடுக்கி விழுந்தால் அவரை அவ்விடத்தில் விட்டுச் செல்லாமல் தூக்கிக்கொண்டு நடந்து கொண்டே இருக்க வேண்டும். எம்மால் நிச்சயமாக தப்பிக்க முடியும் என்று ஏனையவர்களுக்கு தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துபவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.

பேரனர்த்தங்களின் போது வயதானவர்களுக்கும் உடம்பு முடியாதவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கற்ப்பிணித்தாய்மார்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் விசேட தேவையுடையவர்களுக்கும் உதவுபவர்களாக இருக்க வேண்டும்.

தீ விபத்து ஏற்படும் போது தரையில் படுத்துக்கொண்டு அப்படியே படுத்தவாறு நகர்ந்து விரைவாக விவேகமாக வெளியே செல்ல முயற்சிக்க வேண்டும். புகை சூழ்ந்திருப்பதால் அந்த இடத்தில் இருப்பவற்றை பார்ப்பது கஸ்டமாக இருக்கலாம். தீ விபத்தின் போது புகையினை சுவாசிப்பதனாலேயே நிறைய பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். பாரிய தீ விபத்து ஏற்படும் போது எக்காரணம் கொண்டும் உங்கள் உடமைகளை பொருள்களை எடுத்துக்கொண்டு செல்வதை முற்றாக தவிருங்கள். ஒரு நொடி தாமதித்தால் கூட உங்கள் உயிரை இழக்க வேண்டி ஏற்படலாம் என்பதை பேரனர்த்தங்களின் போது நினைவு வைத்துக்கொள்ள வேண்டும்.

பூமியதிர்ச்சி ஏற்படும் போது வீட்டிலுள்ள உறுதியான மேசைக்கு கீழேயோ சுவருக்கு பக்கத்திலேயோ மறைந்து கொள்ளுங்கள். பூமி அதிர்ச்சிக்கு பிறகு சிறு சிறு அதிர்வுகள் ஏற்படும் என்பதை எதிர்பார்த்திருங்கள். எவ்வளவு சீக்கிரமாக கட்டிடத்தை விட்டு வெளியே போக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுபவர்களாக இருக்க வேண்டும்.

மீட்பு வேலையில் ஈடுபடுவர்கள், அவர்களுக்குரிய முறையான சட்டவிதி முறைகளுடன் அவ்விடத்திற்கு வருவதற்கு பல மணி நேரம் ஆகலாம். ஆதலால் உங்களால் முடிந்தளவு நீங்கள் வெளியேறுவதுடன் தங்கள் உயிரை கவனத்தில் எடுத்து ஏனையோரையும் விவேகமாக காப்பாற்றுபவர்களாக இருக்க வேண்டும்.

சுனாமி பேரலையினால் சுனாமி தாக்கும்போது கடல் அலைகள் கரையைத் தாண்டி வேகமாக வரும்போது உடனே உயரமான பாதுகாப்பான பகுதிக்கு செல்லவேண்டும். இன்னும் மேன்மேலும் பென்னம் பெரிய அலைகள் வரும் என்பதை எதிர்பார்த்திருங்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊடகத் தொடர்பாடலுடன் இருப்பதற்கேற்ற வகையில் பேட்டறியில் இயங்ககூடிய வானொலிகளை, கையடக்தொலைபேசியிலுள்ள ஊடக வெளியீடுகளை அறிவது சிறப்பாக இருக்கும்.

சூறாவளி தாக்கும்போது, எம்மை பாதுகாக்கக்கூடிய இருப்பிடங்கள், பெரும் கோட்டைகள் ,மறைந்துகொள்வதற்கென்று நீங்கள் கட்டி வைத்திருக்கும் இடங்கள், குகைகள், நிலத்திற்கு கீழுள்ள இடங்கள் ஆகியவற்றுக்கு உடனடியாக விரைய வேண்டும்.

மழை வெள்ளம் வரும்போது தண்ணீர் புகுந்த கட்டிடத்தை விட்டு வெளியே வந்துவிடுங்கள். தண்ணீரில் நடப்பதையோ வாகனத்தை ஓட்டிக்கொண்டு போவதையோ முற்று முழுதாக தவிருங்கள். ஏனென்றால் அந்த தண்ணீரில் கழிவு நீர் கலந்திருக்கலாம். சில ஆபத்துகளும் மறைந்திருக்கலாம். அதாவது கழிவுப்பொருள்கள் இருக்கலாம் பாதாளச் சாக்கடை திறந்து கிடக்கலாம். மின்சார கம்பிகள் அறுந்து விழுந்திருக்கலாம். ஆகவே வெள்ளம் வருமுன் அணை கட்டுவதைப் போல வழமையாக வெள்ளம் வரும் இடம் என்று தெரிந்தால், சில வேளைகளில் ஏற்கனவே வெள்ளம் வராத இடத்திலும் வெள்ளம் வரலாம் என்பதை அறிந்து வரவிருக்கும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாத வகையில் அவ்விடத்தை விட்டு நகர்வது சாலப்பொருத்தமாக இருக்கும்.

இரண்டு அடிக்கு தண்ணீர் கரைபுரண்டால் அது ஒரு காரையோ வாகனத்தையோ அடித்து இழுத்துக்கொண்டு சென்றுவிடும். வெள்ளத்தின்போது கரை புரண்டு ஓடும் தண்ணீரில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றதனாலேயே நிறைய பேர் உயிர் இழந்ததுக்கு காரணமென பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அலுவலர்கள், வளிமண்டல திணைக்கள அலுவலர்கள், மீட்பு படையினர், கட்டிட ஆராய்ச்சி திணைக்களத்தினர், அனர்த்தங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் ஆகியோர் உரிய இடத்தை விட்டு வெளியேற சொன்னால் உடனே அங்கிருந்து வெளியேற வேண்டும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இல்லையென்றால் உங்களைத் தேட சென்றவர்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும். எனவே ஒவ்வொரு சின்னஞ் சிறு விடயங்களையும் கணப்பொழுதில் சிந்தித்து தலைமைத்துவ முகாமைத்துவம் செய்பவர்களாக ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.

அனர்த்தங்களின் போது கையடக்கத்தொலைபேசியில் பேசுவதை விடுத்து குறுஞ்செய்திச் சேவையினை பரிமாறிக்கொள்ளுங்கள். இல்லையெனில் இடி மின்னல் மின்சாரத் தாக்கம் ஒளியின் தாக்கம் போன்ற பல்வேறு தாக்கங்களுக்கு உட்பட நேரிடலாம்.

வீட்டிலோ பாதுகாப்பான இடத்திலோ அதிகாரிகள் உங்களை இருக்கச் சொன்னால், அவர்கள் சொல்கிற படி செய்யுங்கள். விச வாயு தாக்கும்போதோ வைரஸ் மற்றும் பாக்டீரியா மூலம் பரவும்போதோ, அணுமின் விபத்து ஏற்படும்போதோ வீட்டை விட்டு உரிய இருப்பிடத்தை விட்டு வெளியே வராதீர்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது ஏசீயை (AC) இயங்காமல் வைப்பதுடன் கதவுகளையும் யன்னல்களை மூடி வைக்க வேண்டும்.

அணுமின் விபத்து ஏற்படும்போது ஆபத்தான கதிர்வீச்சு உங்களைத் தாக்காமல் இருக்க உங்கள் கட்டிடத்தின் தாழ்வான பகுதிக்கு செல்ல ஆயத்தமாயிருத்தல் வேண்டும். தொலைக்காட்சியில் மற்றும் வானொலியில் வரும் செய்திகளை பார்க்கவும் கேட்கவும் வேண்டும். ஆபத்து நீங்கிவிட்டது என்று அதிகாரிகள் சொல்லும் வரையிலும் அவ்விடத்தை விட்டு நகராமல் இருக்க வேண்டும்.

மனிதர்கள் நடமாடாத தனிமையான சூழலுக்கு செல்வதை தவிர்ப்பதன் மூலம் மிதிவெடி போன்றவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். உங்களுக்குத் தெரியாத பற்றைக் காடுகள் நிறைந்த புதிய இடங்களுக்கு செல்லும் போது கவனமாக செயற்பட வேண்டும். மிதிவெடி விழிப்புணர்வுக்குரிய விழிப்புணர்வு பலகைககள், பாதுகாப்பற்ற இடம் என்ற பதாதைகளை பொருத்தப்பட்டுள்ளதா, கட்டமிடப்பட்டுள்ள இடமா என்று நன்கு அவதானிக்க வேண்டும். அதன் பின்னர் அவ்விடத்தில் நடமாடுவதை பற்றி சிந்திக்க வேண்டும்.

சுனாமி, சூறாவளி, இடி மின்னல் மழை ஆகிய அனர்த்தங்கள் நிகழ்வதற்கு இரு மணி நேரத்திற்கு முன்னர் அவசர நிலையை நிர்வகிக்கும் துறையினர் அரசாங்கத்துக்கும் ஊடகங்களுக்கும் அறிவிக்க ,கட்புல செவிப்புல ஊடகத்துறையினர் தத்தமது ஊடகங்கள் வாயிலாக அவ் நிலைமையினை அறிக்கை விடுவர். அவ்வறிக்கைக்கு ஏற்ப நாம் இயங்குபவர்களாக இருக்க வேண்டும்.

அவசரத்துக்கு தேவையான பொருள்களை சேமித்து வைக்கும்படியும் அவற்றை ஒவ்வொரு வருடமும் சரி பார்க்கும் படி பேரழிவை நிர்வகிக்கும் அமைப்புகள் அந்தெந்த காலப்பகுதியில் பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடாக அறிவிப்பதை கவனத்திலெடுத்து அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டும்.

ஒரு நபர் குறைந்த பட்சம் பதினொரு லீற்றர் தண்ணீரை வைத்துக்கொள்வதுடன் மூன்று நாட்களுக்குத் தேவையான சமைக்காமல் அப்படியே சாப்பிடக்கூடிய கெட்டுப்போகாத உணவுகளை சேமித்து கொண்டு செல்ல வேண்டும். உங்கள் இடத்துக்கும் சூழ்நிலைக்குமேற்ற அடிப்படை அத்தியவசிய பொருட்களை ஆயத்தப்படுத்தி கொண்டு செல்பவர்களாக இருக்க வேண்டும்.

போர்வை, கதகதப்பான உடை, நல்ல பாதணி, டார்ச் லைட், ரேடியோ, கூடுதல் பேட்டரிகள், முதலுதவி பெட்டி, உதவிக்கு அழைக்க தேவைப்படும் விசில், சாப்பிடுவதற்கு தேவையான பாத்திரம், தண்ணீர் புகாத தீப்பெட்டிகள், மாஸ்க், தண்ணீர் புகாத டேப், உங்களை மூடிக்கொள்ள உதவும் பிளாஸ்டிக் உடை, தண்ணீர் புகாத டப்பாவில் மருந்து, மருந்து சீட்டு, மற்ற முக்கிய ஆவணங்கள், அவசர தொடர்புகள் மற்றும் சந்திக்கும் இடங்களின் பட்டியல், உள்@ர் வரைபடம், கிரேடிக் கார்டுகள் ,பணம், வீடு ,காரின் கூடுதல் சாவிகள், பேப்பர், பென்சில், புத்தகங்கள், விளையாட்டு பொருள்கள், சமயம் சார் புத்தகங்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல ஆயத்தமாயிருக்க வேண்டும். இவையணைத்தையும் கொண்டு செல்வதை விடுத்து அனர்த்தத்துக்கு ஏற்ப தேவையான உபயோகமான மூலப்பொருட்களை மாத்திரம் கொண்டு செல்ல வேண்டும்.

பேரழிவிற்கு பின்னர் முகாமில் இருப்பதற்கு பதிலாக முடிந்தளவு உறவினர்களுடனும் நண்பர்களுடனும் இருங்கள். நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வையுங்கள், குப்பைகளை சுத்தம் செய்ய உங்கள் பொருள்களை மட்டுமே பயன்படுத்துங்கள், முடிந்தால் கையுறை ,நல்ல பாதணி, கனமான தொப்பி, மாஸ்க் போன்றவற்றை பயன்படுத்துங்கள். மின்சார கம்பிகளும் நெருப்பு தணல்களும் குப்பைகளில் இருக்கலாம். அதனால் கவனமாக சுத்தம் செய்ய வேண்டும்.
நீங்கள் அமைதியாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் பிள்ளைகள் பார்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு பாடசாலை பாடத்தை சொல்லிக் கொடுங்கள், அவர்களோடு விளையாடுங்கள், தவறாமல் குடும்ப வழிபாடு செய்யுங்கள், பேரழிவு சம்பந்தமான செய்திகளை பற்றியே யோசித்துக்கொண்டிருக்காதீர்கள், உங்கள் வெறுப்பையும் விரக்தியையும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் காட்டாதீர்கள். மற்றவர்கள் உதவும் போது உதாசீனம் செய்யாமல் ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்களும் மற்றவர்களுக்கு உதவுங்கள்.

அரசாங்கமும் மீட்புக் குழுவும் ,மக்களை பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்குதான்; கவனம் செலுத்துவார்கள். இழந்த எல்லா பொருட்களையும் திருப்பிக் கொடுப்பதற்கு அல்ல. பிராணன் இருக்க வேண்டுமென்றால் சுத்தமான தண்ணீர், உணவு, உடை, தங்குவதற்கு பாதுகாப்பான ஒரு இடம் ஆகியவையே தேவை என்பதை மாத்திரமே கவனத்தில் எடுக்க வேண்டும்.
பேரழிவால் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு பிறகு கவலை, மனச்சோர்வு, மனநிலையில் மாற்றம் போன்றவற்றால் நீங்களோ உங்கள் குடும்ப உறவினர்களோ நண்பர்களோ பாதிக்கபடலாம். அத்தோடு யோசிப்பதும் வேலை செய்வதும் தூங்குவதும் கஸ்டமாக இருக்கலாம். அதனால் உங்கள் மீது அக்கறையாக இருப்பவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள்.

அனர்த்தங்களால் ஏற்படும் உளத்தாக்கங்கள் ஒருபுறமும், அனர்;த்தங்களைத் தொடர்ந்து நடைபெறும் களவு, கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் நெருக்கீடுகள் தொடர் உளத் தாக்கங்களுக்கு காரணமாக அமைகின்றன.

அனர்த்தங்களால் ஏற்படும் உளநெருக்கீடுகள் ஒருங்கிணைந்து சமூக மட்ட நெருக்கீடுகளாகப் பரிணமிக்கின்றன. அவை மட்டுமன்றி நெருக்கீடுகளால் ஏற்படும் மனவடுக்களை(TRAUMA)ஆற்றுப்படுத்தல் என்பதும் சாதரணவிடயமல்ல. அவை நீண்;டநாள் நிலைத்திருப்புக் கொண்டவையாக விளங்குகின்றன. இவ்வாறு அனர்த்தத்தின் போது ஏற்படும் உளக் கோளாறுகளை அனர்த்தத்தின் பின்னரான உளக் கோளாறுகள்(Post-TraumaticStress Disorder) என அழைக்கின்றனர்.

அனர்த்தங்களால் மானிட வளத்திற்கு ஏற்படும் புறக் காயங்கள் கூட வெளிப்படையாகக் கண்டறிந்து ஆற்றுப்படுத்தத்தக்கவை. அவற்றின் மீள் பெறுகையும் ( Re -covery) மதிப்பிடத்தக்கவை. ஆனால் அனர்த்தங்களால் ஏற்படும் உளப்பாதிப்புக்கள் நேரடியாக வெளிப்படுதன்மை அற்றவையாகவும் உள்ளார்ந்த உளவடுக்களாகவும் அமைந்து விடுகின்றன. உள்ளார்ந்த அகவடுக்களால் ஏற்படும் மன அழுத்தங்கள் மானிட வெளிப்பாடுகளுக்கு தடையாகவும் அமைகின்றன. அவை தனி மனிதனது மேம்பாட்டில் மாத்திரமன்றி சமூக பொருளாதார பண்பாட்டு நிலைகளிலும் நீண்டநாள் நிலைத்திருந்து எதிர் மறைத்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இன்றும் கூட பல பெற்றோர்களிடம் நிகழ்ந்த உண்மையைக் கூறிய பிறகும் தனது மகன் இறந்து விட்டான் என்பதற்கு பல தாய்மார்களின் மனம் இடங் கொடுக்காததோடு கட்டாயம் வருவான்… என மன அழுத்தத்துக்கு உட்பட்டு கூறி வருகின்றனர். அதாவது தன் மகன், தன் கணவன், தன் அண்ணன் ,தன் தம்பி இறக்கவில்லையென்ற எண்ணத்தில் பலர் இன்றும் கூட வாழ்ந்து வருகின்றனர் .என்னை எவரும் குழப்ப தேவையில்லை எனவும் தான் நம்பவில்லையெனவும் தன் மகன் உயிருடன் இருக்கின்றான் என்று உயிருடன் இல்லாத தன் மகனை பல தாய்மார்கள், தன் மகன் வருவான் என்று வாழ்ந்து வருகின்றனர். இத்தன்மையிலிருந்து எம் பெற்றோர்கள் உறவினர்கள் அனைவரும் உளவடு நோயினால் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை எம் வரலாற்று அனுபவ சுவடுகளுக்கூடாக அறிய முடிகிறது.

மனித வளத்திற்கு ஏற்பட்ட உளநெருக்கீடுகளையும் உள நெருக்கீடுகளால் ஏற்பட்ட அகவடுக்களையும் அகவடுக்களால் ஏற்பட்ட உளத்தாக்கங்களையும் ஆற்றுபடுத்தவேண்டும்;;. பெற்றதாயின் முன்னே நடைபெறும் தாங்கமுடியாத கற்பழிப்பு (வன்புணர்ச்சி) போன்ற சம்பவங்கள் ஆற்றுபடுத்ததகாத உளவடுக்களை ஏற்படுத்திவிடுகின்றன. இவை தவிர சம்பவங்களைக் கேள்விப்பட்டவர்;கள், பிரேதங்களைக் கண்ணுற்றவர்கள், உருக்குலைந்து அழுகிய நிலையில் காணப்பட்ட சடலங்களைக் கண்ணுற்றவர்கள், மீள்கட்டுமான நடவடிக்கைகளால் புறக்கணிக்கப்பட்டோர், அசு;சுறுத்தப்பட்டோர் என அனர்த்தங்களுக்கு உட்படாதோரும் உளநெருக்கீடுகளுக்கு உட்படுகின்றனர். இவை பாதிப்புக்குட்படுபவரை மாத்திரமன்றி அவதானிப்போரையும் மனநோயாளியாக மாற்றிவிடுகின்றன.
பாரிய அனர்;த்தங்களால் உளநெருக்கீடுளுக்கு உட்படுபவர்களுள் 5 -10 வீதம் வரையிலானோருக்கே தொடர் தேர்ச்சியான மனவடுத் தேற்றுகையின் அவசியம் தேவைப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்கால சூழலில், பெரும்பான்மை படையினரின் ஆக்கிரமிப்பு அட்டூழியத்தினால் எம் இளம் பெண்கள் பலர் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கபட்டனர் என்பதை யாவருமறிவர். இதன் காரணமாக எண்ணிலடங்காத எம் சக்திகள்(பெண்கள்) உயிரை மாய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தனது நண்பியானவள், அக்காவானவள், தங்கையானவள், மனைவியானவள் மகளானவள் வன்புணர்ச்சியின் காரணமாகவே இறந்துள்ளாள் என்பதையறிந்த இரத்த மற்றும் ஏனைய உறவினர்கள் உளத்தாக்கத்துக்கு உட்பட்டவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவையெல்லாம் ஆற்றுப்படுத்த தகாத உளவடுக்களாகவுள்ளன. யுத்தத்தின் பின்னரான பலவிதமான உளப்பாதிப்பு நிலையிலுள்ளவர்களை குறிப்பாக உளவடு நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்தும் பேறு மிகப்பெரும் பேறாகும்.

அனர்த்தங்கள் நிறைவுற்ற போதிலும் உளநெருக்கீடுகள் மற்றுமொரு அனர்த்தத்தின் பரிணாமத்திற்கு காரணமாக அமைந்து விடுகின்றன. இக்காலங்களிலே ஆற்றுப்படாத உளவடுக்கள் அனர்த்தத்தை தொடர்ந்து உளத்தேற்றம் இன்மையால் ஏற்படும் தற்கொலை போன்ற மோசமான நிலைகளுக்கு வழிவகுக்கின்றன. இலங்கையில் நிகழ்ந்த சுனாமி அனர்த்தத்தின் போது 30196 பேர் மரணத்தை தழுவியுள்ளதுடன் சுனாமி ஏற்பட்டு(2004) பதினொரு மாதங்களுள் ஒன்பது தற்கொலைகள் உளத்தேற்றம் இன்மையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் ஏற்பட்டுள்ளன.

வடகிழக்குப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ச்சமூகமானது பெரும்பான்மையினரின் அட்டூழியங்களுக்கு எவ்வாறு எல்லாம் ஆளாகினர் என்பதையும் அவர்களது பிரச்சினைகளையும் எவ்வாறான வேதனைகளையெல்லாம் அனுபவித்தனர் என்பதையெல்லாம் யாமறியாவிடினும் உலகமறியும்.

இறப்புக்களின் மீள் ஞாபகப்படுத்தல்களின் காரணமாக குறிப்பாக யுத்த அனர்த்தங்;களால் இரத்த உறவினர்களான இறந்த தாயை, தந்தையை, அக்காவை, தம்பியை காணும்போதும் மிகவும் நெருக்கமான நண்பன், நண்பியை காணும் போதும் சுய உணர்வின்றியும் மரத்துப்போன தன்மையிலும் பயம் பதகழிப்புடன் அதீத உணர்ச்சி வசப்படுதலுமாக ஏனைய உறவினர்கள் இருந்தனர் என்பதை நாம் எவரும் மறுக்க முடியாது. இவையெல்லாம் எம் அனுபவங்களாக எம் உள்ளத்தினுள்ளே குமுறிக்கொண்டிருக்கின்றது.

அனர்த்தங்களின் போது சிறுவர்களும் பெண்களும் கூடியளவு உள நெருக்கீடுகளுக்கு உட்படுகின்றனர். அனர்;த்தத் தாக்கங்களைத் தொடர்ந்து நித்திரையில் திடுக்கிட்டு எழுவதும் வீறிட்டு அழுவதும் தூக்கத்தில் அலறுவதும் உணர்ச்சி வசப்படுவதும் அமைதியாகி ஒடுங்குவதும் கற்றலில் காழ்ப்புணர்வு கொள்வதும் பாடசாலை செல்ல மறுப்பதும் சோம்பலாகயிருப்பதும் வழமைக்கு மாறாகத் தூங்குவதும் மாணவர்களின் உளத்தேற்றமின்மையின் வெளிப்பாடுகளாக அமைகின்றது. இவ்வாறான நிலைமையின் போது பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் உறவினர்கள் அருகிலிருந்து பாதுகாப்பவர்களாக ஆற்றுப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும்.
இவ்வாறன நெருக்கீடுகளின் இருப்புகளால் ஏற்படும் தாக்கங்கள் மாணவர்களின் அறிவு, திறன், ஆற்றல் என்பவற்றை மழுங்கடிக்கச் செய்துவிடுகின்றன. அவ் வேளைகளில் கற்ற கல்வியறிவும் பெற்ற ஆற்றலும் பூச்சியமாகிவிடுகின்றன. இந் நிலையில் மாணவர்களை அனர்த்த நெருக்கீடுகள் உளவியல் ரீதியாக ஊனமுற்றவர்களாக மாற்றிவிடுகின்றது.

அனர்த்தங்களின் பின்னர் அவ்விடத்திலேயே இருப்பதை தவிர்த்து எமது பிள்ளைகளை திறந்த வெளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஆக்கபூர்வமான விடயங்களை கேட்பதற்கு பார்ப்பதற்;கு வரைவதற்கு வழிப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும்.
அனர்த்தங்களால் பாதிப்பிற்குட்படும் பிரதேசங்களில் உள்ள சிறுவர்களின் பதினெட்டு வீதமானவர்களிடையே பிறழ்வான நடத்தைகள் இனங்காணப்பட்டுள்ளன. இவ்வாறன தாக்கங்கள் சமகாலச் சந்ததியினரை மாத்திரமின்றி புறட்லாண்ட் (டீரசயவடயனெஇ1998) அறிக்கையில் குறிப்பிடுவதைப் போன்று அடுத்தடுத்த தலைமுறையின் சமூகப் பொருளாதார விருத்திகளிலும் எதிர் மறைத்தாக்கத்திற்கு வழிவகுப்பதாக அமைந்து விடும்
போர்ச் சூழலில் (றயச-வiஅந) சூடு பட்டு துடி துடித்து இறந்ததை நேரடியாக கண்முன்னே கண்ட, நேரடியாக அருகிலிருந்த பார்த்த எம் உறவினர்கள் உளநல விடுதிகளில் புலம்பிக்கொண்டிருப்பதை பலராலும் காணக்கிடைத்திருக்கும்.

போர்க்காலத்தில் எம் தமிழ் இனத்தவர்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதை நாம் முழுமையாக அறிவோம். போரின் காரணமாக சொந்த, பிறந்த மண்ணில் மனையில் வாழாது தமது பெற்றோரை உறவினர்களை பிரிந்து புலம்பெயர் நாடுகளில் எமது தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுள் பலர் உளத்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு மன அழுத்தங்களுக்கு உட்பட்டு வெளிநாடுகளில் காலத்தை கடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பேரனர்த்தங்களை நேரடியாக அனுபவித்த எமது முதுசொம்களே மனதுக்குள் ஆயிரம் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு வயது முதிர்ந்த நிலையிலும் வாழ நினைக்கும் போது எம் இளைஞர் யுவதிகளாலும் ஏன் வாழ முடியாது. நாம் ஒவ்வொருவரும் விபரீதமான முடிவுகளை எடுக்காமல் நாமனைவரும் என்ன பிரச்சினைதான் ஏற்பட்டாலும் மரணத்தைத் தேடி போகாமல் மரணத்தைத் எதிர்பார்ப்பவர்களாக வரவேற்பவர்களாக இருக்கவேண்டும்.

இன்று இயற்கை மற்றும் செயற்கை பேரனர்த்தங்களை விட உலகமகா யுத்தத்தை விட நொடிக்கு நொடி உலகம் பூராகவும் ஆயிரம் மனிதர்கள் இறந்துகொண்டிருக்கின்றார்கள்.இலங்கையின் வடகிழக்கு மலையகப் பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில் மனிதர்கள் அழிக்கப்பட்டு காணமலாக்கப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றனர்.

வடக்கிலே போதைப்பொருள் வாள்வெட்டு கலாசாரமும் மலையகத்திலே திட்டமிட்ட கருச்சிதைவும் கிழக்கிலே ஏதனோல் உற்பத்தி நுண்கடன் தற்கொலையும் மனிதனை உயிருடன் விழுங்கிக்கொண்டிருக்கின்றது.

நாடு அபிவிருத்தியடைந்து வருவதாக தெரியவில்லை அபிவிருத்தியற்ற நாடாகவே வறுமையை நோக்கிச் செல்கின்றது. இலங்கையிலுள்ள மாகாணங்களுள் வடகிழக்கு மாகாணமே வறுமையான மாகாணத்தில் முதலிடத்தில் இருக்கின்றது. அபிவிருத்தி என்பது பாரிய கட்டிடங்களை தொழிற்சாலைகளை வீதி அபிவிருத்திகளை அமைப்பதல்ல. ஒவ்வொருவரினது கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் அபிவிருத்தி இருக்க வேண்டும். அபிவிருத்தி என்பது ஒரு பண்டமாகவோ கொள்வனவு செய்யக்கூடிய கேள்விகளை நிர்ணயிக்ககூடிய ஒரு விடயமாகவோ ஒரு போதும் இருந்துவிடக்கூடாது. அவ்வாறான நிலை சமகாலமாக ஏற்பட்டுக்கொண்டிருப்பதாக ஒவ்வொரு மாணவர்களும் பெற்றோர்களும் உணரத் தொடங்கியுள்ளனர். கல்வியும் சுகாதாரமும் வியாபாரமாகக்கூடாதென்பது ஒவ்வொரு தனி மனிதனது விருப்புமாக அமைகிறது. அரசாங்கம் மாணவர்களுக்கு இலஞ்ச ஊழலை கொடுப்பவர்களாக அதை ஊக்குவிப்பவர்களாக ஒருபோதும் இருந்துவிடக்கூடாது.

பேரனர்த்தங்கள் இயற்கையாகவோ செயற்கையாகவோ வரவேண்டும் என்ற அவசியமில்லை. காலத்துக்கு காலம் ஒவ்வொரு வடிவிலும் ஒவ்வொரு முறைமையிலும் மனிதர்களால் திட்டமிட்டு அனர்த்தங்கள் ஏற்படலாம் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அழியும் விளிம்பில் கிழக்கு கரையோரப் பிரதேசங்கள் இருந்துகொண்டிருக்கின்றது. ஆகவே அனர்த்தங்கள் ஒக்டோபஸ், முள்ளம்பன்றி, ஓணான் போன்ற ஒவ்வொரு வகையில் ஏற்பட்டாலும் அவ் அனர்த்தங்களை எதிர்கொள்பவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.
முற்றும்

பாக்கியராஜா மோகனதாஸ்
துறைநீலாவணை

By admin