சாய்ந்தமருதில் நேற்று(25) மாலை பதட்டம் நிலவியது. மு.கா. தலைவர் அங்கு வருகை தரவிருப்பதாகக்கூறி பலர் கறுப்புக்கொடி ஏந்தி ஒன்றுகூடினர். அதனால் அங்கு பலத்த பதட்டம் நிலவியது.
 நிலைமையைக்கட்டுப்படுத்த பொலிசார் குவிக்கப்பட்டனர்.
இதேவேளை சாய்ந்தமருதிலிருந்து முகா அடங்கிய ஜ.தே.க.வில் கல்முனை மாகரசபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலரின் விடுகள் சேதத்திற்குள்ளானதாக கல்முனை பொலிசில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதிமேயர் மு.கா.வேட்பாளர் பிர்தௌசின் வீடும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
சாய்ந்தமருது பள்ளிவாசலின் அண்மைய தீர்மானத்தின்படி அங்கு சுயேச்சை அணியொன்றே களத்திலிறங்கவேண்டும் எனக்கூறி வேட்பாளர் தெரிவும் இடம்பெற்று வேட்புமனுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு தற்போது தேர்தலில் நிற்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சாய்ந்தமருதிலிருந்து முகா ஜதேக வேட்பாளர்கள் மட்டுமல்ல மற்றுமொரு கட்சியில் 2ஆம் பட்டியலில் போட்டியிடும் முன்னாள் மேயரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகின்றார்கள்.
ஜதேக வேட்பாளர் யஹ்யாகான் கருத்துரைக்கையில்: தேர்தல் கேட்பது எமது ஜனநாயக உரிமை. அதனைக்கட்டுப்படுத்த காடையர்குழுவினர் முயறிசிக்கின்றனர். பொலிசார் உரிய களநிலைமையை ஏற்படுத்தவேண்டும்.

மு.கா. வேட்பாளர் பிர்தௌஸின் சாய்ந்தமருது வீட்டின் மீது தாக்குதல்; பெருங் கூட்டமாக வந்தோர் கை வரிசை!!

கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில், யானைச் சின்னத்தில் மு.காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். பிர்தௌஸின் வீடு மீது, இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெருங் கூட்டமாக வந்தவர்கள் தாக்குதல் நடத்தியதால், அந்தப் பகுதி சில மணி நேரம் பாரிய படத்துக்குள்ளானது.

இதன்போது பிர்தௌஸின் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வீட்டு வளவினுள் புகுந்து அங்கிருந்த பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி மன்றம் கிடைக்கும் வரை, எந்தவித அரசியல் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகம் முடிவு செய்துள்ளதோடு, கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, சுயேட்சைக் குழுவொன்றினையும் சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில், சாய்ந்தமருதிலிருந்து மு.காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் பிர்தௌஸ் உள்ளிட்ட சிலர் போட்டியிடுகின்றனர்.

இந்தப் பின்னணியிலேயே, பிர்தௌஸின் வீடு மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேற்படி பிர்தௌஸ் – கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சாய்ந்தமருதைச் சேர்ந்த மு.காங்கிரசின் மற்றுமொரு வேட்பாளரான ஏ.சி. எஹ்யான்கானின் அரசியல் அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அங்கிருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது.

மேற்படி தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

சம்பவத்தையடுத்து, தாக்குதலுக்குள்ளான இடங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

காரைதீவு  நிருபர் சகா

By admin