ஐ.எஸ் வீழ்த்தப்பட்ட பிறகு இராக்கில் நடந்த முதல் கிறிஸ்துமஸ் பிராத்தனை

இராக்கில் ஐ.எஸ் அமைப்பு வீழ்த்தப்பட்ட பிறகு, முதல் முறையாக மொசூல் நகரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பிராத்தனை நடைபெற்றது.

ஐ.எஸ் ஆட்சி இருந்தபோது இங்கு பொதுவெளியில் கிறிஸ்துவ சடங்குகளை செய்வது என்பது ஆபத்தானது மற்றும் கடினமானது.

இங்கு வாழ்ந்த கிறிஸ்துவர்கள் இஸ்லாமிற்கு மதம் மாற வேண்டும் என ஐ.எஸ் அமைப்பு கட்டாயப்படுத்தியது. இவர்கள் வரி கட்ட வேண்டும் அல்லது சாவை எதிர்கொள்ள வேண்டும் எனவும் ஐ.எஸ் அமைப்பு மிரட்டியது. இந்த அடக்குமுறைகளால் பல கிறிஸ்துவர்கள் இங்கிருந்து தப்பித்து சென்றனர்.

கடந்த ஜூலை மாதம் இராக் படைகள் ஐ.எஸ் அமைப்பை மொசூலில் வீழ்த்தியது.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான 3 வருட சண்டையில் இராக் வெற்றிபெற்றதாக இந்த மாத தொடக்கத்தில் இராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி அறிவித்தார்.

மொசூலின் செயிண்ட் பால் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பிராத்தனை நடந்தபோது, தேவாலயத்தின் வெளியே ஆயுதம் தாங்கிய வாகனங்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தன.

மொசூல், ஈராக் அமைதியுடன் உலகில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பிராத்தனை செய்யுமாறு இராக் நாட்டின் கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் லூயிஸ் ரபேல் சகோ வேண்டுகோள் வைத்தார்.

ஐ.எஸ் வீழ்த்தப்பட்ட பிறகு மொசூலுக்கு திரும்பிய கிறிஸ்துவரான பர்காத் மால்கோ, ”கிறிஸ்தவ வாழ்க்கையைத் தொடர இங்கு பிராத்தனை நடத்துவது முக்கியம்” என கூறினார்.

செயின்ட் பால் தேவாலயம் தான் மொசூலில் செயல்படும் ஒரே தேவாலயம்.

2014-ல் ஐ.எஸ் அமைப்பு தீவிரமாக செயல்படுவதற்கு முன்பு, மொசூலில் 35,000 கிறிஸ்தவர்கள் இருந்ததாக தேவாலய தலைவர்கள் கூறுகின்றனர்.