ரோஹித் சர்மா சாதனை சதம்; ராகுல் 89: இந்திய அணி 260 ரன்கள் குவிப்பு

இந்தூரில் இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இலங்கைப் பந்து வீச்சை மைதானம் நெடுக சிதறடித்து ரோஹித் சர்மா அதிவேக டி20 சத உலகசாதனையைச் சமன் செய்ய இந்திய அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது.

இன்னும் 4 ரன்கள் எடுத்திருந்தால் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ஸ்கோரான 263 ரன்களைக் கடந்து இன்னொரு சாதனையை நிகழ்த்தியிருக்கும், ஆனால் கடைசியில் விக்கெட்டுகளை இழந்ததால் இலங்கையின் 2-வது அதிகபட்ச டி20 ஸ்கோரான 260 ரன்களை இந்திய அணி சமன் செய்தது. ஆஸ்திரேலிய அணி 2016-ல் இலங்கைக்கு எதிராகத்தான் 263 ரன்களை எடுத்தது.

இலங்கை அணி தங்கள் அதிகபட்ச 260 ரன்களை கென்யாவுக்கு எதிராக 2007-ல் எடுத்தது, அந்தச் சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது. அதே போல் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்களுக்கான 21 சிக்சர்கள் சாதனையையும் இந்திய அணி சமன் செய்துள்ளது.

டாஸ் வென்று மீண்டும் இந்திய அணியை பேட் செய்ய அழைத்து தவறிழைத்தார் இலங்கை கேப்டன் திசர பெரேரா.

அவரது முடிவைத் தவறென்று நிரூபித்த ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் முதல் விக்கெட்டுக்காக 12.4 ஓவர்களில் 165 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதம் கண்டு டேவிட் மில்லர் உலக சாதனையைச் சமன் செய்து 43 பந்துகளில் 12 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 118 ரன்கள் விளாசி ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் 36 பந்துகளில் அரைசதம் கண்டு பிறகு 49 பந்துகளில் 5 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தோனி 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 21 பந்துகளில் 28 ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா 3 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 10 ரன்கள் எடுத்தும், ஷ்ரேயஸ் ஐயர் ரன் எதுவும் எடுக்காமல் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பெரேராவிடம் எல்.பி.ஆனார்.

தொடக்கத்திலேயே கே.எல்.ராகுல் கொடுத்த கேட்சை சமரவிக்ரமா பாயிண்டில் தவறவிட்டார். ரோஹித் சர்மா சதத்தை நெருங்கும் போது பவுண்டரிக்கு அருகில் மேலும் ஒரு கேட்ச் விடப்பட்டது.

மூன்றாம் தரப் பந்து வீச்சு, மைதானத்தில் எல்லைக் கோட்டின் தூரம் குறைவு, புல்டாஸ்கள், புல்லெந்த் பந்துகள், ஷார்ட் பிட்ச் பந்துகள் என்று லீக்மட்டத்தில் இருந்தது இலங்கையின் பந்து வீச்சு.

ரோஹித், ராகுல் அதிரடி:

இந்திய அணி ஆட்டத்தைத் தொடங்கியவுடன் மேத்யூஸ் வீசிய முதல் ஓவரில் ரோஹித் சர்மா 2 பவுண்டரிகளுடன் தொடங்கினார். 3-அது ஓவரில் மேத்யூஸ் 3 ரன்களையே விட்டுக் கொடுத்தார். இந்த ஓவரில்தான் ராகுலுக்கு சமரவிக்ரமா கேட்சை விட்டார். அடுத்ததாக சமீரா வீசிய ஓவரில் மேலேறி வந்தார் ராகுல் பந்து ஷார்ட் பிட்ச் ஆனாலும் ஷாட்டைத் தொடர்ந்து ஆடினார் மிட் ஆஃப் மேல் பந்து சிக்சருக்குப் பறந்தது, ஒருமுறை விராட் கோலி மட்டையைச் சுழற்ற போதிய இடமில்லாத பந்தை சிக்ஸ் அடித்ததை நினைவூட்டிய சிக்ஸ் ஆகும், இந்தத் தொடரின் சிறந்த சிக்ஸ் ராகுல் அடித்தது.

நுவான் பிரதீப் தன் முதல் ஒவரிலேயே 2 சிக்சர்களுடன் 17 ரன்களை விட்டுக் கொடுத்தார். தனஞ்ஜெயா தன் முதல் ஓவரில் ரோஹித்துக்கு 2 பவுண்டரிகள் 1 சிக்சர் கொடுக்க 6 ஓவர்களில் 59/0 ஆட்டத்தின் 9-வது ஓவரில் குணரத்னேயை ரோஹித் சர்மா ஸ்லாக் ஸ்வீப்பில் 104 மீட்டர் சிக்சை லெக் திசையில் விளாசினார், முன்னதாக மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ் அடித்து 23 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

அடுத்த 12 பந்துகளில் மேலும் 50 ரன்களை விளாசி 35 பந்துகளில் சதம் அடித்து தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லரின் சாதனையைச் சமன் செய்தார், அதிலும் திசர பெரேராவை எங்கு போட்டாலும் சிக்ஸ்தான் என்பது போல் 4 சிக்சர்களை அடித்து 34 பந்துகளில் 97 என்று வந்தவர் அடுத்ததாக மேத்யூஸை பளார் கவர் டிரைவ் மூலம் பவுண்டரி விரட்டி சதம் கண்டார். அதன் பிறகு சமீராவை சிக்ஸ், நான்கு, சிக்ஸ் பிறகு அவுட். 43 பந்துகளில் 12 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 118 ரன்கள் விளாசி ஸ்லோ பவுன்சரை ஷார்ட் தேர்ட்மேனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ராகுல் 89 ரன்களையும், தோனி 28 ரன்களையும் எடுக்க இந்திய அணி 260 ரன்கள் குவித்தது, மீண்டும் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பில்லாமல் போனது, 2 பந்துகள் மட்டுமே அவருக்குக் கிடைத்தது, இதில் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயஸ் ஐயர், பாண்டியா ஏமாற்றமளித்தனர். இந்திய அணி 260 ரன்கள் விளாசியது. இலங்கை அணியில் பிரதீப் அதிகபட்சமாக 4 ஓவர்களில் 61 ரன்களை வாரி வழங்கி  2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

முன்னதாக….

டி20 அதிவேக சதம்: சிக்சர் மழையில் உலக சாதனையை சமன் செய்தார் ரோஹித் சர்மா

இந்தூரில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 35 பந்துகளில் சதம் அடித்து தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லரின் அதிவேக டி20 சத உலக சாதனையைச் சமன் செய்தார் ரோஹித் சர்மா.

35 பந்துகளில் 11 பவுண்டரிகள் 8 மிகப்பெரிய சிக்சர்களுடன் 101 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லரின் 35 பந்து சத டி20 சத சாதனையைச் சமன் செய்தார்.

இந்தியாவைப் பொறுத்தவரை இதுதான் அதிவேக சத சாதனை. கே.எல்.ராகுல் 46 பந்துகளில் மே.இ.தீவுகளுக்கு எதிராக எடுத்த டி20 சதமே இந்திய டி20 அதிவேக சத சாதனையாக அமைந்தது. இவருக்கு அடுத்த படியாக ரெய்னா 59 பந்துகளில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2010-ல் சதம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி 11.2 ஓவர்களில் 148/0 என்று வெளுத்து வாங்கி வருகிறது. ராகுல் 33 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

ஆட்டத்தின் 11-வது ஓவரை திசர பெரேரா வீச அந்த ஓவரின் முதல் சிக்ஸ், விடப்பட்ட கேட்ச் ஆனது, ஆனால் அதே ஓவரில் எங்கு போட்டாலும் அடிப்பேன் என்று மேலும் 3 சிக்சர்களை விளாசினார். 97 ரன்களுக்கு வந்தார், பிறகு மேத்யூஸ் பந்தை கவர் திசையில் விளாசி 35 பந்துகளில் சதம் எடுத்து உலக சாதனையைச் சமன் செய்தார்.

கடைசியாக 42 பந்துகளில் 12 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 165/1