புதிய பொருளாதார தடை, போருக்கான நடவடிக்கை’ வட கொரியா ஆவேசம்

அமெரிக்காவின் எந்தவொரு நகரத்தையும் தாக்குகிற ஆற்றல்வாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா கடந்த மாதம் ஏவி சோதித்தது.
இதையடுத்து அமெரிக்காவின் முயற்சியால் வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதிய பொருளாதார தடைகளை விதித்து நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றியது.

இதன் காரணமாக வடகொரியாவின் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி 90 சதவீத அளவுக்கு குறையும்; அந்த நாட்டுக்கான பெட்ரோலியப்பொருட்கள் ஏற்றுமதி ஆண்டுக்கு 5 லட்சம் பீப்பாய்களாகவும், கச்சா எண்ணெய் ஏற்றுமதி 40 லட்சம் பீப்பாய்களாகவும் குறைக்கப்பட்டு விடும்.

ஏற்கனவே பல பொருளாதார தடைகளால் நெருக்கடியில் சிக்கித்தவிக்கிற வடகொரியாவுக்கு இந்த புதிய பொருளாதார தடைகள் பேரிடியாக அமைந்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது நமது குடியரசின் இறையாண்மையை மீறிய செயல். இது கொரிய தீபகற்ப பகுதியிலும், பரந்த அளவிலும் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் அழிக்கிற போருக்கான நடவடிக்கை” என கூறப்பட்டுள்ளது.

மேலும், “அமெரிக்காவின் அணுசக்தி அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் விரோத நடவடிக்கைகளை ஒழிப்பதை அடிப்படையாகக் கொண்ட நமது சுய தற்காப்பு அணுசக்தி தடைகளை நாம் மேலும் பலப்படுத்துவோம்” எனவும் கூறப்பட்டுள்ளது.